நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகளே வந்து செல்லும் இளைய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களை காட்டிலும் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பொதுவெளியிலும், ஊடகங்களிடமும் அதிகமாக பேசியது நடிகர் பார்த்திபன்தான்.
ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் படம் சம்பந்தமான தகவல்களை பேச தொடங்கியுள்ளார் பார்த்திபன்.
விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு சாலையிலுள்ள தனியார் பள்ளியில் நேற்று(பிப்ரவரி 24) நடைபெற்ற ஆண்டு விழாவில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “மிகப்பெரிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் படம் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும். இரவின் நிழல் படத்திற்கு 120 விருதுகள் கிடைத்துள்ளது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டபோது, அதில் தோற்றுவிடுவோம் என்று நான் எண்ணவில்லை. உதவி இயக்குனராக பாக்கியராஜிடம் பணிபுரிந்து, இயக்குனராகி, அதன் பின்னர் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கியது போன்று, ஆஸ்கார் வாங்கவேண்டும் என்பது தான் எனது கனவு. சினிமாவில் பயிற்சியினால் தான் வந்துள்ளேன். அதுபோன்று இளைஞர்களும், பயிற்சி மேற்கொண்டு, தங்களின் கனவை அடைய வேண்டும்.
மிக உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தன்னடக்கத்தோடு இருப்பது முக்கியம். குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்காது. அதனால் நான் அட்வைஸ் செய்ய விரும்பவில்லை.
அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கவிட வேண்டும். என்னுடைய தந்தை தான் எனக்கு ரோல் மாடலாக இருந்தார். பூஜை அறையில் எனது தகப்பனார் போட்டோவை தான் சாமியாக வைத்து வழிபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இராமானுஜம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ்
வசூலில் ரூ.1000 கோடியை கடந்த ‘பதான்’!