தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் வரும் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 80% திரைகளில் இப்படத்தை திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக பகுதிகளில் உள்ள திரையரங்குகள் குறிப்பிட்ட ஒருவர் அல்லது சிலர் கட்டுப்பாட்டில் இருப்பதால் படங்களை திரையிட மொத்தமாக அவர்களே ஒப்பந்தங்களை இறுதி செய்துவிடுகிறார்கள்.
படத்தின் விநியோகஸ்தருக்கு தேவையான முன் தொகையை அவர்களே கொடுத்துவிடுகின்றனர். அதற்கு சர்வீஸ் கட்டணமாக திரையரங்குக்கு கிடைக்கும் பங்குத்தொகையில் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை என்பதுடன், புதிய திரைப்படங்கள் தனது தியேட்டரில் ரிலீசானால் போதும். கேண்டின், பார்க்கிங் வருமானம் சேதாரம் இன்றி நமக்கு கிடைத்துவிடுகிறது என்று காலத்தை கடத்தி வருகின்றனர்.
இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பகுதியாக இருக்கிறது திருச்சி விநியோக பகுதி. இந்த பகுதியில் இருக்கும் திரையரங்குகள் குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனி நபர்கள் பலரிடம் பிரிந்து உள்ளது. இதனால் புதிய படங்களை திரையிடுவதில் போட்டி இருந்தாலும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
ஆனால் திருச்சி ஏரியாவில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் முகவராக வேலை பார்ப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற தோரணையுடன் தங்களை மிரட்டுவதாக கூறுகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
“அமைச்சர் உதயநிதியின் குடும்ப நிறுவனத்தின் அதிகாரிகள் திரையரங்க உரிமையாளர்களிடம் மரியாதை குறைவாக பேசுவதுடன், நான் சொல்வதை செய், கேள்வி கேட்காதே என அதிகார தொனியில் பேசுவது அவர்களுக்கு தெரியுமா?” என புலம்புகின்றனர்.
பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய இவர்கள் கேட்கும் முன் தொகையை கேட்டால் மயக்கம் வருகிறது என்கிறார் தஞ்சாவூரில் தியேட்டர் நடத்தி வரும் ஒருவர்.
“கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் மூலம் தஞ்சாவூரில் சுமார் 1 கோடி ரூபாய் பங்கு தொகையாக விநியோகஸ்தருக்கு கிடைத்தது. அதே தொகை அல்லது சற்று கூடுதலாக கேட்கலாம். ஆனால் 2.50 கோடி ரூபாயை முன் தொகையாக கேட்கிறார்கள். அது மட்டுமின்றி வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும். ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனை செய்ய வேண்டும் என்கின்றனர்.
அரசு அனுமதித்துள்ள அதிகபட்ச கட்டணம் 150 ரூபாய். அதற்குரிய ஜிஎஸ்டி, பஞ்சாயத்து வரி மட்டுமே கழிக்க வேண்டும். எஞ்சிய 100 ரூபாய்க்கு வரி பிடித்தம் செய்யக்கூடாது என கட்டளையிடுகின்றனர். தியேட்டருக்கு உரிமையாளர் நானா இல்லை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதிகாரிகளா என புரியவில்லை” என புலம்புகின்றனர் திருச்சி ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரத்தில்.
இது சம்பந்தமாக பி.சி.சென்டர்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்ட போது, ‘தஞ்சாவூர் பரவாயில்லங்க, பி.சி. சென்டர்களில் இருக்கும் தியேட்டர்களில் படத்தை திரையிட குறைந்தபட்சம் ஒரு தியேட்டருக்கு 15 லட்ச ரூபாய் கேட்கிறார்கள். இல்லை என்றால் படம் இல்லை என்கின்றனர்’ என்றனர்.
விநியோகஸ்தர்களிடம் இது பற்றி விசாரித்த போது, ’ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் படத்தை வெளியிடுவதால் எதிர்த்து பேச முடியாமல் திரையரங்கு உரிமையாளர்கள் தவிக்கின்றனர். அவர்களை எதிர்த்தால் தியேட்டர் தொழில் செய்ய முடியாமல் போய்விடும் என்கிற பயம்.
அதனால் கையறுநிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் இருப்பது உண்மைதான். இதனை வெளிப்படையாக சங்க தலைவர்கள், அல்லது சங்க கூட்டங்களில் பேசினால் தொழில்ரீதியாக நெருக்கடி கொடுப்பார்கள் என்பதால் ஆட்சிமாறும்வரை வேறு தொழில் செய்யலாம் என விநியோகஸ்தர்கள் தொழிலைவிட்டு ஒதுங்கிவிட்டனர். திரையரங்கு உரிமையாளர்கள் அப்படி ஒதுங்கவோ, தியேட்டரை மூடி வைக்கவோ முடியாது என்பதால் இவற்றையெல்லாம் சகித்து கொண்டு தொழில் செய்கின்றனர்.
மக்களுக்கான முதல்வராகவும், மக்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றிவரும் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எங்களுக்கு தொழில் சுதந்திரம் கிடைக்க ஆவண செய்வார்களா?” என்கின்றனர் ஏக்கத்துடன்.
இராமானுஜம்
யாத்திசை பார்த்த சீமான்: சொன்னது என்ன?
யூ-டர்ன் திமுக : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!