லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியானது. தமிழ் சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து 500 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள்.
இவர்களோடு குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உட்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம்பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்காக, முதல்பாகம் வெளியானபோது விளம்பரத்திற்காக படத்தில் நடித்த நடிகர்கள் கொடுத்த ஒத்துழைப்பு தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இருந்தது.
இரண்டாம் பாகத்துக்கும் அந்த ஒத்துழைப்பு தொடர்கிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் சுமார் பதினைந்து நாட்களை இப்படத்தின் விளம்பரப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர். இவர்களோடு அவ்வப்போது சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
சென்னையில் தொடங்கிய இந்த விளம்பரப் பயணம் டெல்லி, அதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இக்குழு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது இதற்காக தனிவிமானம் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான லைகா வாடகைக்கு எடுத்துள்ளது. அதற்கு மட்டும் சுமார் மூன்றுகோடி வாடகை என்று சொல்லப்படுகிறது.
இதுதவிர நடிகர் நடிகைகள் தங்கும் ஹோட்டல், மற்றும் உணவுசெலவு உதவியாளர்களுக்கான செலவு ஆகியவற்றுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கிறது லைகா நிறுவனம்.
படத்தை விளம்பரப்படுத்த எல்லா நடிகர்களும் முன்வந்திருப்பதே நல்ல விசயம் என்று தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதுவரை இந்திப்படங்களை விளம்பரப்படுத்த அப்படத்தின் நடிகர் நடிகைகள் தனி விமானத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர்.
தென்னிந்திய மொழி படங்களில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி-2 படத்திற்கு இந்தியா முழுவதும் செய்தியாளர்களை படக்குழு சந்தித்தது.
அதனை தொடர்ந்து ஆர் ஆர்ஆர், புஷ்பா, விக்ரம் படங்களை விளம்பரப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு தனி விமானத்தில் இந்தியா முழுவதும் சுற்றி வருவது இந்திய சினிமாவில் விவாதமாகி வருகிறது.
இராமானுஜம்
இயற்கை அழகுடன் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்: லிஸ்ட் இதோ!
அமெரிக்காவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’ !