தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே 1967 முதல் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. சினிமாவிற்கு தான் எழுதிய வசனங்கள் மூலம் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திராவிட அரசியல் பேசினார். அது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த திமுக ஆட்சிக்கு வருவதற்கு ஏணிப்படியாக இருந்தது.
அதன் பின்னர் தமிழகத்தை அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தேர்தல் காலங்களில் திரை கலைஞர்களை தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொண்டன.
தனியார் தொலைக்காட்சி இந்தியாவில் தொடங்க அனுமதிக்கப்பட்டு, தமிழில் சன், ராஜ், ஜெயா, விஜய் தொலைகாட்சிகள் தங்களது ஒளிபரப்பை தொடங்கியபோது திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமை பிரதானமாக தேவைப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. படங்கள் வாங்குவதில் போட்டி இருந்தாலும் படத்திற்கான விலையை தீர்மானிப்பதில் இவர்களுக்கிடையில் ஒற்றுமை இருந்தது என தயாரிப்பாளர்கள் கூறியது உண்டு.
இந்த சூழ்நிலையில் சன்பிக்சர்ஸ் தமிழ் திரைப்பட தயாரிப்பில் நேரடியாக ஈடுபட தொடங்கிய பின் புதிய படங்களை வெளியிடுவதற்கு நெருக்கடி ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் மற்ற நிறுவனங்கள் தயாரித்த படங்களை விநியோக உரிமை வாங்கி வெளியிட தொடங்கியபோது பெரும்பான்மையான பெரும் முதலீட்டு படங்களை அந்நிறுவனம் மூலமாக வெளியிட்டால் அதிக எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைத்தது. போட்டிக்கு வேறு படங்களை வெளியிட கூடாது என்பது அறிவிக்கப்பாடாத அமுல்படுத்தப்பட்ட சட்டமாகவே இருந்தது.
உதயநிதி முழு நேர அரசியல்வாதியாகி, தமிழ்நாடு அமைச்சரான பின்பு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் ஆதிக்கம் குறைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் மூலமாக வெவ்வேறு பெயர்களில் படங்களை ரிலீஸ் செய்து வந்ததாக கூறப்பட்டது.
திரையுலகில் தங்களுக்கு எதிரான நிலையில் அரசியல் பேசுபவர்கள், அரசியல் கட்சி தொடங்கும் ஆசையில் இருப்பவர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளியாகும் போது ரெட் ஜெயண்ட் புதிய படங்களை வெளியிட்டு தியேட்டர் ஒப்பந்தம் செய்வதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் என கூக்குரல் எழுந்தது.
அப்படி ஒரு நெருக்கடி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்திற்கும் ஏற்பட்டது. அதே நாளில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோக உரிமை பெற்றிருந்த துணிவு திரைப்படத்திற்கு அதிக திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாரிசு படத்திற்கு குறைவான திரைகள் கிடைக்குமாறு செய்யப்பட்டது. இதனால் அப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூலில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சூலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு இயக்குநர் பா.ரஞ்சித் நினைவேந்தல் பேரணி நடத்தினார். தொடர்ச்சியாக ஆளும் திமுக அரசினை விமர்சித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விளம்பர பணிகளை சூலை 23 ஆம் தேதி முதல் பா.ரஞ்சித், விக்ரம் இருவரும் தொடங்கியுள்ளனர்.
இதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படக்குழு பங்கேற்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15 அன்று தங்கலான் படத்தின் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதும் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்துக்கொண்டு இருந்த பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு தெரிவித்தது. தற்போது அந்தகன் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பிடிஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில்ரிலீஸ் செய்கின்றது.
பா. ரஞ்சித்துக்கு நெருக்கடி கொடுக்கவே தங்கலான் படத்திற்கு எதிராக டிமான்டி காலணி 2 படத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரிந்து கொண்ட உதயநிதி, வாரிசு படத்திற்கு எதிராக துணிவு படத்தினை ரிலீஸ் செய்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையை விடவும் துணிவு படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் அதிகம். இதேநிலை தங்கலான் படத்திற்கும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அடுத்து வரும் மாதங்களில் வெளியாக உள்ள கோட், அமரன், வேட்டையன், தக்லை ஃப், விடாமுயற்சி, ஆகிய முண்ணனி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் அந்நிறுவணத்தை சார்ந்தவர்களே வெளியிட உள்ளனர்.
இதனால் திரையரங்குகள் தரப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கூறுவதற்கும், அவர்களது படங்களுக்கு திரையரங்கு ஒதுக்கீடு செய்வதற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுப்பார்கள். இதனால் அந்தகன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ரகுதத்தா இரண்டு படங்களும் தங்கலான் படத்திற்கு அதிக நெருக்கடி கொடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் பா.ரஞ்சித் தரப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த டிமான்டி காலனி – 2 படத்தின் அதிரடியான டிரைலைரை நேற்று மாலை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் 15ல் படம் திரைக்கு வருகிறது என அறிவித்தனர்.
இதனால் தமிழ்சினிமா விநியோகம், திரையிடல் அரசியல் காரணங்களுக்காக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் மீண்டும் கையில் எடுக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது என்கிறது தமிழ்சினிமா வட்டாரம்.
படைப்பு ரீதியாக தங்கலான், டிமான்டி காலனி இருபடங்களும் வெவ்வேறு கதை களம் கொண்டது. படத்தின் இயக்குநர்களும், நடிகர்களும்(அருள்நிதி, விக்ரம்) படைப்புகளை உருவாக்குவதில் தீவிரமானவர்கள். கதாபாத்திரத்திற்கு தங்களை முழுமையாக அர்பணிப்பவர்கள். ஆனால் அரசியல் இரு தரப்பையும் நேரடியாக மோத வைக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படமும், விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா படமும் நேருக்கு நேர் மோதின. அப்போது அது இயல்பான போட்டியாக பார்க்கப்பட்டது.
இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் வெற்றி பெறவில்லை. தற்போது அவர்கள் மீண்டும் இந்த ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி வெவ்வேறு கதாநாயகர்கள் நடித்த படங்களின் மூலம் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
ஜெயிக்க போவது படைப்பா? பழிவாங்க துடிக்கும் அரசியலா? சினிமா பார்வையாளன் ஆதரவு யாருக்கு என்பதற்கு ஆகஸ்ட் 15 வரை காத்திருப்போம்.
– அம்பலவாணன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தமா… சாப்பிட்ட பிறகு சிறு நடை செல்லுங்கள்!
பியூட்டி டிப்ஸ்: அக்குள் பகுதியில் கருமை… காரணம் இதுதான்!
டாப் 10 நியூஸ் : தமிழகம் வரும் ம.பி. முதல்வர் முதல் படப்பிடிப்புகள் ரத்து வரை!
கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்