உள்ளொழுக்கு : விமர்சனம்!

சினிமா

இப்படியெல்லாம் எப்படிப் படமெடுக்க முடியுது?!

மழை எப்படிப் பெய்தாலும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் மிகச்சிலரே. தூறல், சாரல், வெயில் மழை, அடைமழை, சூறைக்காற்று அல்லது இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, புயல் மழை என்று ஒவ்வொருவரின் மன இயல்புகளுக்குத் தகுந்தவாறு ஒரு சில வகை பொழிதல் மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களும் கூடத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, அதில் வரும் திருப்பங்கள் இடி மின்னலைப் போலத் தாக்கம் தர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவ்வாறில்லாமல் பூகம்பம் போன்ற பேரிடர் தன்மையிலான திருப்பங்களையும், மழை நீர் மௌனமாக வடிவதைப் போலச் சொல்வதென்பது ரொம்பவே அரிது. அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது ‘உள்ளொழுக்கு’.

மனிதர்கள் என்னதான் சிரித்துக்கொண்டும், அழுதுகொண்டும், இன்னபிற உணர்வுகளையும் புறத்தில் கொட்டினாலும், அவர்களது உள்ளத்தின் அகத்தே வேறு ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். அகத்திற்கும் புறத்திற்குமான இடைவெளி, அவர்களது மனநிலையின் வேரையே அசைத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட உண்மைகளை, அவற்றைச் சுமக்கும் மனிதர்களை, அவர்களிடையே விளையும் முரண்களைப் பேசுகிறது இப்படம்.

கிறிஸ்டோ டோமி எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கும் இப்படத்தில் ஊர்வசி, பார்வதி திருவோத்து, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், பிரசாந்த் முரளி, அலான்சியர் லோபஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இதற்கு இசையமைத்துள்ளார்.

’உள்ளொழுக்கு’ திரைப்படம் நம்மை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறதா?

சூழும் மழை வெள்ளம்!

ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் அஞ்சு (பார்வதி திருவோத்து) ஹோட்டலொன்றில் ‘சர்வர்’ ஆக இருந்துவரும் ராஜீவை (அர்ஜுன் ராதாகிருஷ்ணன்) விரும்புகிறார். ஆனால், அவரது பெற்றோர் ஜார்ஜ் – ஜிஜி (அலான்சியர் லோபஸ், ஜெயா குரூப்) வேறொருவருக்கு அவரைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர்.

அதனால், லீலாம்மா (ஊர்வசி) மகன் தாமஸ்குட்டியை (பிரசாந்த் முரளி) மணக்கிறார் அஞ்சு. அவர்களது மண வாழ்க்கை சில நாட்களிலேயே அசாதாரணமானதாக மாறுகிறது.

சிறு வயதில் கணவரை இழந்தபிறகு, மகள் ஷீபாவும் மகன் தாமஸுமே தனது உலகம் என்றிருந்தவர் லீலா.

ஷீபாவுக்குத் திருமணமாகிப் பேத்தி பிறந்தபிறகு, மகன் தாமஸின் அருகாமை மட்டுமே அவருக்குக் கிட்டுகிறது. அதனால், மருமகளைத் தனது மகள் போலவே கருதுகிறார் லீலா.

சில நாட்கள் கழித்து தாமஸ்குட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட, அவர் படுத்த படுக்கையாகிறார். அவரை அருகில் இருந்து லீலாவும் அஞ்சுவும் கவனித்துக் கொள்கின்றனர்.

எந்நேரமும் தாமஸ் வாந்தியெடுப்பதைச் சுத்தம் செய்வது, அவருக்கு மருந்துகள் கொடுப்பது, இரவிலும் பகலிலும் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக் கொள்வது என்றிருக்கிறார் அஞ்சு. அது அவரை அசூயைக்கு உள்ளாக்குகிறது.

ஒருநாள் மருத்துவமனைக்கு தாமஸ்குட்டி உடன் லீலாவும் அஞ்சுவும் செல்கின்றனர். அன்று ராஜீவைச் சந்திக்கிறார் அஞ்சு. அவர்களுக்கு மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது. அது எல்லை மீறுகிறது. அஞ்சு கர்ப்பமுறுகிறார்.
அஞ்சுவின் கர்ப்பத்திற்கு ராஜீவ் காரணம் என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில், திடீரென்று தாமஸ்குட்டியின் உடல்நிலை மோசமடைகிறது.

அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அப்போது, உடனடியாக ராஜீவைத் தான் இருக்குமிடத்திற்கு வரச் சொல்கிறார் அஞ்சு. ’குழந்தை குறித்த விஷயத்தைத் தன்னால் மூடி மறைக்க இயலவில்லை’ என்று அவரிடம் போனில் கதறுகிறார். ராஜீவ் சமாதானப்படுத்த, மெல்ல அந்த கொதிப்பில் இருந்து விடுபடுகிறார். பிறகு, ஒரு அறையில் லீலாவுடன் தூங்குகிறார்.

நள்ளிரவில் கண் விழிக்கும் அஞ்சு, கண்ணாடி முன் நின்று தன் வயிற்றைத் தடவிப் பார்க்கிறார். தற்செயலாக அதனைப் பார்க்கும் லீலா, தான் பாட்டி ஆகப் போவதாக மகிழ்ச்சி கொள்கிறார். பொழுது விடிந்ததும், அதனை தாமஸ்குட்டியிடம் சொல்ல வேண்டும் என்கிறார்.

அடுத்த நாள் காலையில், அஞ்சுவை அழைத்துக்கொண்டு தாமஸ் குட்டியைக் காணச் செல்கிறார் லீலா. கணவரிடம் எப்படி தான் கர்ப்பமுற்றிருப்பதைச் சொல்வது என்று அஞ்சு தயங்கிக் கொண்டிருக்க, அந்த நொடியில் தாமஸின் இதயத்துடிப்பு மங்கி உயிர் பிரிகிறது.

லீலாம்மாவின் வீட்டில் தாமஸ்குட்டியின் இறுதிச்சடங்குகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், அப்பகுதியில் மழை பெய்யத் தொடங்குகிறது. அது சில நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிந்தபிறகு, தாமஸ்குட்டியின் ஆன்மாவைச் சாந்தப்படுத்தும் நோக்கில் பைபிள் வாசிப்பும் பிரார்த்தனையும் அங்கு நடத்தப்படுகின்றன.

அந்த வீட்டின் மருமகளாக, தாமஸின் மனைவியாக, அச்சடங்குகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கிறார் அஞ்சு. ராஜீவை அழைத்து, ’என்னை உடனடியாக எங்காவது அழைத்துச் சென்றுவிடு’ என்கிறார். அவரோ, தன்னிடம் பணமோ, உரிய வேலையோ இல்லை என்று பதில் சொல்கிறார்.

இந்த நிலையில், அஞ்சுவின் மொபைல்போனில் ‘மரியா’ என்ற பெயரில் ஒரு அழைப்பு வருகிறது. அஞ்சு பாத்ரூமில் இருப்பதை அறியும் லீலா, அதனை ‘அட்டெண்ட்’ செய்கிறார். எதிர்முனையில் ராஜீவ் பேசுவதைக் கேட்டு அதிர்கிறார்.
அதன்பிறகு, தொடர்ந்து அஞ்சுவின் செயல்பாடுகளை உற்றுநோக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில், தன் மருமகளின் வயிற்றில் வளர்வது மகனின் கருவல்ல என்பதை அறிகிறார்.

அதனை அஞ்சுவே லீலாவிடம் நேரடியாகத் தெரிவிக்கிறார். அவரால் அந்த உண்மையை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

அப்போதும், மழை வெள்ளம் வடிந்து தனது கணவர் கல்லறை இருக்குமிடத்திற்கு அருகிலேயே மகன் சடலம் புதைக்கப்பட வேண்டும் என்பதில் லீலா உறுதியாக இருக்கிறார். அஞ்சுவுக்கோ, அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையைத் தருவதாக இருக்கிறது.

அந்தச் சூழலில், லீலா மற்றும் அஞ்சுவின் மனதுக்குள் புதைந்திருக்கும் உண்மைகள் ஒரு ‘பூகம்பம்’ போல அடுத்தடுத்து வெளிப்படுகின்றன.

அதன்பிறகு என்னவானது? மரணச்சடங்குகளுக்கு வந்த குடும்பத்தினர் எவ்வாறு அந்த உண்மைகளை எதிர்கொண்டார்கள்? அவர்களது மனதின் ஆழத்தில் இதுவரை என்னென்ன உண்மைகள் மறைந்திருந்தன என்பதைச் சொல்கிறது ‘உள்ளொழுக்கு’வின் மீதி.

இத்திரைக்கதையின் பெரும்பாலான காட்சிகளில் மழையும் வெள்ளமும் பாத்திரங்களாக இடம்பெற்றுள்ளன. அந்தப் பின்னணியே, வெம்மை பொங்கச் செய்யும் இக்கதையின் போக்கினை ஆற்றுப்படுத்துகின்றன; ஒருகட்டத்தில் இது போன்ற கதைகளில் பார்வையாளர்களான நாம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்குகின்றன.

இயக்குனருக்கு ’சபாஷ்’!

பெரும்பாலான ஷாட்கள் ‘குளோஸ் அப்’ மற்றும் ‘மிட் ஷாட்’களாக இருந்தபோதும், இதில் நடித்திருக்கும் எவரும் நம்மை அயர்வுக்கு உள்ளாக்கவில்லை. அதுவே, மிகக்குறைவான நடிப்புக் கலைஞர்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் மிகப்பெரும் சிறப்பாக உள்ளது.

ஊர்வசியைப் பொறுத்தவரை, தான் ஒரு நடிப்பு ராட்சசி என்பதை இதில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார். சோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று வாழ்ந்துவரும் ஒரு பெண்மணி, மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் எதிர்நோக்கினால் எப்படியிருக்கும் என்பதைத் தனது பாவனைகளால் நமக்குக் காட்டுகிறார். அந்த நடிப்புக்காக, ஊர்வசியை விருதுகள் சூழாவிட்டால் தான் ஆச்சர்யம்.

பார்வதி திருவோத்து இப்படத்தில் குலுங்கி அழாமல், ஓவென்று அலறாமல், அதற்கு இணையான உணர்வை நமக்குள் உருவாக்குகிறார். ’பூ படத்துல நடிச்சவரா இவர்’ என்று எண்ணும் அளவுக்குப் பருமன் ஆனபோதும், படம் பார்க்கும்போது அது தோன்றாமல் இருக்குமளவுக்குத் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேற்சொன்ன இருவருமே பெரும்பாலான பிரேம்களை ஆக்கிரமித்துக் கொள்வதால் ஆங்காங்கே மற்றவர்கள் தலைகாட்டுகின்றனர்.

உடல்நிலை ஒத்துழைக்காதபோதும் மனைவியின் அழகை அள்ளிப் பருக முடியாமல் தவிக்கும் காட்சியில், ஒரு நோயாளியாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார் தாமஸ்குட்டியாக வரும் பிரசாந்த் முரளி.

கிளைமேக்ஸ் காட்சியில் தனது கோபம் மகிழ்ச்சியாக மாறுவதை மிகச்சில நொடிகளில் நமக்குக் காட்டுகிறார் அலாய்சியர் லோபஸ்.

’அந்த உண்மை தெரிஞ்சும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாதாங்கற எண்ணத்துல, அதை உன்கிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்’ என்று சொல்லும் இடத்தில், ஒரு ஏழைத்தாயைத் திரையில் வெளிப்படுத்துகிறார் ஜெயா குரூப்.

வீணா நாயர், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் போன்றவர்களும், பின்னணியில் நடமாடியவர்களும் சொல்லத்தக்க வகையில் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.

’டெக்னோ மியூசிக்’ மட்டுமல்லாமல், மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை மீறி மனதுக்குள் புதைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான இசையையும் தன்னால் தர முடியும் என்று காட்டியிருக்கிறார் சுஷின் ஷ்யாம். அவரது பின்னணி இசை, வழக்கத்திற்கு மாறான காட்சிப்போக்கினை உயர்த்திப் பிடிக்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால் ஒரு அறைக்குள் எத்தகைய ஒளி இருக்குமோ, அப்படியொரு ‘லைட்டிங்’கை படம் முழுக்கக் கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனாத் ஜலால். டிஐ மற்றும் காட்சிகளின் தன்மையை மனதில் கொண்டு ஒவ்வொரு பிரேமையும் வடிவமைத்துள்ளது அவரது ஒளிப்பதிவு. கிரண் தாஸின் படத்தொகுப்பு, ஒரு நீரோட்டம் போலக் கதை நீள உதவியிருக்கிறது.

