Partner Tamil Movie Review

பார்ட்னர்: விமர்சனம்!

சினிமா

இன்னொரு ‘ஜஸ்ட் மிஸ்’!

வெளிநாட்டு படங்களின் தமிழ் டப்பிங் பதிப்புகளை தொலைக்காட்சிகளிலும் ஓடிடி தளங்களிலும் பார்க்க ஆரம்பித்தபிறகு, சில வகைமை திரைப்படங்களை உள்ளூரில் எடுப்பது கடினமாகிவிட்டது. வரலாற்றுப் புனைவு, அறிவியல் புனைவு எல்லாம் அவற்றில் முதன்மை இடத்தைப் பிடிக்கும். அது தெரிந்தும், ‘சயன்ஸ் பிக்‌ஷன்’ அடிப்படையில் அமைந்த கதை என்ற அறிவிப்புடன் களமிறங்கியிருக்கிறது ‘பார்ட்னர்’ குழு.

மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகிபாபு, பாலக் லால்வானி, பாண்டியராஜன், ஜான் விஜய் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

கதை என்ன?

வாங்கிய பணத்தைத் திருப்பித் தராவிட்டால், உன் தங்கையைத் திருமணம் செய்து கொள்வேன் என்று ஸ்ரீதரை (ஆதி) மிரட்டுகிறார் கடன் கொடுத்தவர். உடனே தருகிறேன் என்று சொல்ல முடியாதபடி, அந்த தொகையோ 25 லட்சம் ரூபாயைத் தொட்டு நிற்கிறது. அதனை ஒரு மாத காலத்தில் கொடுத்துவிடுகிறேன் என்று ‘சவால்’விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறார் ஸ்ரீதர். வேறு எதற்கு, வேலை தேடத்தான்..!

சென்னையில் நண்பன் கல்யாண ராமனைத் (யோகிபாபு) தேடிச் செல்கிறார். அவரோ, திருட்டுகளைத் தொழில் போலச் செய்துவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கல்யாணுக்கு ஒரு மாதம் கழித்து திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்படுகிறது.

தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு ஸ்ரீதரையும் அழைத்துச் செல்கிறார் கல்யாண். உடனேயே, அங்கு வேலையில் சேர்கிறார் ஸ்ரீதர். சில நாட்கள் கழித்து, ஒரு விஞ்ஞானியின் (பாண்டியராஜன்) புதிய கண்டுபிடிப்பைத் திருடும் வேலை ஸ்ரீதர் மற்றும் கல்யாணிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதனைச் செய்ய முற்படும்போது, அந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு கல்யாண் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அடுத்தநாள் காலையில், அவர் ஒரு அழகிய பெண்ணாக (ஹன்சிகா மோத்வானி) மாறியிருக்கிறார்.

Partner Tamil Movie Review

அதேநேரத்தில், அந்த கண்டுபிடிப்பைத் திருடுவதற்காக ஒரு நபர் (ஜான் விஜய்) தந்த 50 லட்ச ரூபாய் பணம் ஒரு அரசியல்வாதியிடம் சிக்குகிறது. கல்யாண் தனது உண்மையான தோற்றத்தில் அவரைச் சந்தித்தால் மட்டுமே அது திரும்பக் கிடைக்குமென்ற நிலை.

இந்த நிலையில், ஸ்ரீதருக்கு விதிக்கப்பட்ட கெடு முடியும் நாள் நெருங்குகிறது. அதேபோல, கல்யாண் திருமணம் நடைபெறும் தேதியும் நெருங்குகிறது. பணத்தைக் கொடுத்த நபரோ, உடனடியாகக் கண்டுபிடிப்பை ஒப்படைக்காவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். அதையடுத்து, பெண்ணாக மாறியிருக்கும் கல்யாணும் ஸ்ரீதரும் அந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்தார்களா இல்லையா என்று சொல்கிறது ‘பார்ட்னர்’.

உண்மையைச் சொன்னால், இக்கதையைக் கொண்டு வயிறு வலிக்கும் அளவுக்கு ஒரு படத்தைத் தரலாம். ஆனால், ‘பார்ட்னர்’ அப்படியொரு அனுபவத்தைத் தரவில்லை என்பதுதான் சோகம்.

என்னவொரு அலட்சியம்?

ஒரு நகைச்சுவை படத்தில் நடிப்பவர்கள் ஒருபோதும் சிரிக்கக் கூடாது. அந்த காட்சிகளைத் திரையில் பார்ப்பவர்கள் தான் சிரிக்க வேண்டும். அந்த விதியை மறந்துவிட்டு களமிறங்கியிருக்கிறது ‘பார்ட்னர்’ குழு. அதனால், நமக்குத்தான் சிரிப்பு வரவே மாட்டேன் என்கிறது.

ஆதியும் யோகிபாபுவும் செய்யும் ‘அலப்பறைகள்’ அனைத்தும் ’பழைய ஜோக்’ ரகம். அதைவிட அரதப்பழசாக இருக்கிறது ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் கூட்டணியின் செயல்பாடு. இவர்கள் தவிர்த்து பாண்டியராஜன், ரவிமரியா, ஜான் விஜய், முனீஸ்காந்த், மைனா நந்தினி என்று பலரும் ‘இது என் கடன்’ என்பது போலத் திரையில் வந்து போகின்றனர். மொட்டை ராஜேந்திரன் ஒரு காட்சியில் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

நாயகி பாலக் லால்வானியோ, ‘இதுக்கு மேலே நடிச்சா மேக்கப் கலைஞ்சிடும்’ என்ற தொனியில் திரையில் வந்து போயிருக்கிறார்.

இவர்களனவரையும் தாண்டி, நம்மை இருக்கையில் இருத்துவது ஹன்சிகாவின் நடிப்பு. தெனாவெட்டான ஆண் பிள்ளை போல, அவர் தோன்றுமிடங்கள் கொஞ்சமாகச் சிரிக்க வைக்கின்றன. யோகிபாபுவை ’இமிடேட்’ செய்யும் இடங்கள் பூரணமாகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒன்றரை டஜன் நடிப்புக்கலைஞர்களை கேமிரா முன்னால் உலவவிட்ட இயக்குனர், அவர்களுக்கென்று தனித்துவமான பாத்திர வடிவமைப்பைக் கைக்கொள்ளவிலை. அதுவே, கொஞ்சம் கவனிக்கிற வைக்கிற கதையையும் திரைக்கதையில் ‘சவசவ’ என்றாக்கியிருக்கிறது. அது போதாதென்று, ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள் இதில் வரிசை கட்டி வருகின்றன.

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு பளிச்சென்று அனைத்து கலைஞர்களையும் நமக்கு அடையாளப்படுத்துகிறது. பிரதீப் இ.ராகவின் படத்தொகுப்பு, கிடைத்த காட்சிகளைக் கொண்டு முடிந்தவரை கோர்வையாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது. ஆனால், ’இது ஒரு சயின்ஸ் பிக்‌ஷன்’ என்று சொல்லும் அளவுக்கு சசிகுமாரின் கலை வடிவமைப்பு நம்மைக் கவரவில்லை.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் சட்டென்று நம்மைக் கவரவில்லை. பலமுறை கேட்கும் அளவுக்கு, அப்பாடல்களும் விளம்பரப்படுத்தப்படவில்லை. காட்சிகள் கவராத காரணத்தால், பின்னணி இசை பக்கம் நம் கவனம் திரும்பவில்லை.

‘பார்ட்னர்’ படத்தைப் பார்த்து முடித்ததும், ‘ஏன் இவ்வளவு அலட்சியம்’ என்றே முதலில் தோன்றியது. ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வாய்ப்பு வீணாகிவிட்டதே என்ற வருத்தம் பெருகியது.

Partner Tamil Movie Review

மிஸ் ஆகிடுச்சே..!

பலன் அருகே வந்துவிட்டது என்று கைகளை நீட்டும்போது, அது நழுவிச் சென்றால் நம்மையும் அறியாமல் ‘ஜஸ்ட் மிஸ்’ என்போம். அந்த வரிசையில் இன்னொன்றாகி இருக்கிறது ‘பார்ட்னர்’.

நாயகன் எதனால் 25 லட்ச ரூபாய்க்குக் கடன் வாங்கினார் என்றோ, திருட்டுத் தொழிலை ஒரு நிறுவனம் எவ்வாறு கையாளும் என்றோ, ஒரு ஆண் எப்படி பெண்ணாக மாற முடியும் என்றோ, திரைக்கதையில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவை மிகச்சரியாகத் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதற்கு, இந்த கதையைப் படத்தில் நடித்தவர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் 100 சதவிகிதம் நம்பியிருக்க வேண்டும். அது நிகழ்ந்ததா என்று தெரியவில்லை.

நல்ல திரைக்கதையாசிரியர்களின் உதவியோடு, இக்கதையைத் திருத்தி எழுதியிருந்தால் இப்படம் தரும் அனுபவமே வேறு விதமாக இருந்திருக்கும். அது ’நிகழாத அதிசயம்’ வரிசையில் சேர்ந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் சரியான எழுத்துகளைக் கொண்டிருந்தாலும், தமிழில் ‘பாட்னர்’ என்றே பட டைட்டில் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வருத்தங்களோடு, இதுவும் ஒன்றாகச் சேர்கிறது. அனைத்தும் சேர்ந்து, எத்தனை பேரின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகியிருக்கிறது என்ற எண்ணத்தைப் பூதாகரமாக்குகிறது..!

தமிழ் அறிஞர்கள் விருது: விண்ணப்பிப்பது எப்படி?

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *