உதயசங்கரன் பாடகலிங்கம்
அடிவயிற்றில் சுரக்கும் ‘பயம்’!
ஜோஜு ஜார்ஜ், மலையாளத் திரையுலகில் சமீபகாலமாகப் பெருவெற்றிகளைத் தந்து வரும் ஒரு நட்சத்திரம். தொண்ணூறுகளின் பிற்பாதியில் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றி, பின்னர் உதவி இயக்குனராகி, அதன் வழியே குணசித்திர நடிகராக மாறி, ‘ஜோசப்’ படத்தையடுத்து ஒரு நாயகனாக உருவெடுத்திருப்பவர்.
‘ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷோடு நடித்த இவர், இப்போது மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் கமலோடு இணைந்திருக்கிறார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக மலையாளத் திரையுலகில் இருந்துவரும் ஜோஜு ஜார்ஜ் முதன்முறையாக படம் இயக்கியிருக்கிறார். ‘பணி’ எனும் அப்படம் இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்கு வழங்குகிறது?
திருச்சூர் ‘கேங்க்ஸ்டர்ஸ்’!
கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா நடைபெறும் நேரம். ஒரு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்துவரும் டான் செபாஸ்டியன் (சாகர் சூர்யா), சிஜு (ஜுனைஸ் விபி) இருவரும் அவசர அவசரமாகக் கிளம்புகின்றனர். வெளியூர் சென்றுவிட்டு வருவதாகச் சொல்கின்றனர்.
ஆள் நடமாட்டமிக்க நகரின் மையப்பகுதியில், நில விற்பனை தொடர்பாக ஒரு நபரை அவர்கள் இருவரும் கொலை செய்கின்றனர். சிறிது நேரம் கழித்து, அவர்களே அந்த நபர் கொலையாகிக் கிடந்ததை முதன்முறை பார்ப்பது போலக் கத்துகின்றனர். கூட்டம் கூடுகிறது.
அதேநேரத்தில், போலீஸ் கமிஷனர் ரஞ்சித் வேலாயுதன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, திருச்சூரைச் சேர்ந்த ரவுடிகளே மாநிலத்தில் நிகழும் குற்றங்களுக்குக் காரணமாக இருப்பதாகச் சொல்கிறார். அதில் ஒருவரான டேவியின் (பாபி குரியன்) மீது ஒரு கண் இருக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார். அவரோடு சம்பந்தப்பட்ட ’மங்கலத்’ குடும்பத்தினரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்கிறார்.
பயிற்சி முடித்துவிட்டு வந்த ஐபிஎஸ் அதிகாரி கல்யாணியும் (சாந்தினி ஸ்ரீதரன்) அங்கிருக்கிறார். அவரும், திருச்சூரில் செல்வாக்கோடு திகழ்ந்துவரும் ‘மங்கலத்’ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.
நகரின் மையப்பகுதியில் ஒரு நபர் கொலையாகிக் கிடந்த தகவல் தெரிந்ததும், கமிஷனர் உட்பட மூத்த அதிகாரிகள் அனைவரும் அங்கு விரைகின்றனர். அப்போது, டானும் சிஜுவும் தாங்களே அந்த கொலையைப் பார்த்ததாக போலீசிடம் சொல்கின்றனர். டான் கேர்ள்ப்ரெண்டும் (மெர்லட் ஆன் தாமஸ்) அவர்களோடு இருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு மனைவி கௌரி (அபிநயா) உடன் செல்கிறார் மங்கலத் குடும்பத்தைச் சேர்ந்த கிரி (ஜோஜு ஜார்ஜ்). அங்கு வரும் டான், கௌரியைப் பார்க்கிறார். அவரைச் சீண்டுகிறார். அதனை அறியும் கிரி, டானையும் சிஜுவையும் வெளுத்தெடுக்கிறார்.
அதன்பிறகே, திருச்சூரில் கிரி, டேவி மற்றும் அவர்களது நெருங்கிய சகாக்களுக்கு (பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர்) இருக்கும் செல்வாக்கு இருவருக்கும் தெரிய வருகிறது.
இருந்தாலும், ஆத்திரம் அவர்கள் கண்களை நிறைக்கிறது. அடுத்த நாள், இருவரும் கிரியின் வீட்டை நோட்டமிடுகின்றனர். சட்டென்று வீட்டுக்குள் புகுகின்றனர். அந்த நேரத்தில், அந்த வீட்டில் கௌரியும் ஒரு வேலைக்காரப் பெண்மணியும் மட்டுமே இருக்கின்றனர்.
சிறிது நேரம் கழித்து, அந்த வீடே பரபரப்பாகிறது. கௌரியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தகவல் பரவுகிறது. பதற்றத்தோடு வீடு திரும்புகிறார் கிரி.
கௌரி தன் வாழ்வில் துளி கூட வலியையும் வேதனையையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே குழந்தைப்பேறு வேண்டாம் என்று முடிவெடுத்தவர் கிரி (இத்தகவல் கதையில் நேரடியாகச் சொல்லப்படவில்லை). அப்படிப்பட்ட தன் மனைவிக்கு இப்படியொரு நிலைமை நேர்ந்ததும், அதற்குக் காரணமானவர்களைக் கிரி என்ன செய்தார்? இப்படியொரு காரியத்தைச் செய்தபின்னர் அவ்விருவரும் என்னவானார்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதிப்பாதி.
மிகச்சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இரண்டு இளைஞர்கள் கொடூர கொலையாளிகளாக மாறுவதைக் காட்டும்போது சுரக்காத பயம், கௌரியின் வீட்டுக்குள் அத்துமீறி அவர்கள் நுழையும்போது நம் அடிவயிற்றில் பிறக்கிறது. அதன்பிறகு, படத்தின் இறுதி வரை அந்த பயம் மெலிதாகக் காட்சிகளில் நிறைந்து நிற்கிறது. அதுவே இதன் யுஎஸ்பி.
அந்த வகையில், ’அடிபொலி’யான ஒரு ‘கேங்க்ஸ்டர் க்ரைம்’ திரைப்படமாக இருக்கிறது ‘பணி’.
சிறப்பான ‘பெர்பார்மன்ஸ்’!
கிரியாக வரும் ஜோஜு ஜார்ஜ், இக்கதையின் மையப்புள்ளியாக இருக்கிறார். அவரது நடிப்பில் லேசாக ‘கமல்தனம்’ தெரிகிறது. ஒரு ‘பெரும்புள்ளி’ என்பதனை நம் மனதில் பதிய வைக்கும்விதமாக, அவரது உடல்மொழி அமைந்திருப்பது சிறப்பு.
அபிநயா இதில் ஜோஜுவின் மனைவியாக வருகிறார். அழகுப்பதுமையாகத் தோன்றி, அப்பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
சீமா இதில் ஜோஜுவின் தாயாக வருகிறார். ‘இது ஒரு ஆக்சிடெண்ட்னு நினைச்சுக்கணும்; வாழ்நாள் முழுக்க இதை மனசுல வச்சிட்டு இருக்கக்கூடாது’ என்று பலாத்காரத்திற்கு ஆளான மருமகளிடம் அவர் பேசுவதாக வரும் காட்சி, இப்படத்தின் ’ஹைலைட்’களில் ஒன்று.
‘555’ நாயகி சாந்தினி ஸ்ரீதரன், ‘காதல் தி கோர்’ படத்தில் வந்த பிரசாந்த் அலெக்சண்டர், ‘ரசவாதி’ வில்லன் சுஜித் சங்கர் என்று இதில் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகங்களாகச் சிலர் இருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து பாபி குரியன், அபயா ஹிரண்மயி, ரஞ்சித் வேலாயுதன், லங்கா லட்சுமி, சோனா மரியா, மெர்லெட் ஆன் தாமஸ் என்று சுமார் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ‘லெப்ட் ஹேண்ட்’டில் டீல் செய்திருக்கின்றனர் இளம் குற்றவாளிகளாகத் தோன்றியிருக்கும் சாகர் சூர்யா மற்றும் ஜுனைஸ்.
பயம் சிறிதும் தென்படாதவாறு நடிப்பது அவ்வளவு சாதாரணமல்ல. கண்களில் தொடங்கி புஜங்கள், கழுத்து என்று உடல் முழுவதிலும் அதனை இருவரும் வெளிப்படுத்தியிருப்பது அருமை.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜின் ஒளிப்பதிவு இப்படத்தின் பெரும்பலம். நடிகர் நடிகையரின் உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்து ‘குளோஸ் அப்’ ஷாட்கள் அதிகமிருந்தாலும், கதை நிகழும் சூழலைத் தெளிவாக ஒரு வரைபடமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு தொடக்கத்தில் கொஞ்சம் ‘ஜெர்க்’ தந்தாலும், பின்பாதியில் வரும் ‘சேஸிங்’ காட்சிகளில் படத்தோடு நம்மை ஒன்றவைப்பதாக உள்ளது.
ஒரு ‘கேங்க்ஸ்டர் க்ரைம்’ படத்தை ரசிகர்களோடு பிணைப்பது, அதன் உள்ளடக்கத்தில் இருக்கும் அலங்கார அம்சங்கள் தான். ஆனால், இப்படத்தில் ‘அடுத்து என்ன நடக்குமோ’ என்கிற பயம் நம்மைத் திரையோடு பிணைக்கிறது. அதனை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது விஷ்ணு விஜய் – சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, முதன்முறையாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ். முதல் பாதியில் நாம் எதிர்பாராத சில காட்சிகள், திருப்பங்கள் இருக்கின்றன. ஆனால், பின்பாதி அதற்கேற்றவாறு அமையவில்லை. அதுவே இப்படத்தின் பெரும் குறை.
அதேநேரத்தில், ஒரு இயக்குனராக அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ஒரு ‘கொரிய திரைப்படம்’ பார்த்ததற்கு ஈடான உணர்வு ஏற்படுகிறது. அது சாதாரண விஷயமல்ல.
குறிப்பிடத்தக்க விஷயங்கள்!
இனி சொல்லப்போகும் விஷயங்கள் ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், ‘அது வேண்டாமே’ என்பவர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
’வேட்டையாடு விளையாடு’, ‘நான் மகான் அல்ல’ பாணியில், ‘பணி’யில் வில்லன் பாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ். அது முன்பாதியில் நன்றாகவே பலன் தந்திருக்கிறது.
ஆனால், பின்பாதியில் அவர்கள் நாயகன் தரப்போடு ‘கண்ணாமூச்சி’ ஆடுகின்றனர். அது ஏன் என்பது சொல்லப்படாததால், அக்காட்சிகள் ‘சவசவ’ என்று நகர்கின்றன.
‘க்ரைம்’ வகைமைப் படம் என்பதற்கேற்ப, இதில் கோரம் நிறைந்த ஷாட்கள் இருக்கின்றன. அது படம் முழுக்க நிறைந்திருக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம். ஆனால், கிளைமேக்ஸ் காட்சி அந்த எண்ணத்தை விரட்டியடித்து விடுகிறது.
அபிநயா பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதாக வரும் காட்சி, ‘கொஞ்சம் ஓவரா இருக்கோ’ என்ற எண்ணம் துளிர்விடும்போது முடிந்து போகிறது. பிற்பாடு அந்த பாத்திரம் அதன் இயல்பில் இருப்பதாகச் சொல்லியிருப்பது, ஒரு அருமையான ‘மெசேஜ்’.
அபிநயா பாத்திரம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான பதிலையும், வேறு சில பாத்திரங்கள் பேசுகிற வசனங்கள் மூலமாகச் சூசகமாக உணர்த்தியிருக்கும் உத்தி ‘சூப்பர்’!
இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் சம்பந்தப்பட்டவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாக அதிகக் காட்சிகள் இல்லை. ஆனால், தொடக்கத்தில் வரும் மிகச்சில காட்சிகளே அந்த பின்னணியைச் சொல்லிவிடுகின்றன.
அதேநேரத்தில், குற்ற உலகில் நுழையும் இரண்டு இளைஞர்களின் உலகம் இதில் போதுமான அளவு வெளிப்படவில்லை. பின்னே விளையும் பாதிப்புகள் குறித்தோ, தம்மைச் சார்ந்தவர்கள் குறித்தோ அக்கறைப்படாமல் அவர்கள் செயல்படுவது பற்றிய விளக்கங்கள் இல்லை.
அடியாட்கள் பலத்தோடு இருக்கும் சிலரை ‘ஜஸ்ட் லைக் தட்’ அவர்கள் நெருங்குவதாகச் சொல்வது நம்பும்படியாக இல்லை. அங்கெல்லாம் ‘லாஜிக் துருத்தல்கள்’ தலை நீட்டுகின்றன. இப்படியொரு கதையில் போலீஸ் தரப்பும் வலுவாகக் காட்டப்பட்டிருக்க வேண்டும். அது விடுபட்டிருக்கிறது.
நாயகன் தரப்பு மேற்கொள்ளும் ‘க்ரைம்’ செயல்பாட்டை சிலாகிக்கும் வகையில் இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனைச் சரிப்படுத்தும்விதமாகச் சில விஷயங்களைச் சேர்த்திருக்கலாம் அல்லது பின்கதையாகச் சில நிகழ்வுகளைக் கோர்த்திருக்கலாம். அது விடுபட்டிருப்பது ஒரு குறையே. அதேபோல, இதில் சொல்லப்பட்டிருக்கும் கதையில் கொஞ்சம் கூடப் புதுமையில்லை என்பதும் சிலரை அசூயைக்கு உள்ளாக்கலாம்.
அனைத்தையும் தாண்டி, வழக்கத்திற்கு மாறானதொரு திரையனுபவத்தை ‘பணி’ தருகிறது என்பதில் ஐயம் தேவையில்லை. ’பணி’ என்றால் வேலை என்று அர்த்தம். ‘ரவுடித்தனம்’ மட்டுமே பணி என்றிருப்பவர்களைக் காட்டுகிறது இப்படம். ’அது பரவாயில்லை’ என்பவர்கள், ’பணி’யைப் பொழுதுபோக்குக்காகப் பார்க்கச் செல்லலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?
டாப் 10 செய்திகள் : பள்ளிகளுக்கு விடுமுறை முதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் வரை!
கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!
பிக் பாஸ் 8 ; வைல்டு கார்ட் எண்ட்ரி தரும் பிரபலங்கள் !
14 மாவட்டங்களில் மழை… வானிலை அப்டேட்!
ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா: சி.வி.சண்முகம் கைது!
மருமகளை கொடுமைப்படுத்தும் போது தெரியல… இப்போது, விஷம் குடித்த மாமியார்!