Actor Robo Shankar fined

ஹோம் டூரில் சிக்கிய கிளிகள்: நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம்!

சினிமா

அனுமதியின்றி வீட்டில் அலெக்சாண்டிரியன் கிளி வளர்த்ததால் – நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகரை சேர்ந்தவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர்.

இவர் மாரி,வீரம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் யூடியூப் ஹோம் டூர்க்காக ரோபா சங்கர் வீட்டை வீடியோ எடுத்த போது, அதில் அலெக்ஸாண்டரியன் கிளி இருப்பது காட்சிப்படுத்தப்பட்டது. 

இதனை கண்ட வனத்துறையினர் கடந்த வியாழக்கிழமை  அவரது வீட்டில் நுழைந்து வீட்டில் அனுமதியின்றி வளர்த்த 2 அலெக்சாண்டரியன் பச்சைக்கிளிகளை மீட்டனர்.

பின்னர் பறிமுதல் செய்த கிளிகளை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி இலங்கைக்கு சென்றிருந்ததால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் ரோபோ சங்கர் வனத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் தோழி ஒருவர் பணி மாறுதல் காரணமாக வேறு ஊருக்கு செல்வதால் வீட்டில் வளர்த்த கிளியை எங்களை வளர்க்கச்சொல்லி அன்பளிப்பாக கொடுத்ததாகவும்,  இரு கிளிகளுக்கும் ‘பிகில்- ஏஞ்சல்’ என பெயர் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வகையான கிளிகளை வளர்க்க  வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் இதற்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் ரோபோ சங்கர் மீது வழக்கு ஏதும் பதியாமல் 2.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

பின்னர் ரோபோ சங்கர் அபராத தொகையை செலுத்தியதுடன், இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில் நான்காவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972இல் பட்டியலிடப்பட்ட இந்திய பறவையான அலெக்சாண்டரின் கிளி வளர்ப்பவர்கள் பிடிப்பட்டால், 5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

வசதி படைத்தவர்கள் சட்டம் தெரியாமல் பச்சைக்கிளி வளர்த்தால் இணக்க கட்டணம் என்ற அடிப்படையில் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மிக விரைவில் லவ் பேர்ட்ஸ் எனப்படும் பறவைகளையும் பட்டியலில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

பழனிசாமி பெயரை கூட சொல்ல விரும்பவில்லை: ஓ பன்னீர்செல்வம்

விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *