இது என்ன மாதிரியான படம்?!
திரையுலகில் குறிப்பிட்ட பார்முலாவில் வெளியாகிற படங்கள் வெற்றியைப் பெறுவதைவிட, வழக்கத்திற்கு மாறான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற படைப்புகள் பெரிதாகக் கொண்டாடப்படும். அப்படிப்பட்ட படங்களைத் தந்த இயக்குனர்களுக்கு, நடிகர் நடிகைகளுக்கு, இதர கலைஞர்களுக்கு வழக்கமான மசாலா படங்களில் பங்கேற்பதில் விருப்பம் இராது. அப்படியொருவராகத் தன்னை முன்னிலைப்படுத்தி வருபவர் இயக்குனர் பார்த்திபன்.
வெற்றி தோல்விகள் பல கண்டபோதும் தொடர்ந்து இயங்கிவரும் குணாதிசயமே இவரது சிறப்பம்சம். தற்போது இவரது இயக்கத்தில் ‘டீன்ஸ்’ வெளியாகியிருக்கிறது.
இந்தப் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
பேய் படமா?
பதின்ம பருவத்திற்குள் காலடி எடுத்து வைத்த சிறுவர், சிறுமிகள் சிலர் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் ஒன்றுகூடுகின்றனர். விடுமுறை நாளன்று ஹாயாக பொழுதைக் கழிக்க அவர்கள் விரும்ப, குடும்பத்தினர் சொல்வதோ அதற்கு எதிரான திசையில் இருக்கின்றன.
அடக்குமுறையை உடைக்க விரும்பும் அவர்கள், அடுத்த நாள் ஒரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயில்பவர்கள்.
திங்கட்கிழமையன்று, பள்ளி வரை சென்றவர்கள் முதல் வகுப்பை ‘கட்’ அடித்துவிட்டு வெளியே வருகின்றனர். சீருடையை மாற்றிவிட்டு வேறு உடையில் புறநகர் பகுதிக்குச் செல்லும் பேருந்தில் செல்கின்றனர். வழியில் ‘ட்ராபிக் ஜாம்’ ஆக, பேருந்தில் இருந்து இறங்கி குறுக்கு வழியில் நடந்து போகின்றனர்.
அங்கு ஒரு கோயிலைப் பார்க்கின்றனர். அந்த இடத்தில் மண்டை ஓடு, எலும்புத்துண்டுகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்ததும், பின்னங்கால் பிடறியில் பட அலறியடித்து ஓடுகின்றனர். அப்போது, தங்களுடன் இருந்த ஒரு மாணவன் காணாமல் போனதை உணர்ந்ததும் அதிர்கின்றனர்.
என்ன நடக்கிறதென்று தெரியாமல் காணாமல் போனவரைத் தேடிச் செல்கின்றனர். அப்போது, அவர்களில் சிலர் அடுத்தடுத்து காணாமல் போகின்றனர்.
சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் கண்ட கோயிலின் அருகே இருந்த மரம் முற்றிலுமாகப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அங்கு குழி மட்டுமே இருக்கிறது. தங்களைச் சுற்றி ஏதோ மர்மமாக நடக்கிறது என்று உணர்ந்தபிறகு, அவர்களது பயம் இன்னும் அதிகமாகிறது.
இழந்துவிட்ட தோழர், தோழியர் என்னவானார்கள் என்று தெரிந்துகொள்ள முடியாமல், அந்த இடத்தை விட்டு அகலவும் முடியாமல் திணறுகின்றனர்.
அப்போது, அந்த பதின்ம வயதினருக்கு ஆதரவாக ஒரு முதியவர் வருகிறார். வான்வெளி அறிஞரான அவர், அவர்களது கேள்விகளுக்குப் பதில் அளித்தாரா? அவர்களது தோழர், தோழியர் எங்கிருக்கின்றனர் என்று கண்டறிந்தாரா என்று சொல்கிறது ‘டீன்ஸ்’ படத்தின் மீதி.
டீசர், ட்ரெய்லர், படக்குழுவினரின் பேட்டிகளைப் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வருபவர்களுக்கு, ‘டீன்ஸ் ஒரு பேய்படம்’ என்ற எண்ணமே முதலில் தோன்றும். படத்தின் தொடக்கமும் திரைக்கதை நகர்வும் கூட அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், நேரம் ஆக ஆக ‘இதுவா பேய்ப்படம்’ என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
இறுதியாக உள்ள அரைமணி நேரத்தில், இயக்குனர் பார்த்திபன் நம் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். அந்த பதில் திருப்திப்படுத்துகிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
வித்தியாசமான ஆக்கம்!
கிருத்திகா, விஷ்ருதா, அம்ருதா, பிராங்கின்ஸ்டீன், அஸ்மிதா, ஜான் பாஸ்கோ, சில்வென்ஸ்டீன், பிரசிதா, தீபேஸ்வரன், உதய்பிரியன், கே.எஸ்.தீபன், ரோஷன், ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன் என்று 13 சிறுவர் சிறுமியர் இதில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சில இடங்கள் தவிர மற்றனைத்திலும் அவர்களது நடிப்புத்திறன் அருமையாக வெளிப்பட்டுள்ளது. அதற்காகப் பலமுறை ‘ரிகர்சல்’ செய்து பார்த்திருப்பதும் தெரிய வருகிறது.
இந்தப் படத்தில் அந்த சிறுவர் சிறுமியரோடு பெற்றோர், உறவினர்களாகச் சிலர் நடித்துள்ளனர். பார்த்திபனும் ஒரு பாத்திரத்தில் வந்து போயிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரியின் கேமிரா கோணங்கள் பாடல் காட்சிகளில் பிரமிக்க வைக்கின்றன.
படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சனின் பணியானது, பார்த்திபன் வரும் காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். அதனை மிஞ்சும்விதமாக, முதல் பாதியில் நம்மைப் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார்.
விஎஃப்எக்ஸ் இந்த படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், அதற்கேற்ற வகையில் அது செம்மையாக வெளிப்படவில்லை. அதன்பின்னே பட்ஜெட் பற்றாக்குறை எனும் காரணம் இருக்கலாம்.
திரைக்கதையில் வியக்கவைக்கும் திருப்பங்களின்போது சண்டைப்பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சில்வா, முகேஷின் பங்களிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தான் இயக்கிய படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்ட ஒரு அனுபவத்தை இதில் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன்.
படத்தின் வகைமையைத் தீர்மானிப்பதில் தொடங்கி வசனங்கள், பாத்திரங்களின் உடல்மொழி என்று பலவற்றில் வித்தியாசமான ஆக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரத்தில், தன்னிடம் இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்’ என்ற எண்ணத்தில் சில விஷயங்களைப் படத்தில் புகுத்தியிருக்கிறார்.
இறுதியில், அந்த விஷயங்கள் தான் நம்மை அயர்வுற வைக்கின்றன. ‘இது என்ன மாதிரியான படம்’ என்ற கேள்வியை எழுப்புகின்றன.
தவிர்த்திருக்கலாம்!
படம் பார்க்காதவர்கள், இதற்கு மேல் வரும் தகவல்கள் ‘ஸ்பாய்லர்’ என்பதால் தவிர்ப்பது நல்லது.
பன்னீர் புஷ்பங்கள், துள்ளுவதோ இளமை போன்ற ’டீன் ரொமான்ஸ்’ படங்கள் போன்றில்லாமல், விசில் போன்று ’த்ரில்’ படமாக அமையாமல், பதின்ம வயதினரின் சாகசப் பயணத்தில் இடம்பெறும் ‘ஹாரர்’ அனுபவங்களை மையப்படுத்தியது என்ற எண்ணத்தையே தோற்றுவித்திருந்தன ‘டீன்ஸ்’ சம்பந்தப்பட்ட விளம்பரங்கள். இந்தப் படம் அப்படி அமையவில்லை என்பதே இதன் பலவீனம்.
‘செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்புற காலத்துலயும் பேய் பிசாசு நம்பிக்கையோட சுத்துறீங்களே’ என்றொரு வசனம் முன்பாதியின் தொடக்கத்தில் வருகிறது. அதைத் தாண்டி, இந்த படத்தின் இரண்டாம் பாதிக்கும் முன்பாதிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
கிளைமேக்ஸ் காட்சியை மனதில் வைத்துக்கொண்டு முழுத் திரைக்கதையையும் மாற்றி அமைத்திருந்தால், தற்போது படம் பார்த்தவர்களைத் தொற்றியிருக்கும் அதிருப்தியை முற்றிலுமாகத் தவிர்த்திருக்கலாம்.
’டீன்ஸ்’ படத்தில் ஒரு காதல் ஜோடி காட்டப்படுகிறது. பதினெட்டு வயதைத் தாண்டியவர்களைத் திரையில் காட்டுவதைப் போன்றே, அந்த இடங்கள் ‘ரொமண்டிசேஷன்’ செய்யப்பட்டிருக்கிறது.
போலவே, ‘நாங்கள்லாம் அடல்ட் தெரியுமா’ என்பது போல ‘முந்திரிக்கொட்டை’தனத்துடன் சில வசனங்கள் பேசப்பட்டிருக்கின்றன. பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்தவர்கள், ‘ஏண்டா இவங்களை கூட்டிட்டு வந்தோம்’ என்று அந்த இடங்கள் நொந்துகொள்ள வைக்கின்றன.
அதையும் மீறி, ‘பார்க்க நல்லா கிக்கா இருக்குற; பேசினா ஏண்டா மக்கா இருக்குற’ என்பது போன்ற வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
மேற்சொன்னதில் இருந்தே ‘டீன்ஸ்’ படத்தில் ‘பார்த்திபன்தனம்’ எந்தளவுக்கு முன்னிலை வகிக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். மிகச்சில ரசிகர்கள் அதற்காகவே இப்படத்தைப் பார்ப்பார்கள் என்பது தனிக்கதை.
அவர்களுக்காகவே ‘நீ ஒரு எடுத்துக்காட்டு’ என்று இரண்டு சிறுவர்கள் வசனம் பேசும் பகுதியை அவர் அமைத்திருக்கிறார். ஆனால், அதனை விரும்பாதவர்களுக்கு அது ‘உவ்வே’ ரகமாகவே தெரிகிறது.
’டீன்ஸ்’ படத்தைப் பார்த்து முடித்தபிறகு, அதனை முற்றிலுமாகக் குறை சொல்ல மனமில்லை. அதேநேரத்தில், படத்தில் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது.
இந்தக் கதையில் பார்த்திபன் நடித்திருப்பதும், அவரது பாணியிலான வசனங்களைச் சிறார்கள் பேசுமாறு அமைத்திருப்பதும் அவற்றில் முக்கியமானவை.
90’ஸ் கிட்ஸ்களே ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லத்தக்க திரைக்கதை திருப்பங்களை, காட்சியமைப்புகளைப் பயன்படுத்தியிருப்பதைத் தவிர்த்திருந்தால் ’டீன்ஸ்’ வேறுவிதமான கவனிப்பைப் பெற்றிருக்கும்.
‘உள்ளே வெளியே’ பாணியில் பெரிதாக அலங்காரங்கள் இல்லாத, மிகச்சாதாரணமான கமர்ஷியல் கதையை, முன்னணி நடிகர்களைக் கொண்டு தன் பாணியில் பார்த்திபன் தற்போது தந்தால் நன்றாக இருக்கும்.
‘அபிமன்யு’, ‘வாய்மையே வெல்லும்’, ‘ஜேம்ஸ் பாண்டு’ படங்களைக் கண்டு அவரது ரசிகராக ஆனவர்களிடம், அது போன்ற எதிர்பார்ப்பு இருப்பதில் தவறில்லை.
அப்படிப்பட்ட படங்களை ’தலைவாழை விருந்தாக’ பார்த்திபனிடத்தில் எதிர்பார்க்கிற ரசிகர்களுக்கு, ‘டீன்ஸ்’ தருவதெல்லாம் ’சோளப்பொரி’தான்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
“சினிமாவை விட்டு விலக நினைத்தேன்” – பார்த்திபன் எமோஷனல்!