என் உச்சி மண்டையில கிர்ருங்குது…-மூக்குப் பொடிக்கு நன்றி சொன்ன கவிஞர் அண்ணாமலை!

Published On:

| By Prakash

திரையுலகில் பல பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை, நடிகர் விஜய் படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் உச்சம் தொட்டார்.

‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது’ என இளைய தளபதி விஜயையே தன் வித்தியாசமான பாடல் வரிகளால் கவரவைத்து, பின் திரையுலகில் தனக்கென ஒரு விலாசத்தை அமைத்துக்கொண்டவர், பாடலாசிரியர் அண்ணாமலை. இன்று அவர், நம்முடன் இல்லையென்றாலும், அவர் எழுதிய வரிகள் என்றும் நம்மை தலையாட்டவைக்கின்றன. பல ஆளுமைகளை உருவாக்கிய பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற அண்ணாமலை, ‘சுரேசன்’ என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் ஏராளம்.

பத்திரிகையாளராய் பணியைத் தொடர்ந்த அண்ணாமலை, முதலில் பல சீரியல்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தார். பின்னர் புதுவயல் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கும்மாளம், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்பட ஏராளமான படங்களுக்கு எழுதினார். ஆனாலும், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வந்த ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாடல்தான் இவரைப் பிரபலப்படுத்தியது.

அந்தப் பாடல் வெளிவந்தபிறகு, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல இளைஞர்களும் இவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினர். என்றாலும் மறுபுறம் ’என்னங்க இப்படி ஒரு வரிய எழுதியிருக்கீங்கனு’ கேட்டு விமர்சனம் செய்தவர்களும் அதிகம். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “இலக்கணம் மாறாமல் வித்தியாசமான வார்த்தைகளை விரும்பக்கூடியவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அந்த வகையில்தான் இந்தப் பாடலை எழுதினேன்” என தன் நண்பரும் கவிஞருமான மகுடேசுவரனிடம் தெரிவித்துள்ளார், அண்ணாமலை.


“அதுகுறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என கவிஞர் மகுடேசுவரன் கேட்க, அந்தப் பாட்டு பிறந்த கதையை சிரித்தபடியே சொல்லியிருக்கிறார், அண்ணாமலை.
“அந்தப் பாட்டுக்காக நானும், விஜய் ஆண்டனி சாரும் ஒருநாள் கம்போசிங்கில் உட்கார்ந்திருந்தோம். அப்போது எழுத ஒன்றும் தோன்றவில்லை. உடனே விஜய் ஆண்டனி சார், ‘இன்று இரவு முழுதும் பாட்டெழுதிக்கிட்டே இரு’ என்று சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குப் போயிவிட்டார். அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோ சாவியும் என்னிடமே இருந்தது. பாடல் எழுதும் நோக்கத்தில் இருந்ததால், நள்ளிரவு கடந்தது தெரியவில்லை.

அந்த நேரத்தில், ஒரு சிகரெட் அடித்துவிட்டு வந்து பாடல் எழுதலாம் என வெளியில் வந்தேன். கடை எதுவும் இல்லை. தூரத்தில் ஒரு பெட்டிக்கடை மட்டுமே திறந்திருந்தது.
அந்தக் கடைக்காரரிடம் சென்று சிகரெட் கேட்டேன். அவர், ’சிகரெட் இல்லை’ என்றார். ’வேறு என்ன இருக்கிறது’ என நான் அந்தக் கடைக்காரரிடம் கேட்க, அவரோ, ‘மூக்குப்பொடிதான் இருக்கிறது’ என்றார். ‘சரி, அதைக் கொடு’ என வாங்கிவந்து ஸ்டூடியோவுக்குள் உட்கார்ந்தேன்.

இதற்கு முன்பு, மூக்குப்பொடி போட்டு எனக்குப் பழக்கமில்லை. அதனால், அதை எனக்கு எவ்வளவு உபயோகிக்க வேண்டும் என தெரியாமல் கொஞ்சம் அதிகமாக எடுத்து மூக்கில் உறிஞ்சிவிட்டேன். அவ்வளவுதான், அடுத்த நொடி, அந்த மூக்குப்பொடி என் உச்சித் தலையில் ஏறியது. அது, சுர்ர்ர் என்று ஏறியதன் விளைவே, இந்த வரி எனக்குக் கிடைத்தது. மூக்குப் பொடிக்குதான் நன்றி சொல்லணும்” என கவிஞர் மகுடேசுவரனிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார். ஆக, இந்தப் பாடல் தோன்றிய காரணம் வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். ஆனால், இந்த ஒரு பாடல் மூலம் சினிமாவின் உச்சிக்குச் சென்றார், அண்ணாமலை.

ஜெ.பிரகாஷ்