சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக இன்று (ஜூன் 22) இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகம் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.
ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம், முதல் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, விமான நிலைய ஆணையகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ரூ.1.24 கோடி கட்டணம் செலுத்தி முன் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அங்கு பைலட்டுகள், விமான பணிப்பெண்கள், ராணுவ அதிகாரிகள், காவலர்கள், பயணிகள் போன்று வேடமணிந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே அனுமதியளிக்கப்பட்ட பகுதியை விட்டு பிற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதன் காரணமாக, விமான நிலைய அதிகாரிகள் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள படக்குழு, அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் 4வது நாளாக இன்று இந்தியன்-2 படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பாக இயங்கி வரும் விமான நிலையத்தின் 4வது முனையத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதை முன்னிட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக மனு!
”ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை”-அமைச்சர் தங்கம் தென்னரசு