கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிறது. இன்றளவும் அழியாக்காவியமாக நிலைத்து நிற்கிறது இந்த ‘பராசக்தி’. பேசமால் இருந்த தமிழ் சினிமாவை தன்னுடைய அனல் பறக்கும் வசனங்களால் பேச வைத்தவர் கலைஞர்.
‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம், இன்றளவும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்திய சினிமா எவ்வளவோ மாற்றம் பெற்று விட்டது. அடித்தட்டு மக்களின் குரல்கள் சினிமாவில் அழுத்தமாக ஒலிக்கத் துவங்கிவிட்டது. ஆனால், அது அத்தனைக்கும் முன்னோடியான முதல் சினிமா ‘பராசக்தி’.

இந்திய சினிமா வரலாற்றைப் பேசும் எவரும் பராசக்தியை நிராகரித்து விட்டுப் பேச முடியாது என்பது கலைஞர் எழுதிவைத்த சினிமா கோட்பாடு.
‘பராசக்தி’ என்பது வெகுமக்கள் வழிபடும் கடவுளின் பெயர். ஒரு கடவுளின் பெயரை வைத்து ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்து கடவுளுக்கு எதிராக அல்ல, கடவுளின் பெயரால் சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு எதிராக ஆன்மீகவாதிகளுக்கு கலைஞர் எடுத்த பாடம்தான் ‘பராசக்தி’. அதன் தேவை இன்றளவும் உள்ளதால்தான் அழியாக்காவியமாக ‘பராசக்தி’ இன்றும் நிலைக்கிறது.
இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன்படி ‘பராசக்தி’ திரைப்படம் ஹெச்டி பிரிண்டில் தயாராகவுள்ளது. நேஷனல் பிக்சர்ஸ் என்ற பெயரில் பி.ஏ.பெருமாள் முதலியார் மற்றும் ஏ.வி.மெய்யப்பன் ஆகியோர் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு உரிமையை முறைப்படி பெற்று, பின்பு திமுக தகவல் தொழில் நுட்ப அணியினரால் ஹெச்டி பிரிண்டாக உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படும் என திமுக தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்