பிச்சைக்காரன் 2: விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சிக்கல்!

Published On:

| By Jegadeesh

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள ’பிச்சைக்காரன் 2’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏறகனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், தன்னுடைய மாங்காடு மூவீஸ் தயாரிப்பில் நடிகரும், இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ’மூளை’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் ’ஆய்வுக்கூடம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் கருவானது மூளை மாற்று அறுவைச்சிகிச்சை தொடர்புடையது.

தற்போது எனது ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை மற்றும் திரைக்கதையை அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ என்ற படத்தை எடுத்துள்ளார் என்றும் அதன் ட்ரெய்லர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியானது.

எங்கள் அனுமதியி்ன்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி ’பிச்சைக்காரன் 2’ படத்தை எடுத்துள்ளதால் இப்படத்தை எந்த தளங்களிலும் வெளியிடக்கூடாது என தடை விதிக்க வேண்டும்.

அத்துடன் ரூ. 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பரணி என்ற உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், தான் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளதாக கூறி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அண்ணாமலையை அவாய்ட் பண்ணுங்க: எடப்பாடி பழனிசாமி

தோற்றது டெல்லி: ஆர்.சி.பி. வீரரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel