“பத்து தல” இசை வெளியீடு: சிம்பு சொன்ன பஞ்ச்!

சினிமா

இங்கு தட்டிவிடுவதற்கு நிறைய பேர் உள்ளனர். ஆனால் தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்று நடிகர் சிலம்பரசன் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பத்துதல” மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒரு வழியாக எல்லா பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் பத்துதல வெளியீட்டுக்கு முன்பாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பத்துதல படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கெளதம் கார்த்திக் , பிரியா பவானி சங்கர், டீஜெ அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச்-30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 18) மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சிலம்பரசன், கெளதம் கார்த்தி, ப்ரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்,TJ அருணாச்சலம், அனுசித்தாரா, சென்ட்ராயன், இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய சிலம்பரசன், “நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால் கூட அழுதுவிடுவேன். ஆனால் இன்று உங்களுக்காக அழக்கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும்.

இந்தப் படம் ஆரம்பித்தபோது கஷ்டமான சூழ்நிலையில் இருந்தேன். அப்போது ஞானவேல் ராஜா ‘நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன் வெளிய வரமாட்டேன்’ எனச் சொன்னார். 

சில நாள் கழித்து அவரே மீண்டும் தொடர்பு கொண்டு இந்தப் படத்தை பண்ணலாம் என்றார். இந்தப் படத்தை கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். 

அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் கௌதம் தான். சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு உண்டு. ஏனென்றால் இங்கு தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை.

எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். கௌதம் கார்த்திக் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகளை சந்தித்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். 

எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதா இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஏஆர் ரஹ்மான் சார் என் காட்ஃபாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன்.

ஆன்மிகம் வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்துள்ளார். எல்லோரும் என்னிடம், ‘முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். 

அதுக்கு ஒரு காரணம் உள்ளது. முன்பெல்லாம் ‘நான் யாருனு தெரியுமாடானு’ என்ற அளவுக்கு பேசியிருக்கேன். ஒப்புக்கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன் என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள். அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். 

அதனால் தான் அதுபோன்று கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள்.

அப்புறம் எப்படி கத்தி பேச முடியும், பணிந்து தான் பேச முடியும். இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். 

மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமே உங்களை தலை குனிய விடமாட்டேன்” என்றார்.

இராமானுஜம்

ISL Final: கோப்பையை கைப்பற்றியது மோகன் பகான் அணி!

போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

கிச்சன் கீர்த்தனா: எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *