ban on the kerala story

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மனு!

சினிமா

மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் தி கேரளா ஸ்டோரி படம் உருவானது. இதில் அடா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி , சோனியா பாலானி எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இதனால் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டிருந்தது.

ban on the kerala story

இதனிடையே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி படம் மே 5 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததற்கு பிறகும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டது.

ஆனால் படம் வெளியானதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. படம் திரையிடப்படும் திரையரங்கத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த மே 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைச் சம்பவத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக ’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்குத் தடை விதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை நிறுத்தியதற்கும் மேற்கு வங்கத்தில் படத்திற்கு தடை விதித்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பட தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா இன்று (மே 10) மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு வரும் மே 12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்தது தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “மம்தா பானர்ஜி திரைப்படத்திற்கு தடை விதித்ததன் மூலம் மேற்கு வங்க சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அநீதி இழைத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மோனிஷா

டிஎம்கே ஃபைல்ஸ்: அண்ணாமலை மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு!

தமிழரசிக்கு வந்த எதிர்ப்பு தப்பித்த கயல்விழி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *