பரினிதி சோப்ரா – ராகவ் சதா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை (cousin sister) பரினிதி சோப்ரா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதாவின் திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பரினிதி சோப்ரா – ராகவ் சதா
இங்கிலாந்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2009 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பரினிதி சோப்ரா ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் மக்கள் தொடர்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். பின்னர் அவர் அதே நிறுவனத்தின் மூலம் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன்மூலம் 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
தற்போது சாம்கிலா, கச்சுலா கில் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
ராகவ் சதா ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவில் சதாவும் இடம்பெற்றிருந்தார்.
மேலும் ஆம் ஆத்மியின் பொருளாளராக பணியாற்றிய சதா தற்போது கட்சியின் வழக்குகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம்
நடிகை பரினிதி மற்றும் எம்.பி. ராகவ் சதா இருவரும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இருவரும் காதல் விவகாரம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
குறிப்பாக இருவரும் மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்கள், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியின் போது இருவரும் மைதானத்தில் எனதொடர்ந்து ஒன்றாக பொதுவெளியில் தென்பட்டனர்.
இவ்வாறு பொதுவெளியில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக தென்பட்டதும் பேசுபொருளானது. தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களது காதலை கடந்த மே 13 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
பிரம்மாண்டமாக திருமணம்
இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ராகவ் ஆம் ஆத்மி எம்.பி என்பதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தாஜ் லேக் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற திருமண விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தாஜ் லேக் பேலஸ் ஹோட்டலில் இருந்து தனி படகு மூலம் மணமகன் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். படகு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மணமகனின் முகமும் மலர்களால் மறைக்கப்பட்டிருந்தது. மற்றொரு படகில் பேண்ட் வாத்தியங்கள் ஒலித்தபடி மணமகனை பின் தொடர்ந்து வந்தது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிற பிரபலங்கள்: இவர்களைத் தவிர்த்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பிரியங்கா சோப்ராவின் தாய், நடிகை பாக்யஸ்ரீ, டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பரினிதி சோப்ராவின் சகோதரி பிரியங்கா சோப்ரா இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரியங்கா தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பரினிதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று காலை திருமணப் புகைப்படங்களை பரினிதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கோல்டன் நிற ஆடையில் மிகவும் எளிமையான ஒப்பனையுடன் இருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. பரினிதி அணிந்திருந்த ஆடைகள் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்ததாகும். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
டெண்டர் முறைகேடு வழக்கு: அக்டோபர் 17-க்கு ஒத்திவைப்பு!
பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்