பத்து தல: ரசிகர்களுக்குப் பத்தல…விமர்சனம்!

சினிமா

’சிம்பு படம் எப்படியிருந்தாலும் பார்ப்போம்’ என்று கூக்குரலிடும் ரசிகர் கூட்டம் அவருக்கு உண்டு. உண்மையைச் சொன்னால், அஜித், விஜய் வரிசையில் தனக்கென்று தனிப்பட்ட ரசிகர் வட்டத்தைப் பெற்ற நடிகர்களில் சிம்புவும் ஒருவர்.

ஆனால், ஒரு தமிழ் பட ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவராகவே வகுத்துக்கொண்ட பார்முலாவால் சாதாரண ரசிகர்களின் வருகையைச் சம்பாதிக்காமல் இருந்தார். விண்ணைத் தாண்டி வருவாயா, போடா போடி போன்றவை அவற்றில் இருந்து வேறுபட்டு பெண்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலும், இதர படங்களில் அவர் ஏற்ற பாத்திரங்களில் சில ‘டெம்ப்ளேட்’ அம்சங்கள் தொடர்ந்தன.

சமீபத்தில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகியன அந்த வரிசையில் இருந்து விலகி நின்றன. இப்போது, கிருஷ்ணாவின் இயக்கத்தில் ‘பத்து தல’ வெளியாகியிருக்கிறது. இப்படமும் அப்படியொரு அனுபவத்தைத் தருகிறதா?

இந்த கேள்விதான் ‘பத்து தல’ படம் பார்க்க வைத்தது.

ராவணனா? ராமனா?

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி வெளியே செல்கையில் கடத்தப்படுகிறார். அவர் ஏன் அப்படியொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? அதற்குப் பதிலளிக்கும் விதமாக விரிகிறது ‘பத்து தல’ திரைக்கதை. அந்த சம்பவம் நிகழ்ந்து, கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகான கதை திரையில் சொல்லப்படுகிறது.

சக்திவேல் எனும் போலீஸ் அதிகாரி, ‘அண்டர்கவர்’ ஆபரேஷன் ஒன்றில் ஈடுபடுகிறார். விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு ரவுடியிடம் அடியாளாகச் சேர்கிறார். சில மாதங்களிலேயே, அந்த ரவுடிக்கு பாஸ் ஆக விளங்கும் ஏ.ஜி.ஆர் எனும் ஏ.ஜி.ராவணனுக்கு உதவ அனுப்பப்படுகிறார்.

நாகர்கோவில் வட்டாரத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடும் ஏ.ஜிஆர். சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறவர். அதுவே, மக்கள் மத்தியில் அவரது அடையாளமாக உள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த நாஞ்சிலார் பகையைச் சம்பாதித்தாலும், தனக்கான முக்கியத்துவத்துடன் அம்மண்ணில் வலம் வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் கடத்தப்பட்டதன் பின்னணியில் ஏ.ஜி.ஆர் இருப்பதாகச் சந்தேகிக்கிறது போலீஸ் தரப்பு. அதனால், ஏ.ஜி.ஆர் உடன் இருந்தவாறே அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார் சக்தி. முழுமையாக ஏ.ஜி.ஆரை ஒழித்துக் கட்டும் வெறியில் இருக்கிறார் நாஞ்சிலார்.

இருவருக்கும் நடுவே, ஏ.ஜி.ஆரின் சகாப்தம் முடிந்ததா தொடர்ந்ததா என்பதே ‘பத்து தல’யின் மீதிக் கதை.

பொதுவெளியில் ராவணன் என்றால் கெட்டவன், ராமன் என்றால் நல்லவன் என்ற பிம்பம் இன்றும் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், கெட்டவன் என்ற அடையாளத்துடன் நல்லது செய்பவராக ஏ.ஜி.ஆர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே, இப்படம் நிறைய ‘க்ளிஷே’க்களை கொண்டது என்பதை உணர்த்திவிடும்.

கேங்க்ஸ்டர் படம் கிடையாது!

பத்து தல’ ட்ரெய்லர் பார்த்தவுடன், இது கேங்க்ஸ்டர் படமோ என்ற எண்ணம் தோன்றும். முதலமைச்சராக சந்தோஷ் பிரதாப், துணை முதலமைச்சராக கவுதம் மேனன் வரும் காட்சிகள் அதனை வலுப்படுத்துவதாகத் தோன்றும். ஆனால், அதனைத் தொடர்ந்துவரும் கவுதம் கார்த்திக்கின் அறிமுகக் காட்சியே ‘இது கேங்க்ஸ்டர் படம் கிடையாது’ என்று சொல்லிவிடும். இயல்புக்கு மாறான சினிமாத்தனம் நிறைந்த சண்டைக்காட்சியாக அது இருக்கும்.

அதே நேரத்தில், ஒரு நிகழ்வில் பாதியை மட்டுமே காட்சியில் சொல்லும் ’ஹாஃப் வே’ உத்தி ரொம்பவும் சீரியசான படம் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். அதனாலேயே, ‘முஃப்தி’ படம் கொண்டாடப்பட்டது. அதை அடியொற்றியே ‘பத்து தல’யும் அமைந்துள்ளது. என்ன, நாயகன் நல்லவன் என்பதைச் சொல்லும் இடங்களில் தியேட்டரில் யாரும் கலாய்த்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் ரெடின் கிங்ஸ்லியை அதேபோன்று ‘கமெண்ட்’ அடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கருப்பு வேட்டி, சட்டை, அடர்ந்த தாடி தலைமுடியுடன் சிம்புவைப் பார்க்கும்போது பெரிய ‘கேங்க்ஸ்டர்’ என்பதைவிட, ‘கோயிலுக்கு ஏதும் நேர்த்திக்கடன் செய்யப்போறாரோ’ எனும் எண்ணமே மேலிடுகிறது. அதேநேரத்தில், தனக்கென்று தனி நாயகி, குத்து டான்ஸ் வேண்டுமென்று அடம்பிடிக்காமல் ஆர்ப்பாட்டமின்றி நடித்திருப்பதும் கொஞ்சம் புதிதாகவே உள்ளது.

கவுதம் கார்த்திக்கை அடியாளாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தாலும், தோள் வரை தொங்கும் தலைமுடியைக் கொண்டு தனது முகபாவனைகளை கட்டுக்குள் அடக்கியுள்ளார்.

சிம்புவின் தங்கையாக வரும் அனு சித்தாராவைவிட, பிரியா பவானிசங்கருக்கு அதிகக் காட்சிகள். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் கெத்து என்று அவரை வழக்கமான நாயகியாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். பெண்களை தியேட்டருக்கு அழைத்துவரும் படியாக இருப்பது அவருக்கான காட்சிகள். அதேபோல, குழந்தை நட்சத்திரம் ஹர்ஷிதாவின் ‘க்யூட்’டான பாவனைகளும் மனதைக் கொள்ளை கொள்கிறது.

‘நாம யாருன்னு இந்த ஊருக்கு காட்டணும்’ என்பது போன்ற வசனங்களை கரகரத்த குரலில் பேசிக் கைத்தட்டலை அள்ளிய கவுதம் மேனன், இதில் நாகர்கோவில் வட்டாரத் தமிழைப் பேசியிருக்கிறார். கேட்க அது நன்றாகவும் இருக்கிறது. மனுஷ்யபுத்திரன் தொடர்ந்தாற்போல நான்கு காட்சிகளில் தலைகாட்டியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.

கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருக்கும் கலையரசன் தாண்டி ‘அசுரன்’ படத்தில் வந்த டீஜே அருணாச்சலம், சந்தோஷ் பிரதாப், சென்றாயன், சவுந்தர் ராஜா, கண்ணன் பொன்னையா, ஜோ மல்லூரி என்று பலரும் வந்து போகின்றனர். ஆர்யாவின் மனைவி சாயிஷா, ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். மேற்சொன்ன எல்லாமே, ‘பத்து தல’ ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்பதைக் காட்டிவிடும்.

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாஷா, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்., கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கூட்டுழைப்பும் ஒரு செறிவுமிக்க கமர்ஷியல் திரையனுபவத்தைத் தரவே மெனக்கெட்டிருக்கிறது. ஆனாலும், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களைக் காட்டுவதாக நகரும் திரைக்கதை துண்டுதுண்டான காட்சிகளை ஒன்றாக ஒட்ட வைத்தாற் போன்று உள்ளது. அதனைக் காட்சிப்படுத்துவதில் கெட்டி என்று நிரூபித்திருக்கிறார் கிருஷ்ணா.

மூலப்படத்தில் இருந்து ரொம்பவும் விலகிவிட வேண்டாம் என்ற நியதியுடன் களமிறங்கியிருப்பதால், ‘பத்து தல’யில் இதற்குமேல் புத்தம்புதிய அம்சங்கள் என்று வேறேதும் இல்லை. ஆர்.எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் கொஞ்சம் வித்தியாசமான ஓசைகளை காதுக்குள் புகுத்துகிறது.

கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் வன்முறை ’ரொம்பவே ஓவர் ரகம்’ என்றாலும், ’டண்டணக்கா டனக்குநக்கா’ ஓசையுடன் ஒலிக்கும் பின்னணி இசையால் அந்த மோதலையே குதூகலமான ‘வீடியோ கேம்’ அனுபவமாக மாற்ற முயற்சித்திருக்கிறது ரஹ்மானின் பின்னணி இசை. அது போன்ற சில கணங்கள் அற்புதமான அனுபவங்களைத் தருகிறது.

டம்மி ஆனாரா கவுதம் கார்த்திக்?

தியேட்டருக்குள் புகும் ரசிகர்களை ஏ,பி, சி எனும் பிரிக்கும் வழக்கம் என்றோ மறைந்துவிட்டது. அதேநேரத்தில், கடைக்கோடி ரசிகனுக்கும் புரியும் வகையில் கதை சொல்வது அவசியம் என்ற நிலையும் தொடர்கிறது. அப்படிப் பார்த்தால், ‘பத்து தல’யில் வரும் சம்பவங்களை, பாத்திரங்களின் செயல்பாடுகளை ரசிகர்கள் தாமாகவே ஓன்றாகக் கோர்த்து யூகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் நிறையவே இருக்கிறது. ‘கொஞ்ச நேரம் பொழுது போகனும்’ என்று படம் பார்க்க வருபவர்களை அது அயர்ச்சிக்கு உள்ளாக்கும்.

‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்’ என்றால் இரு நாயகர்களும் ஒருவர் முதுகில் மற்றொருவர் சாய்ந்துகொண்டு, எதிரெதிர் திசைகளில் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு  ’போஸ்’ கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. ’பத்து தல’யில் அப்படிப்பட்ட ‘இணைந்த கைகள்’ மொமண்ட் இல்லவே இல்லை.

கன்னடப்படத்தின் ரீமேக் என்ற வகையில் ’பத்து தல’யில் கவுதம் கார்த்திக் நாயகன் என்றால், சிம்புவுக்கு கொஞ்சம் விரிவான கவுரவ வேடம் எனும் அளவுக்குத்தான் இடம். ஆனால், மாநாடு படத்தின் வெற்றியால் ‘பத்து தல’ திரைக்கதையில் சிம்புவுக்கு அதிக இடம் தந்ததாகக் கூறப்பட்டது. அதனால் கவுதம் கார்த்திக்கின் முக்கியத்துவம் குறைந்ததா என்றால், ஒரேநேரத்தில் ‘ஆமாம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் ‘கேஜிஎஃப்’. அந்த படத்தைத் தந்த இயக்குனர் பிரசாந்த் நீல், தன் உறவினர் ஸ்ரீமுரளியுடன் இணைந்து தந்த படம் ‘உக்ரம்’. அந்த வெற்றி தந்த தெம்பில், கொஞ்சம் வித்தியாசமான ட்ரீட்மெண்டை நம்பி ஸ்ரீமுரளி தந்த கமர்ஷியல் படமே ‘முஃப்தி’. அதில் வில்லன் போர்வையில் சிவராஜ்குமார் நாயகனாக வந்ததும் கன்னட ரசிகர்களைக் கவர்ந்தது. கூடவே, கேங்க்ஸ்டர் படத்திற்கான காட்சிக்கோணங்களும் நிறக்கலவையும் திரைக்கதை ட்ரீட்மெண்டை வலுப்படுத்தின. உண்மையைச் சொன்னால், ‘கேஜிஎஃப்’ப்புக்கு முன்பான கன்னடப் படவுலகின் எழுச்சியில் ‘முஃப்தி’க்கும் ஒரு இடமுண்டு.

தமிழில் ரீமேக் செய்யப்படும்போது, மேற்சொன்ன விஷயங்கள் மறைந்து சிம்புவும் கவுதம் கார்த்திக்கும் நடிக்கும் படம் என்பதே ‘பத்து தல’யின் அடையாளமாகிப் போனது. அந்த வகையில், சாதாரண ரசிகர்களுக்கு இரண்டு நாயகர்களை ஒரே பிரேமில் பார்த்த திருப்தி ‘பத்தல’ என்றுதான் சொல்ல வேண்டும்!

உதய் பாடகலிங்கம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பிண்டி மசாலா

+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *