இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன்.
படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் கோயம்புத்தூரை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு போஸ்டரில் ஜி.டி. நாயுடு போன்ற ஒரு நபர் கார் ஒன்றுக்கு முன்பு நிற்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை எல்லோரும் புதிய படம் ஒன்றுக்கான அறிவிப்பு போஸ்டர் என கடந்துபோவது வழக்கம்.
நடிகர், எழுத்தாளர், கவிஞர்,ஓவியர் என பன்முகம் கொண்ட பொன்வண்ணன் எதிர்கால சினிமா, சினிமாவில் வேலை இழப்பு, டிசைன் வடிவமைப்பதில் புதிய மாற்றங்கள், அதற்கான செலவு குறைவு என பல்வேறு விஷயங்களை தொலைநோக்கு பார்வையுடன் தனது கருத்தை அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பதாவது
எனது சிறு வயதில் பிரமிப்பான மனிதராக ,,
கோவையை சார்ந்த G.D நாயுடு அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
அந்த பிரமிப்பும் மரியாதையும் இன்று வரை..
அவரைத் தொடர்கிறது..!
அவரின் வாழ்க்கையை திரைப்படமாக்க யாராவது முயற்சிக்கலாம் என பல சமயங்களில் நண்பர்கள் மத்தியில் ஆசைப்பட்டு பேசியிருக்கிறேன்..
இன்று மாதவன் அவர்கள் இந்த விளம்பரம் வழியாக எனது ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்..மகிழ்ச்சி
படைப்புக்கு வாழ்த்துகள்..!
அத்தோடு..
இந்த விளம்பரம் முழுக்க முழுக்க ..சமீபத்திய தொழில் நுட்பப் புரட்சியான AI (artificial intelligence) மூலமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என உணர்கிறேன்..!
வருங்காலத்தில் திரைத்துறை..புகைப்படத்துறை..
இஞ்சியனிரிங்.. விளம்பரத்துறை உட்பட ..
பல்வேறு துறைகளில் இதனது ஆளுமை உச்சத்தில் இருக்கப்போகிறது..
இதனால் படைப்பு உலகம் பிரமிப்பாக மாறும்..!
அதேசமயம் –
நடைமுறையில் உள்ள, மேற்கண்ட துறை சார்ந்த தொழில் நுட்ப கலைஞர்களும், அவர்கள் சார்ந்த துறைகளும் பெரும் பாதிப்படையப்போகிறது என்பது உறுதி..!
இன்று நம் முன் உள்ள அனைத்து தொழி்ல் நுட்பங்களும் இப்படி பாதிப்பில் உருவானதுதான் என்றாலும்.. இதனது பாதிப்பு எல்லை கடந்தது..!
உதாரணத்திற்கு இந்த புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் –
இந்த டிசைனுக்குள் இருக்கும் பொருட்கள்.. கார், லைட்.. மனிதர்கள் உட்பட தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது..!
ஆனால் இதை நேரடியாக இன்று உருவாக்க வேண்டியிருந்தால் –
பழைய கார்.. அதற்கான வாடகை.. ஒருநாள் படப்பிடிப்பு அரங்க வாடகை.. புகைப்பட கருவி.. லைட்ஸ்.. ஆர்ட் டைரக்டர்.. நடிகர்.. டிசைனர் என பல துறை கலைஞர்களின் உழைப்பைக் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்து உருவாக்குவார்கள்..!
அப்படி உழைக்கும் பலரின் வாய்ப்புகள் அனைத்தும் இப்போது தவிர்க்கப்பட்டு –
ஒரு கலைஞனால் தனிமனிதனாக AI என்ற தொழில் நுட்பத்தைக் கொண்டு தனி அறையில் இதை உருவாக்கிட முடிகிறது என்றால்.. இந்த தொழில் நுட்பத்தின் வீரியத்தினால்
வருங்காலத்தில் எவ்வளவு கலைஞர்களும்.. இளைஞர்களும் வாய்ப்புகளற்று பாதிப்படைவார்கள் என்பது கவலை கொள்ளவைக்கிறது..!
எனவே.. இந்த மாற்றத்திற்காக தீவிரமாக தேடுதல் கொண்டு-அனைத்து துறை சார்ந்தவர்களும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
தவிர்த்தால் வாழ்வியலில் வாய்ப்புகளின்றி பெரும் பொருளாதார சவால்களை சந்திக்கவேண்டிவரும்..!
வாழ்த்துகளும் அன்புகளும்..!
எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராமானுஜம்