புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்திடம் இருந்து பிரதமர் மோடி நேற்று பெற்றுக்கொண்டார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
“இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்…தமிழன்டா… தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
நடிநர் ரஜினிகாந்தின் தமிழன்டா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவை பிரதமர் மோடி மேற்கோள் காட்டி, “தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பிரியாணிக்குப் பிறகு சோடா குடிப்பவரா நீங்கள்?