முகம்மது பாவாவின் கலை வடிவமைப்பு, நாமே வெள்ளம் சூழ்ந்த இடத்தில் இருக்கும் உணர்வை உருவாக்குகிறது.
ஜெயதேவன் சக்கடத்தின் ஒலி அமைப்பு மற்றும் அனில் ராதாகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு, இப்படத்தின் உள்ளடக்கத்தினை இன்னும் செறிவானதாக மாற்றுகிறது.

இயக்குனர் கிறிஸ்டோ டோமி, இந்தப் படத்தின் வழியே மனிதர்களின் இயல்பையே மாற்றும் வேலையொன்றைச் செய்திருக்கிறார். ஒரு கதையில் வழக்கத்திற்கு மாறான விஷயங்கள் நிகழும்போது, அதன் முடிவு குறிப்பிட்ட வகையிலேயே இருக்கும். ஆனால், ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஒளிந்திருக்கும் சில ரகசியங்கள் எரிமலைக் குழம்பாய் வெளிப்படுகையில் வேறோரு திசையில் அவர்கள் மனம் சிந்திக்கும் என்பதனை இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதனை நாம் ஏற்றுக்கொள்ளும்படியாகத் திரையில் சொல்லியிருக்கிறார் என்பதே ‘உள்ளொழுக்கு’ படத்தின் யுஎஸ்பி. அந்த வகையில் இயக்குனர் கிறிஸ்டோ டோமிக்கு மிகப்பெரிய ‘சபாஷ்’ சொல்லியே தீர வேண்டும்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..?!

’உள்ளொழுக்கு’ கதையில் சில திருப்பங்கள் உள்ளன. அவற்றை மிகுந்த ‘பில்டப்’ உடன் காட்சிப்படுத்தியிருக்கலாம்; குறைந்தபட்சமாகப் பின்னணி இசை வாயிலாக, அதனைச் சன்னமாக நிகழ்த்தியிருக்கலாம்.

மாறாக, வெறுமனே அடைமழை மற்றும் வெள்ள நீர் பாயும் சத்தம் பின்னணியில் ஒலிக்க, நடிப்புக்கலைஞர்களின் முகபாவனைகள் வழியாகவே பார்வையாளர்கள் அவற்றை உணர வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் கிறிஸ்டோ டோமி.

‘எப்படியெல்லாம் ஒரு கதைய எப்படி யோசிக்கிறாங்க’ என்ற வகையில் சில கதைகள் உண்டு. காரணம், அவை நம்மைச் சுற்றி நிகழ்ந்தாலும், அவற்றைப் பற்றி விவாதிப்பதில் பெரும் தயக்கம் இருக்கும். அதனைத் திரையில் சொல்வது இயலாத காரியம் என்று கூட நினைத்திருப்போம்.

அப்படிப்பட்ட கதைகளைச் சிறப்பான திரைக்கதையாக்கம் வழியாக, மாபெரும் நடிப்புத்திறன் கொண்டவர்களின் மூலமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த முடியும் என்று உணர்த்தியிருக்கிறது ‘உள்ளொழுக்கு’.

சாதாரணமாக ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றாலே, பல கதைகளை அள்ளி எடுத்து வருவதே நம்மில் பலரது வழக்கம். அவை அங்கு கண்ட முகங்களின் பின்னால் இருக்கும் பல உண்மைகளைச் சொல்லும். அவற்றைப் பிரித்துணரும் சாதுர்யமும் நமக்கு நிறையவே உண்டு. அதனால் இத்திரைப்படம் நமது மனதுக்கு நெருக்கமானதாகவே இருக்கும்.

கமர்ஷியல் பொழுதுபோக்கு படங்களுக்கான அம்சங்களை அறவே தவிர்த்து, அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கும் இதன் திரைமொழி கொஞ்சம் ஒவ்வாமையை தரலாம். அதனைச் சகித்து ‘உள்ளொழுக்கு’ படத்தை முழுமையாக ரசித்தால் பெருமழையில் திளைத்த உணர்வு கிடைப்பது நிச்சயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசங்கரன் பாடகலிங்கம்

இரண்டாம் இடம் : விக்கிரவாண்டியில் சீமான் வியூகம்!

ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா? : சுனில் கவாஸ்கர் பதிலடி!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *