முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பதும், படம் பார்த்து விட்டு அதனை ரசிகர்களை பார்க்க தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தெலுங்கு சினிமாவில் சாதாரண நிகழ்வு. படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை பொது வெளியில் கூற மாட்டார்கள்.
தமிழ் திரையுலகில் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகரின் படம் வெற்றி பெறுவதற்கு எதிராக சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களையும், தொழில்முறை சமூக வலைதள செயல்பாட்டாளர்களையும் நட்சத்திர நடிகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றசாட்டு இருந்து வருகிறது.
சக நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் புதிய படங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது கூட இங்கு அரிதான ஒன்றாக இருந்து வருகிறது. வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும் சக நடிகர், இயக்குநரின் படங்களை ஊடகங்களிடம், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்காமல் இருக்கலாம்.
ஆனால் இந்தியன்-2 படத்தை ஊடகங்கள், தொழில்முறைசமூக வலைத்தளத்தினர் என எல்லோரும் விமர்சன ஒழுங்குமுறைக்கு அப்பாற்பட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என்கிறது திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் வட்டாரம்.
இந்த நிலையில் பார்த்திபன் ஊடகங்களிடம் பேசுகிற போது “இந்தியன் – 2 படம் பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கிறது நன்றாக இருக்கு என்று சொல்லி இருந்தால் நேற்று இரவே படத்தை பார்த்து இருப்பேன்” எனக் கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் டீன்ஸ். குழந்தைகள் மட்டுமே படம் முழுக்க நடித்திருக்கிறார்கள். கெளரவ வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தை பயாஸ்கோப் நிறுவனமும், அக்கிரா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டி. இமான் இசையமைத்துள்ளார்.
நேற்றைய தினம் குழந்தைகளுடன் டீன்ஸ்படம் பார்த்த பார்த்திபன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “டீன்ஸ் படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த படத்திற்காக நான் கோடி கோடியாக செலவு செய்து இருக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு நான் அடுத்து படம் எடுப்பேனா மாட்டேனா என்கிற அளவிற்கு நான் நிறைய போராட்டத்தை சந்தித்துவிட்டேன். அது மட்டுமில்லாமல் கமலின் இந்தியன்-2 வெளியாகும் தேதியில் இந்த படத்தை வெளியிடலாமா என பல விதமாக யோசித்தேன்” என்றார்.
தொடர்ந்து “இந்தியன் 2 திரைப்படம் ஓடாது என்று தெரிந்து தான் டீன்ஸ் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியீட்டீர்களா?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பார்த்திபன், “இதற்கு நான் சிரித்தாலும், நக்கலாக சிரித்தார் என்று தான் செய்தியில் போடுவார்கள். இந்தியன்-2 படம் பார்த்தவர்கள் படம் சூப்பராக இருக்கு என்று சொல்லி இருந்தால், நான் நேற்று இரவே படத்தை பார்த்து இருப்பேன். ஒரு படம் திரைக்கு வந்துவிட்டது என்றால், அதன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. இந்தியன்-2 படம் வெளியாகும் அதே தேதியில் படத்தை வெளியிட வேண்டாம் தியேட்டர்கள் கிடைக்காது என்று எனக்கு சொல்லப்பட்டது. இதை எல்லாம் தாண்டி எனக்கு படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் படத்தை துணிந்து வெளியிட முடிவு செய்தேன். ஏன் என்றால் டீன்ஸ் படம் இந்தியன் படம் போல ஊழல் பற்றி கதை இல்லை என்பதால் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
அது மட்டுமில்லாமல் என் படம் இன்னும் பத்து பைசாவிற்கு கூட வியாபாரம் ஆகவில்லை. ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை கேட்டவர்களிடம் தியேட்டரில் வெளியான பிறகு பார்த்துவிட்டு வாங்குங்கள் என்று சொன்னேன்” என்றார்.
இந்தியன்-2 படத்தை பார்க்காமலே அந்தப் படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பரா இருக்கு என்று கூறியிருந்தால் இரவே படம் பார்த்து இருப்பேன் என பார்த்திபன் நேரடியாக படத்தை பற்றி தனது கருத்தை கூறாமல் பார்வையாளர்களை பகடையாக பயன்படுத்தி படம் நன்றாக இல்லை என்கிற கருத்துருவாக்கத்தை உருவாக்குவது ஒரு வகையான வஞ்சப்புகழ்ச்சி என்கின்றனர் இயக்குநர்கள் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
மக்களவை காங்கிரஸ் துணை தலைவராக கெளரவ் கோகோய் நியமனம்!
விக்கிரவாண்டி வெற்றி… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா
எந்த நடிகர் நடிக்கற படமா இருந்தாலும் முதல்ல கதைதான் முக்கியம், அதுக்கு ஏத்தமாதிரி நடிகர்கள் மாறனும்னு வந்தாதான் படம் ஓடும். இப்பல்லாம் படம் ரிலீசான சில மணிநேரத்துலயே விமர்சனம் வந்து உலகம் பூரா கலக்கிருது, அதுக்கு ஏத்த மாதிரி படம் பண்ணுறவங்கதான் சர்வ ஜாக்கிரதையா இருக்கனும்னு எப்பதான் புரிஞ்சுக்குவாங்களோ?