உதயசங்கரன் பாடகலிங்கம்
மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பேராசை!
இந்தியாவில் மருந்து உற்பத்தி துறையின் மதிப்பு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாகச் சொல்கின்றன சில ஆய்வுகள். உள்நாட்டு மருந்து விற்பனை, வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி என்று அனைத்துமே பில்லியன் டாலர் கணக்கில் இருக்கின்றன. அவற்றில் காலவதியானவை, முறையான ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை, அதிலும் சில பக்கவிளைவுகளைக் கொண்டவை என்று மருந்துகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. சாதாரண மக்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது.
அதனை விலாவாரியாகப் பேசுகிறது ‘பில்’ வெப்சீரிஸ். மருத்துவ உலகின் ஒரு அங்கமான மருந்து துறையில் நிகழும் குற்றங்களைப் பேசுகிற ‘த்ரில்லர்’ இது.
ராஜ்குமார் குப்தா உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் ரிதேஷ் தேஷ்முக், நேகா ஷராப், அன்சுல் சௌகான், திக்ஷா ஜுனேஷா, பவன் மல்ஹோத்ரா, அக்ஷத் சௌகான், நிகில் குரானா, பஹருல் இஸ்லாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜியோ சினிமாவில் கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று இது வெளியானது.
மருந்துகளின் பின்னணியில்..!
ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனம் பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரம்மா கில் (பவன் மல்ஹோத்ரா). இவரது மகன் ஏகம் (நிகில் குரானா) இந்நிறுவனப் பொறுப்பை விரைவில் ஏற்கவிருக்கிறார். சுமார் 25,000 கோடி வருவாய் ஈட்டுகிற நிறுவனமாகத் தங்களுடையதை இவர்கள் மாற்றியிருக்கின்றனர். இதற்காக, சட்டத்திற்குப் புறம்பான சில வேலைகளையும் செய்கின்றனர்.
இந்திய மருத்துவ ஆணையத்தில் இருக்கும் சில அதிகாரிகளின் மூலமாக, ஆய்வில் தோல்வியுற்ற சில மருந்துகளையும் கூட இவர்கள் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். புதிதாக சர்க்கரை நோய்க்கான மருந்தொன்றையும் மலிவு விலையில் கொண்டுவரத் தயாராகி வருகிறது ஃபார்எவர் க்யூர் பார்மா. போலவே, நெடுநாட்களாகப் புற்றுநோய்க்கான மருந்தொன்றை வெளியிடுவதற்கான ஆய்வுகளும் நடந்து வருகிறது.
அதேநேரத்தில், மருத்துவ ஆணையத்தின் காஸியாபாத் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் பிரகாஷ் சௌகான் (ரிதேஷ் தேஷ்முக்). மருத்துவர் பாசுதேவ் நடராஜனின் (பஹருல் இஸ்லாம்) ஓய்வையொட்டி நடத்தப்படும் பிரிவு உபசார விழாவில் மனைவி, மகனுடன் கலந்துகொள்ளச் செல்கையில் இந்த தகவல் அவருக்குச் சொல்லப்படுகிறது.
நேர்மையானவர் என்று மருந்து தர நிர்ணயக் கட்டுப்பாட்டுப் பிரிவில் புகழ் பெற்றவர் பிரகாஷ். காஸியாபாத் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்கும்போது, இன்ஸ்பெக்டர் குர்சிம்ரத் கவுர் (அன்சுல் சௌகான்) ஃபார்எவர் க்யூர் பார்மாவின் ஆய்வகத்திற்குத் திடீரென்று சோதனை நடத்தச் சென்றுவிட்டு, பாதியில் அதனை ‘கேன்சல்’ செய்தது தெரிய வருகிறது.
அப்போது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஒரு ஃபைலை சாக்கடையில் வீசியதாகச் சொல்கிறார் குர்சிம்ரத் கவுர். அந்த ஃபைல் பத்திரிகையாளர் நூர் கான் (அக்ஷத் சௌகான்) கையில் கிடைக்கிறது.
அதில் சந்தையில் புழக்கத்தில் இருக்கும் மருந்தொன்று பயன்படுத்தத் தகுதியற்றது என்றும், ஆய்வகச் சோதனையில் தோல்விடைந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை வெளியுலகுக்குத் தெரிவிக்க முயற்சிக்கிறார் நூர் கான். அப்போது, அவர் சிலரால் தாக்கப்படுகிறார். அந்த நபர்கள் அந்த ஃபைலை அவரிடம் இருந்து பிடுங்கிச் செல்கின்றனர்.
ஆனால், நூர் கான் அதனைத் தனது மொபைலிலும் வேறு சில இடங்களிலும் பிரதி எடுத்து வைத்திருக்கிறார். அந்த தகவல்கள் பிரகாஷ், குர்சிம்ரத் டீமின் கையில் கிடைக்கிறது.
அதேநேரத்தில், பிரம்மாவின் ஃபார்எவர் க்யூர் பார்மா தலைமை அலுவலகத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த ஆஷிஷ் கன்னா (குஞ்ச் ஆனந்த்) எனும் நபர், அங்கிருக்கும் கோப்புகளில் மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விவரங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், ஆய்வு முடிவுகள் குறித்த தெளிவான விவரங்கள் இல்லாதது கண்டு கோபமுறுகிறார். அது பற்றிச் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் எந்தப் பதிலும் இல்லை.
தவறான தகவல்கள் இருப்பதாகக் கூறி, ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு பிரம்மா வரை செல்கிறார் ஆஷிஷ். அப்போது, அந்த நிறுவனத்தில் புதிதாகத் தலைமைப்பொறுப்புக்கு வந்த பாசுதேவ் நடராஜனும் இருக்கிறார்.
‘நீ சொல்வது போல தவறு நடந்திருந்தால் விசாரிக்கச் சொல்கிறேன்’ என்று கூறி ஆஷிஷை அனுப்புகிறார் பிரம்மா. அவர் சென்றபிறகு, அந்த ஃபைலை கிழித்து எறிகிறார். அதன்பிறகு, ஆஷிஷின் கம்ப்யூட்டரில் இருந்து அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட பல தகவல்களைக் காண்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஃபார்எவர் க்யூர் பார்மா நிறுவனத்தின் சர்க்கரை நோய் மருந்தைச் சோதித்துப் பார்க்கப் பயன்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு கண்பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சிலர் மரணமடைகின்றனர். இந்த தகவல் பஞ்சாப்பை கொதிப்படையச் செய்கிறது.
பிரகாஷ், குர்சிம்ரத் உடன் நூர்கானை அந்தச் சம்பவம் ஒன்றிணைக்கிறது. ஃபார்எவர் க்யூர் பார்மாவுக்கு எதிராக அவர்களது சட்டரீதியிலான போராட்டமும் தீவிரமடைகிறது.
ஆனால், அரசு எந்திரத்தின் ஆணி வேர் ஊடுருவியிருக்கும் பிரம்மா கில்லின் அதிகார பலத்தை எதிர்த்து இந்த சாமானியர்களால் என்ன செய்ய முடிந்தது? அப்போது, அவர்கள் இழந்தது என்ன? ஆஷிஷ் போன்றவர்களால் இந்த போராட்டத்தில் என்ன பங்களிப்பை வழங்க முடிந்தது?
இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘பில்’. இந்த வெப்சீரிஸில் எட்டு எபிசோடுகள் உள்ளன.
இருக்கை நுனியில் அமர வைக்கிற ‘த்ரில்லர்’ இல்லையென்றாலும் கூட, அடுத்த முறை மருத்துவர் பரிந்துரைத்த அல்லது மருந்தகங்களில் நாம் வாங்குகிற மாத்திரைகளை நம்பிச் சாப்பிடலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த வெப்சீரிஸ். அந்தளவுக்குத் திரையை நோக்கி நம்மை உள்ளிழுப்பதே இதன் வெற்றி.
நாம் சாப்பிடுகிற மருந்துகளின் பின்னணியில் இன்னொரு உலகம் இயங்குவதைக் காட்டுகிறது. அது நம்முள் பிரமிப்பையும் அதிர்ச்சியையும் ஒருங்கே உருவாக்குகிறது. தற்போது புழக்கத்தில் இருக்கும் மாத்திரைகளில் சரியானவை எவை என்று எப்படிக் கண்டறிவது என்ற எண்ணத்தையும் தூண்டுகிறது ‘பில்’.
சில குறைகளும் உண்டு..!
ரிதேஷ் தேஷ்முக் இதில் முதன்மை பாத்திரம் ஏற்றிருக்கிறார். சாதாரண குடும்பத்தலைவனாக இருந்தாலும், அலுவலகப் பொறுப்பை பொறுத்தவரை அவர் ஒரு நாயகனாகவே காட்டப்பட்டிருக்கிறார். அவரது மனைவியாக வரும் நேகா ஷராப், சாதாரண குடும்பத்தலைவிகளின் பிரதிநிதியாகத் திரையில் தெரிகிறார். கணவனை டார்ச்சர் செய்யும் மனைவியாக அப்பாத்திரம் வெளியே தென்பட்டாலும், அது அப்படிப்பட்டதல்ல என்று தெரிய வருகிற இடங்கள் ரசிகர்களை ஈர்க்க வைப்பவை.
இந்த வெப்சீரிஸின் மிகப்பெரிய பலம் பிரம்மாவாக வரும் பவன் மல்ஹோத்ரா. உடலில் தெரியும் மிடுக்கும், முகத்தில் தெரியும் முறைப்பும், அவரைச் சரியான வில்லன் என்று சொல்ல வைக்கின்றன. தெலுங்கு, தமிழ், கன்னடப் படவுலகம் இனி அவரைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அனேகம்.
நூர்கான் ஆக வருகிற அக்ஷத் சௌகானின் துள்ளல் நடிப்பு இளம் ரசிகர்களைக் கவரும்.
பாசுதேவ் நடராஜனாக வரும் பஹருல் இஸ்லாம், குர்சிம்ரத் ஆக வரும் அன்ஷுல் சௌகான், பஞ்சாப் முதலமைச்சரின் மகள் கீரத் ஆக வரும் திக்ஷா ஜுனேஜா, ஏகம் ஆக வருகிற நிகில் குரானா, ஆஷிஷ் ஆக வரும் குஞ்ச் ஆனந்த், அவரது மனைவியாக வருபவர் என்று சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் முதன்மை பெற்றிருக்கின்றனர்.
கொஞ்சம் சீரியல், கொஞ்சம் திரைப்படம் பார்ப்பது போன்று கலந்து கட்டிய ஒரு காட்சியாக்கம் இதில் நமக்குக் காணக் கிடைக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுதீப் சென்குப்தா, தயாரிப்பு வடிவமைப்பாளர் தீப் சுபாஷ் குல்கர்னி, படத்தொகுப்பாளர் சுவராங்ஷு சர்கார், ஒலி வடிவமைப்பாளர் ஷகாப் ஆலம் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இந்த வெப்சீரிஸின் மைய நீரோட்டத்தைச் செழுமைப்படுத்தியிருக்கிறது.
தி ரெட் கெட்டில் சார்பாக பிரக்ஞா மற்றும் பரோமா தாஸ்குப்தா இருவரும் இதன் பின்னணி இசையைக் கையாண்டிருக்கின்றனர்.
இதன் கதையை ராஜ்குமார் குப்தா உடன் இணைந்து பர்வேஸ் ஷெய்க் மற்றும் ஜெய்தீப் யாதவ் உருவாக்கியிருக்கின்றனர்.
திரைக்கதை வசனங்களை ராஜ்குமாரும் ஜெய்தீப்பும் கையாண்டிருக்கின்றனர். எபிசோடுகளை இயக்கும் பொறுப்பை இவர்கள் இருவருடன் இணைந்து மாஹிம் ஜோஷி மேற்கொண்டுள்ளார்.
‘பில்’ சீரிஸை பொறுத்தவரை, வில்லனின் அராஜகங்கள் தொடர்ந்து வர இறுதியில் ஹீரோ தரப்பு ஜெயிப்பதுதான் கதையாக இருக்கிறது. ஆனால், சீரியல் பார்ப்பது போன்று தொடர்ந்து வில்லன் தரப்பின் கை மட்டுமே மேலோங்குவது ‘அட ஆண்டவா’ என்று ரசிகர்களைப் புலம்ப வைக்கிறது.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றச் செயல்பாடுகள் மாதக்கணக்கில், ஆண்டுகணக்கில் நீளத் தக்கவை. ஆனால், இதில் இரண்டொரு அமர்வுகளில் தீர்வை நோக்கிச் செல்லும் நீதிமன்றக் காட்சி சித்தரிப்புகள் ‘லாஜிக்’ சார்ந்து பல கேள்விகளை எழுப்புகின்றன. பரபரப்பு இருக்காது என்று கருதி அவற்றின் நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அது கதையின் நம்பகத்தன்மையைக் கெடுப்பதாக இருக்கிறது.
கடைசி நான்கு எபிசோடுகளில் இருக்கும் விஷயங்களைக் கொண்டு இன்னும் கொஞ்சம் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். அவை தெளிவான, பட்டவர்த்தனமான விவரணையைத் தந்திருக்கும்.
’பேமிலிமேன்’ நாயகன் போன்றே இதிலும் ரித்தேஷின் பாத்திரம் மனைவியாக வரும் நேகாவுக்கு அடங்கி நடந்துகொள்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் நுட்பமாக வடிவமைத்திருக்கலாம். அது நிகழ்த்தப்படவில்லை என்பது போன்ற சில குறைகள் இதிலுண்டு.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதுவரை வெளியான வெப்சீரிஸ்களில் மிகச்சிறந்தது என்று இதனைக் குறிப்பிட இயலாது.
அதேநேரத்தில், ரொம்பவும் போரடிக்காத வகையில் ‘பில்’ காட்சியாக்கம் உள்ளதை மறுக்க முடியாது.
தலைவலி, காய்ச்சல் என்று எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை மருந்தகங்களில் தாமாகச் சென்று வாங்குவதே சரியானதல்ல என்று சொல்கிறவர்கள் மத்தியில், மருத்துவர்கள் பரிந்துரைக்கிற மருந்துகளும் சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது ‘பில்’. மருந்து நிறுவனங்களின் பேராசையினால் நிகழ்கிற ஆபத்துகளைப் பேசுகிறது.
‘இது வெறும் கதைதானே’ என்று சிலர் சொல்லலாம். நாட்டு நடப்புகளைக் கலந்தும், முழுதாகத் தழுவியும் புனைவுகள் உருவாக்கப்படுகின்றன என்ற உண்மை புரிந்தவர்களை, இந்த ‘பில்’ நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கும். அந்த வகையில், இந்த வெப்சீரிஸ் முக்கியத்துவம் பெறுகிறது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்… ரூ.60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை.!
மோசடி புகார்… அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு!
மீட்டர் கட்டணம் உயர்வு: ஆட்டோ ஓட்டுநர்கள் நாளை கோட்டை நோக்கி பேரணி!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!