பகலறியான்: விமர்சனம்!

சினிமா

ஒன்றோடொன்று ஊடாடும் இரு கதைகள்!

’8 தோட்டாக்கள்’ படத்தில் அறிமுகமாகி ‘ஜீவி’ மூலமாகத் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வெற்றி. தொடர்ந்து C/O காதல், ஜோதி, ஜீவி2, மெமரீஸ், பம்பர் என்று வித்தியாசமான கதைக்களங்களை, நாயக பாத்திரங்களை, திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். குறைந்த பட்ஜெட்டில் தயாரானபோதும், அவற்றில் இருக்கும் வித்தியாசமான கதை சொல்லலே அப்படங்களை ரசிக்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் இன்னொன்றாக இணைந்துள்ளது ‘பகலறியான்’. வெற்றி உடன் அக்‌ஷயா கந்தமுதன், சாய் தீனா, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை முருகன் இயக்கியுள்ளார். இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது?

இரவு நேரப் பயணம்!

‘பகலறியான்’ படத்தின் கதை மிக எளிதானது. ஒருபுறம் காதலனுடன் ஓடிப்போக முயற்சிக்கும் தங்கையைத் தேடி, ஒரு ரவுடி தனது அடியாட்களுடன் சென்னை முழுக்கச் சுற்றித் திரிகிறார். அந்த உண்மை தனது தந்தைக்குத் தெரியக்கூடாது என்று விரும்புகிறார்.

இன்னொரு புறம் தந்தைக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, காதலனுடன் பெங்களூரு சென்று கல்யாணம் செய்துகொள்ளத் திட்டமிடுகிறார் ஒரு இளம்பெண். தந்தையைக் கொலை செய்துவிட்டு சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலையான நபர் தான் அப்பெண்ணின் காதலன்.

’தப்பான ஆளை அவ காதலிக்கிறா’ என்று ரவுடியிடம் சொல்கிறார் அப்பெண்ணின் தோழி. ‘இவனைக் காதலிச்சா உன்னை யார்கிட்டயாவது வித்துட்டு போயிடுவாம்மா’ என்று சொல்கிறார் அந்த இளம்பெண்ணின் தந்தை.
இப்படி ஒன்றுக்கொன்று வலுவான பிணைப்புடன் பயணிக்கும் இரு வேறு பயணங்கள் எந்த புள்ளியில் முடிவுக்கு வந்தது என்று சொல்கிறது ‘பயமறியான்’.

திரைக்கதையின் பெரும்பகுதி ஒருநாள் இரவில் நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நாம் காண்பதற்கான ப்ளஸ் ஆகவும், மைனஸ் ஆகவும் அதுவே உள்ளது. ஒவ்வொரு ரசிகரையும் பொறுத்து இப்படம் வெவ்வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

’கனெக்ட்’ ஆகாத திரைக்கதை!

இந்த படத்தில் வெற்றி பல மாத கால தாடி, மீசையுடன் தோன்றியிருக்கிறார். அதுவே, ‘ரக்டு பாய்’ ஆக அவரைத் திரையில் காண்பிக்கிறது. அவரது நடிப்பும் ‘ஓகே’ ரகத்தில் உள்ளது.

அக்‌ஷயா கந்தமுதனுக்கு வெற்றியைச் சுற்றி சுற்றி வலம் வருவதைத் தவிர வேறு வேலை இல்லை. அதனை அவர் பக்காவாக செய்திருக்கிறார். படத்தின் இயக்குனர் முருகன், இதில் ரவுடி சைலண்ட் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றம் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமே உதவியுள்ளது.

’சால்ட் கொட்டாய்’ பாடலில் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடிய சாப்ளின் பாலு, இதில் பிரபுதேவா போன்றே தோன்றியுள்ளார். சைலண்ட் பாத்திரத்தின் கையாளாக வந்து போயிருக்கிறார். சாய் தீனா இதில் இன்ஸ்பெக்டராக வருகிறார். ஒரு கான்ஸ்டபிளுடன் இணைந்து இரவு நேர ரோந்து பணியின்போது அவர் நடனமாடுவதாக வரும் காட்சி போரடிக்கிறது. சிறு வயதில் நடனம் ஆடுபவராக வர ஆசைப்பட்டேன் என்று அவர் காரணம் கூறினாலும், பழைய பட பாடல்களை ‘அந்தாக்‌ஷரி’ போல கேட்கும் அனுபவமே நம்மில் நிறைகிறது. கூடவே கொஞ்சம் அசூயையும் ஒட்டிக் கொள்கிறது.

ஒளிப்பதிவாளர் அபிலாஷ் பிஎம்ஒய், படத்தொகுப்பாளர் குரு பிரதீப், கலை இயக்குனர் கோபி கருணாநிதி, சண்டைப்பயிற்சியாளர் ராம்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு நேரத்தில் நிகழ்வதாக வரும் இக்கதைக்கு உயிரூட்டியுள்ளனர்.

விவேக் சரோவின் பின்னணி இசை விறுவிறுப்பான படத்தைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது. ‘நீ ராட்சசனோ’ பாடல் சட்டென்று பிடித்துப் போகிறது. இயக்குனர் முருகன் உடன் இணைந்து விக்னேஷ் குணசேகர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்.

இதிலுள்ள இரண்டு கிளைக்கதைகளும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும், அது ரசிகர்கள் வழக்கமாக எதிர்பார்ப்பது போன்று இருக்காது. அக்கதைகள் எப்போது ஒன்றிணையும் என்பதே இத்திரைக்கதையின் சிறப்பம்சம். அதனை மிகச்சரியாகக் கையாளத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதனால், அந்த புள்ளி எதுவென்று ரசிகர்களுக்கே தெரியாத அளவுக்குப் படத்தில் அந்த இடம் வந்து போகிறது. அதனாலேயே, இப்படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் ரசிகர்களுடன் ‘கனெக்ட்’ ஆகவில்லை.

வெற்றிக்கு வெற்றியா?

கடந்த ஆண்டு வெளியான ‘பம்பர்’ திரைப்படம் வித்தியாசமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அந்த காட்சியனுபவம் வேறுபட்டதாக இருந்தாலும், பெருவாரியான ரசிகர்களை அப்படம் சென்றடையவில்லை. அதன்பிறகு வெளியான வெற்றியின் ‘ரெட் சாண்டல்வுட்’டும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அப்படங்கள் போன்றே சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக ஓடுகிறது ‘பகலறியான்’. அவற்றைப் போலவே, இப்படமும் கவனிப்பைப் பெறாத வகையிலான திரைக்கதை ட்ரீட்மெண்டை கொண்டிருக்கிறது. ‘என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்’ என்று கையைக் கட்டிக்கொண்டு திரையையே உற்றுபார்த்தாலும், குழப்பங்களுடன் நகரும் திரைக்கதை கிளைமேக்ஸில் நம்மை ‘ஜெர்க்’ ஆக்குகிறது. அது போன்ற குறைகளை பட்டி டிங்கரிங் பார்த்திருந்தால், குறிப்பிடத்தக்க படமாக ‘பயமறியான்’ மாறியிருக்கும் என்பதே நமது ஆதங்கம்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறையில் அடைப்பேன் என மிரட்டுவதா? – மோடியை சாடிய தேஜஸ்வி

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவுடன் இணையும் நடிகை – யாருன்னு தெரியுமா?

+1
2
+1
0
+1
0
+1
1
+1
2
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *