எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?!
’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..’ என்று சில திரைப்படங்களின் உள்ளடக்கத்தைப் பார்த்து வியந்திருப்போம். அதன் கதை, திரைக்கதையில் பங்கேற்றவர்கள், இயக்குனரின் பார்வைக் கோணம், எளிதில் அவ்வுலகத்திற்கு அழைத்துச் செல்லும் நடிப்புக்கலைஞர்களின் மேதைமை போன்றவற்றை யோசித்து, சிலாகித்து, புலம்பியிருப்போம். ஒரு மொழியிலுள்ள வசை வார்த்தைகளைக் கொட்டிவிடும் அளவுக்குக் கூட, அந்த பாராட்டு எல்லை மீறுவதும் நிகழும்.
’எதுக்கு இந்த பில்டப்’ என்று கேட்கிறீர்களா? பசில் ஜோசப், லிஜிமோள் ஜோஸ், சஜின் கோபு நடிப்பில், ஜி.ஆர்.இந்துகோபன் – ஜஸ்டின் மேத்யூ எழுத்தாக்கத்தில், ஜோதிஷ் சங்கர் இயக்கியுள்ள மலையாளப் படமான ‘பொன்மன்’ பார்த்தபிறகு, மேற்சொன்னதே மனதில் தோன்றியது.
’பொன்மன்’ படத்தில் அப்படியென்ன இருக்கிறது? Ponman Malayalam Movie Review
கடன் தந்தவனின் வலி! Ponman Malayalam Movie Review

யதார்த்தத்தில் எளிதாகத் தீர்க்க இயலாத பிரச்சனையொன்றுக்குத் தீர்வு காண்பது தானே நாயகனின் பணி. ‘பொன்மன்’ படத்தின் கதையும் அப்படியொன்று தான். ஆனால், அதனைத் திரையில் விவரித்த விதம் தான் அப்படத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது.
நன்றாக வாழ்ந்து, தற்போது கொஞ்சம் நொடிந்த நிலையில் இருக்கிற ஒரு மீனவக் குடும்பம். தந்தை இல்லாத காரணத்தால் தாயே அனைத்தையும் கையாள வேண்டிய சூழல்.
மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள மாட்டேன் என்று மகன் சொன்னதால், வீட்டில் படகு சும்மாயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியொன்றில் தீவிரமான தொண்டராக அம்மகன் செயல்பட்டு வருகிறார். 32 வயதைத் தாண்டியும் அவரது சகோதரி திருமணமாகாமல் வீட்டில் இருக்கிறார்.
அப்பெண்ணுக்கு ஒரு வரன் வருகிறது. இறால் பண்ணையொன்றைக் கவனித்து வருகிற ஒரு நபரை ‘மாப்பிள்ளை’ என்கின்றனர். Ponman Malayalam Movie Review
அப்பெண்ணின் விருப்பத்தைக் கேட்காமலேயே திருமணம் முடிவாகிறது. கொஞ்சம் படித்தவராக மாப்பிள்ளை இருக்க வேண்டுமென்ற அப்பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட அந்த வரன் பூர்த்தி செய்வதாக இல்லை.
அந்த நேரத்தில், அப்பகுதி தேவாலய நிர்வாகத்தை சேர்ந்தவருடன் கைகலப்பில் ஈடுபடுகிறார் பெண்ணின் சகோதரர். அதனால், தலைமறைவாகச் சில நாட்கள் இருக்குமாறு கட்சி நிர்வாகிகள் சிலரால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்.
திருமணத்தன்று 25 சவரன் நகை இருக்க வேண்டுமென்பது மணமகன் வீட்டாரின் நிபந்தனை. மணமகளின் தாயாரும் சம்மதித்துவிடுகிறார். தலைமறைவாக இருக்கும் அவரது மகனோ, எப்படி நகைக்கு ஏற்பாடு செய்வது என்று தெரியாமல் திணறுகிறார். அப்போது கட்சியைச் சேர்ந்த சிலர் அவருக்கு உதவ முன்வருகின்றனர். நகைக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக, இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்கின்றனர். Ponman Malayalam Movie Review
திருமண நாளன்று அந்த நபர் வருகிறார். ஏற்கனவே வாட்ஸ் அப் வழியாக அப்பெண் தேர்வு செய்த நகைகளைக் காண்பிக்கிறார். ‘மொய் பணம் வந்தவுடனே என் காசை செட்டில் பண்ணிட்டு நகையை எடுத்துக்கோங்க’ என்பது அவரது நிபந்தனை.
மணமக்கள் முதலிரவு அறைக்குள் செல்லும் முன்பாக அனைத்தும் நிகழ வேண்டும் என்பதையும், பணம் குறைவாக இருந்தால் அதற்குரிய மதிப்புடைய நகைகள் மட்டுமே தரப்படும் என்பதையும் தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிவித்து விடுகிறார்.
திருமணம் நடந்தேறுகிறது. ஆனால், மணமகள் வீட்டார் எதிர்பார்த்ததை விட மொய் பணம் குறைவாக இருக்கிறது.
அதனால், ’12 சவரன் நகையை மட்டும் திருப்பி எடுத்துக்கறேன்’ என்கிறார் அந்த நகைக்கடை பணியாளர். ஆனால், வாக்குறுதி தந்தபடி மீதமுள்ள நகைகளை மணமகள் வீட்டாரால் திருப்பித் தர முடிவதில்லை.
அடுத்தநாள் காலையில், மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார் மாப்பிள்ளை.
‘நான் மாப்பிள்ளை ஊருக்கே போய் அந்த நகைய திருப்பி வாங்கிடுறேன்’ என்கிறார் அந்த நகைக்கடை ஊழியர். மணமகளின் தாய் ‘வேண்டாம்’ என்று கெஞ்ச, ‘முடிஞ்சா போய் வாங்கிக்க’ என்கிறார் அப்பெண்ணின் சகோதரர்.
காரணம், அந்த மாப்பிள்ளை வாழும் ஊர் அடிதடிக்குப் பெயர் போனது.
அது தெரிந்தபிறகு அந்த ஊருக்கு நகைக்கடை ஊழியர் சென்றாரா? இந்த கேள்விக்கு ‘ஆம்’ என்றே பதில் சொல்கிறது திரைக்கதை.
‘அவனை சண்டை செஞ்சு ஜெயிக்க முடியாது’ என்று அந்த ஊரே மிரள்கிற மணமகனிடம் இருந்து, ’இவன்லாம் அவன் முன்னால ஒரு ஆளே இல்லை’ என்று சொல்கிற அளவுக்குப் பெரிதாக உடல் வலுவில்லாத அந்த நகைக்கடை பணியாளர் மீதமுள்ள நகைகளைத் திரும்ப வாங்கினாரா, இல்லையா என்று சொல்கிறது ‘பொன்மன்’ படத்தின் மீதி.
மேற்சொன்ன கதையைக் கேட்டவுடன், ’ஒரு கல்யாண வீட்டை வச்சு மொத்த படத்தையும் முடிச்சுட்டாங்களா’ என்ற சலிப்பு வரலாம். அதனை மீறி, கடன் தந்தவரின் வலி எப்படியிருக்கும் என்பதை அந்த நகைக்கடை பணியாளர் பாத்திரம் மூலம் தெரியப்படுத்திய வகையில் இப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரவல்லதாக மாறியிருக்கிறது.
தங்கம்.. தங்கம்..! Ponman Malayalam Movie Review

’தங்கம்.. தங்கம்..’ என்று அதன் மீதான மனிதர்களின் மோகம் குறித்து உலகம் முழுக்கப் பல படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ‘அட்வெஞ்சர் ஆக்ஷன்’ வகைமையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மனித உணர்வுகளின் வலி, வேதனை, துக்கத்தைச் சொல்கிற ‘ட்ராமா’ வகை படங்களும் குறிப்பிட்ட அளவில் வந்திருக்கின்றன.
மலையாளத்தில் கூட ‘தங்கம்’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் அப்படிப்பட்டவையாகத் திகழ்கின்றன. அந்த வரிசையில் ‘கிரீடம்’ சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ‘பொன்மன்’.
இப்படத்தின் மிகப்பெரிய பலம் ஜி.ஆர்.இந்துகோபன், ஜஸ்டின் மேத்யூவின் எழுத்தாக்கம்.
முதல் இருபது நிமிடங்கள் வரை ‘என்னடா படம் இது’ என்று எண்ண வைக்கும் அளவுக்குச் சாதாரணமாகத் தெரிகின்றன சில காட்சிகள். ஆனால், நகையைத் திருப்பித் தர முடியாத நிலைக்கு மணமகள் ஆளாக நேரிட்ட பிறகு திரைக்கதை வேகமெடுக்கிறது. கிளைமேக்ஸ் காட்சி வரை அந்த பரபரப்பை ‘மெயிண்டெய்ன்’ செய்திருப்பதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
இயக்குனர் ஜோதிஷ் சங்கர் இப்படத்தின் வழியே கொல்லம் வட்டாரத்தில் வாழும் சில மனிதர்களைத் திரையில் காட்டியிருக்கிறார். அந்த விவரணை வீரியமாக அமைந்திருப்பது சிறப்பு.
டைட்டிலுக்கு முன்பாக ’இப்படம் முழுக்க கற்பனையே. எந்தவொரு மனிதரையோ, இடத்தையோ இப்படம் தழுவி அமைக்கப்படவில்லை’ எனும் தொனியில் பொறுப்பு துறப்பினை வெளியிட்டிருக்கிறது படக்குழு. Ponman Malayalam Movie Review
ஆனாலும், ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த மனிதர்களைத் திரையில் இழிவாக காட்டியிருப்பதாக விமர்சிக்கும் அளவுக்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது ஒரு குறையே. அது எதிர்விமர்சனங்களை ஏற்படுத்துமா என்பது அடுத்த வாரங்களில் தெரிந்துவிடும்.
இது போகச் சில லாஜிக் மீறல்கள் நம் கண்களில் படும். ஆனால், ‘சினிமாத்தனத்திற்கான சுதந்திரம்’ என்று அவற்றைப் புறக்கணித்துவிட வேண்டும்.
ஜஸ்டின் வர்கீஸின் பின்னணி இசை, காட்சிகளில் இருக்கும் குமுறலை, அழுகையை, வேட்கையை நமக்குக் கடத்தி விடுகிறது. Ponman Malayalam Movie Review
‘கொல்லம் கண்டோடா இனி இல்லம் காணண்டா’ என்று கொல்லம் நகரத்தின் பெருமைகளைப் பாடும் டைட்டில் பாடலே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறது. பிறகு வருகிற கல்யாணப் பாடல் தொடங்கி அனைத்து பாடல்களுமே சட்டென்று ஈர்க்கிற ரகம்.
இயக்குனர் ஜோதிஷ் சங்கருடன் இணைந்து ரஞ்சித் கருணாகரன் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பினைக் கையாண்டிருக்கிறார். இரண்டு மீனவ கிராமங்கள், சிறிய நகரப் பின்னணி, கூடவே இறால் பண்ணை, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், சில லாட்ஜ்கள் என்று இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் களங்கள் வழியே ’இதுவே யதார்த்தம்’ என்று எண்ண வைத்திருப்பது இதன் சிறப்பு. கிரிபேஷ் அய்யப்பன்குட்டி இதில் கலை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.
சானு ஜான் வர்கீஸின் ஒளிப்பதிவானது, கதை நிகழும் களங்களை இயல்பாகத் திரையில் காட்ட உதவியிருக்கிறது.
நிதின் ராஜ் அரோலின் படத்தொகுப்பானது கண்களைக் கொஞ்சமும் அச்சுறுத்தாமல் திரையில் கதையொன்றைச் சொல்கிறது.
இந்தப் படத்தைக் கண்டபிறகு, பசில் ஜோசப்பின் ‘ஸ்கிரிப்ட் செலக்ஷன்’ குறித்து பிற நாயக நடிகர்களுக்குப் பொறாமை எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.
ஹீரோயிசமே இல்லாத கதையில் அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல்கள் கிடைக்கின்றன. ‘பசிலேய்..’ என்ற கூக்குரல்கள் எழுகின்றன. காரணம், இப்படியொரு கதையிலும் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பினை அறிந்திருக்கும் அவரது சினிமா அறிவுதான். அதற்குரிய வெற்றியைத் தந்திருக்கிறது இப்படம்.
’மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘கட்டப்பனையில ஹ்ருத்திக்ரோஷன்’ படங்களிலேயே லிஜிமோள் ஜோஸின் ரசிகனான எனக்கு, இப்படத்தில் அவரது நடிப்பு வியப்பைத் தரவில்லை. கிளைமேக்ஸ் ஷாட்டில் அவர் வெளிப்படுத்தும் புன்னகை ‘ஆவ்சம்’.
நாயகியின் சகோதரராக வரும் ஆனந்த் மன்மதனுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. மனிதர் அசத்தியிருக்கிறார்.
இன்னும் தீபக் பரம்போல், ராஜேஷ் சர்மா உட்படப் பலர் இதில் மிகச்சில காட்சிகளில் தோன்றி நம்மை ஈர்க்கின்றனர். Ponman Malayalam Movie Review
நாயகியின் தாயாக வரும் சந்தியா ராஜேந்திரன், ஜெய குரூப் உட்படப் பெண் பாத்திரங்களை ஏற்றவர்களுக்கான காட்சிகள் திரைக்கதையில் குறைவு என்றபோதும், அவர்களுக்கான முக்கியத்துவம் ‘ஓகே’ ரகத்தில் உள்ளது.
இந்தப் படத்தில் வில்லனாகத் தோன்றியிருக்கும் சஜின் கோபு, ‘ஆவேஷம்’ படத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்தியவர். இதில் மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார்.
’கனெக்ட்’ ஆகும் இடங்கள்! Ponman Malayalam Movie Review
இதற்கு மேல் சொல்லப்படுகிற விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும் என்பதால், ‘அது வேண்டாமே’ என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
இப்படத்தில் நம்மைத் திரையோடு பிணைக்கிற சில காட்சிகள் உண்டு. அவை பின்னணி இசை மூலமாகவோ, குளோஸ் அப் அல்லது இதர ஷாட் வகைமையின் வழியாகவோ, திரைக்கதையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படவில்லை. போகிற போக்கில் அது போன்ற விஷயங்களை இடைச்செருகலாகச் சொல்லிச் செல்கிற பாங்குதான் ‘பொன்மன்’ படத்தின் சிறப்பு.
ஒரு காட்சியில், முதலிரவுக்காக ஒதுக்கப்பட்ட அறையின் ஜன்னலை நோக்கி நாயக பாத்திரம் வேகமாக வரும்போது, மணமகளின் தாயார் குறுக்கே வந்து கையெடுத்துக் கும்பிட்டவுடன் அவர் ஸ்தம்பித்து நின்றுவிடுவார். பின்னணியில் மணமக்களின் முனகல் ஒலி கேட்கும்.
‘இனி நான் எதுக்கு வாழணும்’ என்று மணமகளின் சகோதரன் கதறியழுகிற காட்சியில், ‘ஏண்டா இப்படி இருக்கிறீங்க’ எனும் தொனியில் நாயகன் பேசுகிற வசனம் எவரையும் ‘மோட்டிவேஷன்’ கொள்ள வைக்கும். Ponman Malayalam Movie Review
‘இக்கட்டான நிலைமையில நாம மாட்டியிருக்கிறதை புரிஞ்சுக்க மாட்டேங்குறானே’ என்று நாயகனைப் பார்த்து நறநறக்கும் மணமகளின் குடும்பத்தினர் ஒருகட்டத்தில் ‘இவனும் நம்மைப் போலச் சாதாரணமானவனே’ என்றுணர்கிற காட்சி நம் கண்களில் நீர் கசிய வைக்கும்.
இவையனைத்தையும் தாண்டி ‘ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படத்தில் ஒரு காதல் காட்சியும் உண்டு. அதுவும் கூட, திரைக்கதையில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.
அதனை முன்கூட்டியே உணர்ந்தவர்களின் மனம் ‘அட, இது ரொமான்ஸ் மாதிரில்லா இருக்கு’ என்று பிறாண்டுவது நிச்சயம். அதற்கான பதிலாக, இப்படத்தின் இறுதி ஷாட் அமைந்திருக்கிறது.
அதனைப் பார்த்து முடித்தபிறகு ஒருவகையான திருப்தி மேலெழுந்தால், ‘பொன்மன்’ படம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்! Ponman Malayalam Movie Review