போயஸ்கார்டனில் வீடு வாங்கியது இவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய பேச்சாகும் என்று தெரிந்திருந்தால் வாங்கியிருக்கவே மாட்டேன் என நடிகர் தனுஷ் பேசி உள்ளார்.
தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செலவராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய தனுஷ், “முதல் படத்தில் நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவே வில்லை. அவ்வளவு கிண்டல்கள், கேலிகள், அவமானங்கள், துரோகங்கள் என அனைத்தையும் தாண்டி இங்கே நிற்கிறேன். அதற்கு உங்கள் கைத்தட்டல் தான் காரணம். ஒல்லியாக, கருப்பாக இருந்த என்னிடம், எப்படி நீங்கள் கனெக்ட் ஆனீர்கள் என்று தெரியவில்லை..
ஆங்கிலம் பேசத் தெரியாத என்னை ஹாலிவுட்டில் நடிக்க வைத்தது நீங்கள்தான். இந்த படத்தின் கதையை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் நான் சொன்ன போது, அவரிடம் எந்த வித ரியாக்ஷனும் இல்லை.
அவர் அப்படி இருந்தது, ஒருவேளை நம்முடைய கதை நன்றாக இல்லையோ என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துவிட்டது. ஆனால் கதையை சொல்லி முடித்த பின்னர், கலாநிதி மாறன் இந்த படத்தை நாம் செய்யலாம் என்று சொல்லிவிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி
ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் போனில், சார் இது என்னுடைய ஐம்பதாவது படம். இந்த படத்தில் உங்களுடைய பெயர் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினேன். அவர் 2 நாட்கள் கழித்து பதில் சொல்வதாகச் சொன்னார். அதேபோல அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது.
அப்போது அவர், தனுஷ் நான் இப்போது 30 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால் இந்த படத்திற்கு ‘எஸ்’ சொல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. ஆனால் நான் ‘எஸ்’ என்று சொல்கிறேன் என்று கூறினார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவ்வளவு படங்கள், அவ்வளவு விருதுகள், பாராட்டுகள் அனைத்தையும் பார்த்த பின்னர் கூட, இப்போதும் அவர் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும், முயற்சி செய்கிறார்.
அவரால் எப்படி அப்படி இவ்வளவு காலமும் இருக்க முடிகிறது என்பதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அடுத்தது பிரகாஷ்ராஜ் சார்… திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் அவருடன் நடிக்கும் பொழுது, அவரைப் பார்த்து பயந்து ஓரமாக நான் நின்று கொண்டிருப்பேன்.
பிரகாஷ் ராஜிற்கு நன்றி
ராயன் படத்திற்காக பிரகாஷ் ராஜிடம், நான் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். படத்தின் கதை பற்றி பேசும் பொழுது, அதெல்லாம் தேவையே இல்லை. எப்போது வர வேண்டும் என்று சொல். நான் அப்போது வருகிறேன் என்று கூறினார். அப்படித்தான் பிரகாஷ் ராஜ் இந்த படத்திற்கு வந்தார்.
பிரகாஷ் ராஜிற்கு தற்போது கண் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. 30 நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி இருக்கிறார். இதை அவர் என்னிடம் சொன்னார். இதையடுத்து நான் அவரை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். ஆனால் அவர் அதையும் மீறி எங்களுக்காக இங்கே வந்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி
எஸ்.ஜே.சூர்யா சாரைப் பொறுத்தவரை முதல் நாள் அவருக்கு நான் முதல் ஷாட்டை வைத்தபொழுது, நீங்கள் எதற்காக டைரக்ட் செய்கிறீர்கள் என்று கேட்டார். முதல் நாளே இப்படி கேட்கிறீர்களே என்று நான் கேட்டேன். அதற்கு அவர் இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறீர்கள் உங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.. பின்னர் ஏன் என்று கேட்டார். ஆனால் அந்த வார்த்தை என்னை மிகவும் கடுமையாக உழைக்க வைத்தது.
அவர் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த ஒரு மிகப்பெரிய இயக்குநர். இருப்பினும் நான் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும், முகம் சுழிக்காமல் எஸ்.ஜே.சூர்யா எனக்கு அதை செய்து கொடுத்தார்.
அதேபோல்தான், காளிதாஸ், சந்தீப், துஷாரா, அபர்ணா ஆகியோரை நான் பயங்கரமாக திட்டி, கஷ்டப்படுத்தி இருக்கிறேன். டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் அவர்களுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும்தான்.
பிரபுதேவா சாரை பொறுத்த வரை, அவருக்கு நான் அவரை இங்கு கூப்பிட்டாலும் பிடிக்காது. அவருக்கு நன்றி சொன்னாலும் பிடிக்காது. அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல்.
செல்வராகவன் எனது ஆசான்
ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என்னுடைய அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். அவர்தான் என்னுடைய ஆசான். அவர்தான் என்னுடைய குரு. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது அவர்தான். சாப்பிட சொல்லி கொடுத்தது அவர்தான்.
வாழ்க்கையில் போராட சொல்லிக் கொடுத்தது அவர்தான். கண்ணம்மாபேட்டையில் ஒரு குடிசை வீட்டில் இருந்த என்னை இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர்தான்.
இந்த படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுக்கு இரண்டாவது டேக் சென்றால் நான் கோபப்படுவேன். ஆனால் செல்வராகவனுக்கு இரண்டாவது டேக் சென்றால், நான் சந்தோஷப்படுவேன். காரணம், அவர் என்னை அவரது படங்களில் அவ்வளவு டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சரை நான் அவருக்கு கொடுப்பதும், அதில் அவர் கஷ்டப்படுவதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.
போயஸ் கார்டன் வீடு
நிச்சயமாக நான் இப்போது போயஸ் கார்டன் வீட்டை பற்றி பேசவேண்டும். இந்த வீடு இவ்வளவு சர்ச்சைக்குரிய பேச்சாக மாறும் என்று தெரிந்திருந்தால், நான் அங்கு வீடு கட்டிருக்கவே மாட்டேன்.
நான் யாருடைய ரசிகர் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாரின் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. எனக்கு 16 வயது இருந்த போது ஒருநாள் போயஸ் கார்டன் தெருவுக்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த ரஜினியின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன்.
அங்கிருந்த வாட்ச்மேனிடம் கெஞ்சி அனுமதி வாங்கி, அவர் வீட்டையும் சென்று பார்த்தேன். அதற்கு பக்கத்திலேயே ஜெயலலிதா அம்மாவின் வீடும் இருந்தது. அதைப் பார்த்த பொழுது, எப்படியாவது நாமும் இந்த போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும் என்று கனவு கண்டேன்.
அதற்கான விதை அப்போது என் மனதில் விழுந்தது. அந்த 16 வயது வெங்கடேஷ் பிரபுவின் ஆசைக்கு, தனுஷ் கொடுத்த கிப்ட் தான் நான் இப்போது போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் வீடு. நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும். என்னுடைய அம்மா அப்பாவுக்கு தெரியும். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். என் மனசாட்சி பேச ஆரம்பித்தால் அது ஆபத்தில் முடிந்துவிடும் ” என்று நடிகர் தனுஷ் பேசினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்… தொடரும் வாதம் : வழக்கு மதியம் 2.15-க்கு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ஈடு செய்ய முடியாத இழப்பு: வெற்றி மாறன்