எது செய்தாலும் அதனை வித்தியாசமாக அல்லது எதிர்மறையாக யோசித்து செயல்படுத்துவது இயக்குநர் பார்த்திபன் வழக்கம்.
அவரது நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7, இரவின் நிழல் போன்ற படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார் பார்த்திபன்.
அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ஒரு புத்தகத்தை விரித்து வைத்து அதில் மயிலிறகு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இதற்குள் அடங்கியுள்ள டைட்டிலை கெஸ் பண்ணுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதோடு ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள் இருக்கும் திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பை கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் பார்த்திபன்.
இதனை தொடர்ந்து பல்வேறுவிதமான தலைப்புகளை அவரவர் சிந்தனைக்கு ஏற்ப தெரிவித்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன், “என் தலைப்புக்கு பக்கம் பக்கமாய் மிகப் பக்கமாய் 51 ஆம் பக்கம், 52 ஆம் பக்கம், 53 ஆம் பக்கம் என நெருங்கிவிட்ட தலைப்புகள். ஆனால் கதைக்குள் பொருத்தி நான் நிறுத்திய தலைப்புடன் உங்களின் யூகம் பொருந்துகிறதா என்று பார்த்துவிட்டு நாளை எனதை அறிவிப்பேன். அதுவரை உங்களின் அறிவுத்திறனை ஆராதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார். ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்று தனது புதிய படத்துக்கு தலைப்பு வைத்துள்ளார்.
இராமானுஜம்