parasakthi title to whom? : தங்களது 25வது படங்களுக்கு விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பராசக்தி என்று டைட்டில் வைத்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகள் நிலவும் தமிழ் திரையுலகில், கடந்த சில ஆண்டுகளாக டைட்டில் சர்ச்சையும் தலைவிரித்தாடுகிறது. அந்த வரிசையில் இணைந்துள்ளன சிவ கார்த்திகேயன் – விஜய் ஆண்டனி படங்கள்.
கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரின் தீப்பொறி பறக்கும் வரிகளில், சிவாஜி கணேசனின் அசாத்திய நடிப்பை அறிமுகப்படுத்திய திரைப்படம் ’பராசக்தி’. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள அப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
இந்த நிலையில் அருவி, வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள 25வது படத்திற்கு தமிழில் ’சக்தி திருமகன்’ என்றும், தெலுங்கில் ’பராசக்தி’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர். இதற்கான போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

அதே போன்று மாலை 4 மணிக்கு சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக வெளியாகும் திரைப்படத்திற்கும் பராசக்தி என்ற டைட்டிலும் போஸ்டர் வெளியானது.

இரண்டு படங்களுக்கு ஒரே டைட்டிலை வைத்து போஸ்டர் வெளியானதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
இதனையடுத்து தெலுங்கில் விஜய் ஆண்டனி பராசக்தி படத்தின் தலைப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதமே பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டார்.

அதேவேளையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தை தயாரிக்கும் டவுன் பிக்சர்ஸ் நிறுவனம் நாங்களும் இந்த படத்தின் தலைப்பை கடந்த 11ஆம் தேதி முறையாக பதிவு செய்து பெற்றுள்ளோம் என்று அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும் பராசக்தி பட தலைப்பை சுதாவிற்கும், சிவகார்த்திகேயனுக்கும் வழங்கியதாக குறிப்பிட்டு ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து தெரிவித்திருந்தது.
இருதரப்பில் இருந்தும் மாறி மாறி தங்கள் ஆதாரத்தை தெரிவித்து வரும் நிலையில், இதற்கு உடனடி தீர்வு காணவும் முடிவு செய்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.