கலைமூச்சை நிறுத்திக் கொண்ட கூத்துப் பறவையின் இறுதி காலம்!

சினிமா

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமான, ஊடக வெளிச்சம் பெற்றவர் நெல்லை தங்கராஜ். பிப்ரவரி 3 அன்று அதிகாலை காலமானார்.

அவரது மரணத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் வெண்புறா சரவணன் தனது முகநூல் பக்கத்தில் நெல்லை தங்கராஜை பற்றி எழுதியிருக்கும் தகவல்கள் மனதை உலுக்குவதாக உள்ளது.

அந்தப் பதிவில், “நெல்லை – பாளையங்கோட்டை பகுதியின் ஒரு எளிய வெள்ளரி வியாபாரி. மிகச்சிறந்த கூத்துக்கலைஞர் என்பதை அறியாமல்தான் பலரும் அவரிடம் வெள்ளரிகளை வாங்கிச் சென்றிருப்பார்கள்!…

திருவிழா காலங்கள் உழைக்கும் மக்களுக்கு வருமானம் செலவாகும் நாட்கள்தான் என்றாலும், பெருமகிழ்ச்சிக்குரிய ஒன்றாகவே காலங்காலமாக இருந்துவரும் அதேவேளையில்… கூத்து, நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வருமானங்கள் வரவாகும் நாட்களாகவும் அவை இருக்கின்றன.

சோகம் என்னவென்றால், திருவிழா இல்லாத காலங்களில் இந்த கலைஞர்கள் கையறு நிலைக்கு சென்றுவிடுவதும், கிடைத்த தொழில்களோடு மல்லுக்கட்டுவதுமே வாழ்க்கையாகிவிடுகிறது.

அப்படியொரு அற்புதமான கூத்துக்கலைஞர்தான் நெல்லை தங்கராஜ். திருவிழா காலங்களில் கூத்துக்கட்டி மக்களை மகிழ்விப்பதும், திருவிழா இல்லாத காலங்களில் வெள்ளரித் தோட்டக் காவலாளியாகவும், வெள்ளரிப்பிஞ்சுகள் விற்கும் வியாபாரியாகவும் சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தவேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

pariyerum perumal nellai thangaraj passed away

சுருக்கமாக சொல்வதென்றால், வருமானத்தின் ஒரு பகுதியை திருவிழாக்களுக்காக செலவிடும் மக்கள்… அதிலிருந்து வருமானத்தை ஈட்டும் கலைஞர்கள் என இந்த சுழற்சிமுறைதான் தங்கராஜ் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான வாழ்வாதாரம் நிலைபெற காரணமாக இருக்கின்றன.

விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எப்போதாவது ஒரு வெளிச்சப்புள்ளி தென்படுவதைப்போல், மாரி செல்வராஜ் என்ற திரைஇயக்குநர் வடிவில் ஒரு வெளிச்சப்புள்ளி ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தங்கராஜ் வாழ்விலும் பாய்ந்தது.

அந்தப் படத்தின் கதைக்கரு வேறு ஒரு முக்கியமான பிரச்சனை பற்றியதாக இருந்தாலும், தங்கராஜ் தோன்றும் கதாபாத்திரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் குறிப்பாக கூத்துக்கட்டும் கலைஞர்கள் குறித்த பொதுப்புத்தியின் அழுக்குகளை வெளிப்படுத்தும் மிக முக்கியமான பகுதியாகும்.

திரைக்கலைஞர்கள் நடிக்கத் தயங்கும் பாத்திரத்தை மிக இயல்பாகவும், வலியை ஏற்படுத்தும் வகையிலும் நடித்து கவனம் பெற்றார் தங்கராஜ்.

அதன்பிறகும் அவரது கூத்துக்கலை மற்றும் வெள்ளரி வியாபாரி வாழ்க்கை எப்போதும்போல் தொடர்ந்தது. தான் ஒரு சினிமா நடிகனாகிவிட்டோம் என்ற கர்வமோ, அதுவே இனி நிரந்தரம் என்ற எதிர்பார்ப்போ இல்லாத ஒரு கலைஞராகவே இருந்தார் தங்கராஜ். (அவரை நடிக்க சம்மதிக்க வைக்கவே பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது என்று மாரி செல்வராஜ் சொல்லியிருந்தார்).

இந்த சூழலில்தான் தமுஎகச ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் கலை இலக்கிய விருதுகளில், ‘நாட்டுப்புறக் கலைச்சுடர்’ (2020) விருதை கூத்துக்கலைஞர் தங்கராஜுக்கு வழங்குவது என்று மாநிலக்குழுவில் முடிவு செய்து அறிவித்தோம்.

மற்ற எல்லா விருதாளர்களுக்கும் மாநிலக்குழு முடிவை தெரிவிப்பதுபோல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை தங்கராஜ் அவர்களுக்கு அந்தச் செய்தியை சொல்வது.

எனவே, அலைபேசி வசதியில்லாத அந்த கலைஞரின் வீட்டைக் கண்டுபிடித்து, விருதுக்கு அவர் தேர்வான செய்தியைச் சொல்லும் பொறுப்பு அன்றைய தமுஎகச மாநில துணைச்செயலாளரான இரா.நாறும்பூநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

pariyerum perumal nellai thangaraj passed away

அவரும் அலைந்து திரிந்து ஒருவழியாக பாளையங்கோட்டை இளங்கோ நகரில் தங்கராஜ் வீட்டைக் கண்டுபிடித்து அவரிடம் செய்தியை சொன்னபோது மகிழ்ச்சியையும் நன்றியையும் நெகிழ்சியுடன் தெரிவித்தார் தங்கராஜ்.

ஆனால், மின்விளக்கு வசதிகூட இல்லாத ஒரு பழமையான குடிசை வீட்டில் அவர், அவரது இணையர் பேச்சிக்கனி, அவர்களின் ஒரே மகள் அரசிளங்குமரி ஆகியோர் வசிப்பதைப் பார்த்த நாறும்புநாதனுக்கு அது உறுத்தலாக இருக்கவே, வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக 40ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை மகிழ்விக்கும் ஒரு மகத்தான கலைஞரின் வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்பதையும், அவருக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும், குறிப்பாக தரமான வீடு அவசியம் என்பதைக் குறிப்பிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.

அத்திப்பூத்தாற்போல், எளிய மக்கள்மீது பரிவும் அக்கறையும் கொண்ட அரசு அதிகாரிகள் இருப்பதற்கு அடையாளமாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மீது அக்கறை கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அதில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்து அவரது முகவரி கேட்டு அடுத்த சிலநிமிடங்களில் பதில் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மறுநாளே மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரையும் தங்கராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு குடிசை வீட்டை அகற்றிவிட்டு புதுவீடு கட்டிக்கொள்ள அரசு சார்ந்த அனைத்துவித உதவிகளையும் செய்தது மட்டுமின்றி, மாதாந்தர உதவித்தொகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளுக்கு வேலை என தங்கராஜ் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்குப் பேருதவியை அடுத்தடுத்து செய்தார்.

நாறும்பூநாதனும் அதோடு நின்றுவிடாமல் புதுவீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும், பல்வேறு துறைசார்ந்த நண்பர்களின் நிதிஉதவி மற்றும் கூட்டு செயல்பாடுகளை இணைத்ததால், ஒரு குறைந்தபட்ச அடிப்படை வசதிகளுடனான வீடு கம்பீரமாக எழுந்து நின்றது!

pariyerum perumal nellai thangaraj passed away

14-4-2022 அன்று நடைபெற்ற தங்கராஜ் இல்லத் திறப்புவிழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நாறும்பூநாதன் மற்றும் தமுஎகச நெல்லை மாவட்டத் தோழர்களுடன் நானும் பங்கேற்றேன். ஓடி ஓடி வரும் ஊடகங்களிடம், தமுஎகசவின் விருது வழியாக இந்த நெடுங்காலக் கனவு கைகூடியதை மனம் திறந்து சொல்லிக்கொண்டே இருந்தார். குறிப்பாக நாறும்பூநாதனை “நாறும்பூ சார் என் தகப்பன் மாதிரி, இது எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்” என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.

நேற்று (நேற்று முன் தினம் – 3-2-2023) உடல்நலக்குறைவால் நிகழ்ந்த அவரது மரணச் செய்தியை நாறும்பூநாதன் தெரிவித்தவுடன் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். 40 ஆண்டுகளாக கூத்துக்கட்டும் ஒரு மாபெரும் கலைஞர் மின்விளக்கு ஒளிராத ஒரு பாழுங்குடிசையில் உழன்ற நிலை மாறி ஓராண்டுகூட நிறைவடையாமல் தனது மூச்சையும் மூச்சிற்கும் மேலான கலையையும் நிறுத்திக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனியில் தைப்பூச தேரோட்டம்!

வடலூர் ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *