காலை இளையராஜா; இரவில் ஏ.ஆர். ரகுமான்: கவிஞர் யுகபாரதியின் சிலிர்ப்பு அனுபவம்!

சினிமா

காலையில் இளையராஜா, இரவில் ஏ.ஆர். ரகுமான் என இருபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவத்தை தனி நாவலாகவே எழுதத் தோன்றுவதாக கவிஞர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் திரைப்படத்தில் இடம்பெற்ற ’பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ என்ற அழகான பாடல் மூலம் தமிழ்சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் யுகபாரதி. அதனைத்தொடர்ந்து எண்ணற்ற படங்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதிக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்சினிமாவின் மூத்த இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் சிலிர்ப்புடன் இன்று (மே 13) பதிவிட்டுள்ளார்.

அதில், “இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ஒருங்கிணைப்பில் வெளிவரவுள்ள MODERN LOVE CHENNAI தொடரில் இடம்பெற்றுள்ள பதிமூன்று பாடல்களில், பதினொரு பாடல்களை நான் எழுதியுள்ளேன்.

ஒரே நேரத்தில் இளையராஜா, யுவன்ஷங்கர், ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய நால்வருடனும் இணைந்து பணியாற்றியது அரிய அனுபவம்.

இப்பாடல்கள் உருவாகிக்கொண்டிருந்த அதே சமயத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜின் `மாமன்னன்’ பாடல்களும் எழுதும்படி ஆயிற்று.

காலையில் இளையராஜா, இரவில் ஏ.ஆர். ரகுமான் என இருபெரும் ஆளுமைகளுடன் பழகி, பாடல் பணிகளை மேற்கொண்ட விதத்தையும் அப்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் தனி நாவலாகவே எழுதத் தோன்றுகிறது.

பெரிதினும் பெரிது செய்ய காத்திருத்தல் அவசியம். அவர்களின் உரையாடல்கள் உற்சாகப்படுத்தின. சமூக ஊடகங்களை அவர்கள் இருவருமே லேசான புன்னகையுடன் கடந்துவிடுகிறார்கள்.

ஒரே விஷயத்தை இருவரும் இருவேறு கோணத்தில் பார்ப்பதைப் பின்னர் விவரிக்கிறேன்.

செயல்களின் வழியேதான் அனுபவங்கள் சித்திக்கின்றன. அந்த அனுபவங்கள் மூலம் வரலாற்றின் மெல்லிய நகர்வுகளை அருகிருந்து பார்க்கும் நல்லதொரு வாய்ப்பினை காலம் தொடர்ந்து எனக்கு நல்கி வருகிறது.

கடந்து மூன்று மாதங்களில் நாற்பத்து மூன்று பாடல்களை எழுத முடிந்தது.

poet yuga barathi penned experience with rahman and ilaiyaraja
கவிஞர் யுகபாரதி

ராஜூமுருகனின் ’ஜப்பான்’, அஸ்வினின் ‘மாவீரன்’, கெளதம்ராஜின் `கழுவேத்தி மூர்க்கன்’ என படங்களின் வரிசையும், பாடல்களின் எண்ணிக்கையும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

குமாரராஜாவுடன் பணியாற்றிய அனுபவத்தை என் வாழ்நாள் வசந்தமாகவே கருதுகிறேன்.

இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விரும்புவதை அல்லது எதிர்பார்ப்பதைத் தரமுடியும் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுக்கிறது.

என்னை வழிநடத்தும் தோழர்களுக்கும், இலக்கிய பிரதிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல பாடலாசிரியர் மீது காதலி பரபரப்பு புகார்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *