பதான் படத்தின் வசூல் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்“. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.
ஜான் ஆபிரகாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த நான்கு வருடங்களில் ஷாருக்கான் நடித்த படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் மட்டும் தலைகாட்டினார்.
இதனால் பதான் படத்தின் வெற்றி அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது. முன்னணி இந்தி நடிகர்களின் படங்களுக்கு எதிராக இந்து மத தீவிர பற்றாளர்கள் பாய் காட் எனும் வழக்கத்தை தொடங்கி பல இந்தி படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பாதிக்க வைத்த சூழலில் பதான் படத்தில் இடம் பெற்ற பேஷாராம் பாடல் காட்சியில் பயன்படுத்தபட்ட ஆடை பெரும் விவாதத்தை கிளப்பியது.
படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இந்துமத தலைவர்களாலும், பாஜக தலைவர்களாலும் முன்வைக்கப்பட்ட நிலையில் பதான் படத்தின் திரைக்கதை தேசபக்தியை வலியுறுத்த கூடியதாக இருந்தது.
இதனால் தணிக்கை துறை பேஷா ராம் பாடல் சர்ச்சையை முன்வைத்து படத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை என்பதுடன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்க சில வழிமுறைகளை தயாரிப்பு தரப்புக்கு அறிவுறுத்தி பிரச்சினைகள் இல்லாமல் தணிக்கை சான்றிதழை வழங்கியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பதான் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. வட இந்தியாவில் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை தேவைக்கு ஏற்ப திரையரங்குகளே தீர்மானிக்கும் வசதி இருந்ததால் தொடக்கநாள் முதலே குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 350 ரூபாயாக இருந்தது.
இதனால் குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பதான்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது ‘பதான்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.629 கோடியும் வெளிநாடுகளில் ரூ.380 கோடியுமாக மொத்தம் ரூ.1009 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமானுஜம்
குரூப் 2, 2ஏ தேர்வு நேரத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி!
இதுவரை 6 வீரர்கள் அவுட்… கடும் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா