உதய் பாடகலிங்கம்
திரையிசையைப் பொறுத்தவரை, பெருங்கலைஞர்களின் இருப்பு அடுத்த தலைமுறையால் சத்தமில்லாமல் நிரப்பப்படும். வேர்கள் விட்டுத் தருவதுபோல, அவர்களது பீடங்கள் இவர்கள் வசம் வரும். அதற்காக, முன்னவர்களின் பிரதியாக பின்னவர்கள் இருக்கமாட்டார்கள். அப்படித்தான் பி.சுசீலா தமிழ், தெலுங்குத் திரையிசையின் ராணியாகத் திகழ்ந்தபோதே தன் குரலால் வசீகரிக்க வந்தார் வாணி ஜெயராம். மெல்ல ரசிகர்களின் மனதில் தனக்கான சிம்மாசனத்தை செதுக்கினார்.
2023ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது பெற்றவர்களில் வாணி ஜெயராமும் ஒருவர். அந்த விருதின் வழியே, தன்னைப் பாடவைத்த இசையமைப்பாளர்களுக்கும் திரையிசைக்கும் ஒருசேரப் பெருமை சேர்த்திருக்கிறார் வாணி ஜெயராம். அவரது குரல் ஒலிக்கத் தொடங்கினால், தேனில் குழைத்த தீந்தமிழின் சுவை இதுதானோ என்ற எண்ணமே நம் மனதில் நிறைகிறது.
பல திசைகளிலும் கிளை விரிக்கும் தமிழ் திரையிசைப் பரப்பில் கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, ஜிக்கி, ஜமுனா ராணி எனப் பலரும் தங்களது காந்தக் குரலால் நம்மை மகிழ்வித்திருக்கின்றனர். அறுபதுகளில் அந்த சாம்ராஜ்யத்தின் தலைவிகளாக பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் திகழ்ந்தனர். எழுபதுகளின் பின்பாதியில் அது மெல்ல வாணி ஜெயராம் தலைமுறை வசம் வந்தது.
கலைவாணி.. இதுதான் அவரது இயற்பெயர். வேலூரில் பிறந்த கலைவாணி, கர்நாடக இசையைத் தேர்ந்த வாத்தியார்களிடம் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலேயே இந்தி திரையிசை மீது ஆர்வம் கொண்டார். கல்லூரியில் படித்து வங்கி வேலைக்குச் சென்றபிறகும் அது கொஞ்சம்கூட குறையவில்லை.
ஜெயராமை திருமணம் செய்தபிறகு, அது சிகரம் தொட்டது. அதற்கேற்றவாறு கலைவாணியின் திருமண வாழ்க்கை மும்பையில் அமைந்தது. அப்போது, இந்துஸ்தானி இசையையும் முறையாக கற்கத் தொடங்கினார் வாணி ஜெயராம். இரண்டொரு ஆண்டுகளில் அதன் நுட்பங்களைப் புரிந்துகொண்டார்.
பாடும் திறமையைச் சோதிக்க ஒரு களம் வேண்டாமா? அதற்குப் பதில் தேடும் வகையில்தான், இந்திப் படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு வந்தது. 1971இல் வெளியான ‘குடி’ படத்தில் வசந்த் தேசாய் இசையில் பாடினார் வாணி ஜெயராம். அன்று முதல் அவரைத் தேடி வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
1973 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் பாடத் தொடங்கினார் வாணி ஜெயராம். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடிய ‘தாயும் சேயும்’ படம் வெளிவரவே இல்லை. ஆனாலும், ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ படம் மூலம் நிகழ்ந்தது அவரது அறிமுகம்.
சங்கர் கணேஷ் இசையில் ‘ஓரிடம் உன்னிடம்’ எனும் உற்சாகம் பொங்கும் பாடல் வழியே தமிழ் மக்களின் இதயங்களைத் தொட்டார். அப்போதுதான், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘மலர் போல் சிரிப்பது பதினாறு’ பாடலும் வெளியானது.
’தீர்க்க சுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைக் கேட்டதும் சொக்கிப் போகாதவர்களே இருக்க முடியாது. ’ஆண்டி’ஸ் ராகம் என்று கிண்டலடித்தாலும் கூட, 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்துப் போகும் அப்பாடல். காரணம், வாணியின் குரலில் ஒளிந்திருக்கும் காந்த விசை.
எழுபதுகளில் இந்திப் பாடல்களுக்கு இணையாக அன்றைய இளம் மனங்களை கட்டிப்போட்ட இன்னொரு பாடல், விஜயபாஸ்கர் இசையில் அமைந்த ‘அன்பு மேகமே’. கண்களை மூடிக்கொண்டு கேட்டால், எவர்க்கும் தன் இணையின் நினைவைத் தூண்டும்.
’தங்கப்பதக்கம்’ படத்தில் வரும் ‘தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு’, தன் குழந்தையின் மழலைப் பருவத்தைக் கொண்டாடும் ஒரு தாயின் குரலைப் பிரதிபலிக்கும்.
இந்த காலகட்டத்தில், இடைவிடாது மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து திரிந்தபோதும், வாணியின் குரலில் செழுமை கூடியதே தவிர குறையவில்லை.
1975இல் வெளியான கே.பாலச்சந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம், ஒரு பாடகி பாத்திரத்திற்கு குரல் தரும் வாய்ப்பை வழங்கியது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலும் சரி, ‘கேள்வியின் நாயகனே’ பாடலும் சரி, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படைப்புகள்.
எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த படங்களில் ஒரு பாடலாவது வாணி ஜெயராம் பாடுவது வழக்கமாகிப் போனது. அதற்கு விதை போட்ட படம், ‘ஆளுக்கொரு ஆசை’ படத்தில் வரும் ‘மஞ்சள் அரைக்கும்போது பல நாளா பார்த்த மச்சான்’ பாடல். அதன்பிறகு புவனா ஒரு கேள்விக்குறி, இளமை ஊஞ்சலாடுகிறது, கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று பல படங்களில் இடம்பிடித்தார். அவற்றில் பல அன்றைய தலைமுறையின் ஆசை கீதங்கள். அதற்கொரு உதாரணம் ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா’ பாடல்.
ரசிகர்களின் ரசனைக்கு விருந்து படைப்பது மக்களின் கலைஞராகத் திகழ்பவர்களின் சிறப்பு. அதையும் தாண்டி, எந்த பாத்திரத்திற்காக குரல் கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து பாடுவதுதான் திரையிசைக்கான முதல் விதி. புதிதாகப் பின்னணி பாடும் எவரும் இதனைப் பின்பற்றுவது இயல்பான ஒன்று. ஆனால், அன்று முதல் இன்றுவரை அதனைத் தொடர்ந்து வருவதே வாணி ஜெயராமின் மாண்புக்குச் சான்று.
அதனாலேயே, திரையில் வரும் பாத்திரத்தின் இயல்புகளோடு வாணியின் குரலை நம்மால் எளிதாகப் பொருத்திப் பார்க்க முடியும்.
‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பார்க்கும்போது படாபட் ஜெயலட்சுமியின் நடிப்பை நினைவில் வைத்தே வாணி பாடியிருப்பதாகத் தோன்றும். அந்த திறமைக்கு மரியாதை செய்யும் வகையிலேயே, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் ஐந்து பாடல்களை வாணிக்கு வழங்கியிருக்கிறார் இளையராஜா. அந்த பாடல்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தில் வெவ்வேறு காலகட்டத்தைப் பிரதிபலிப்பவை.
சில படங்களில் வாணியின் குரல் கதையின் ஆன்மாவை நமக்கு கடத்துவதாகவும் இருந்திருக்கின்றன. ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் வரும் ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’ பாடல் அந்த ரகம்தான்.
அதற்கு நேரெதிராக, பெண் மனதின் இன்னொரு எல்லையை நுட்பமாகச் சொல்லும் ‘உல்லாசப் பறவைகள்’ படத்தில் வரும் ‘தெய்வீக ராகம்’ பாடல்.
பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள். இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் பயணிப்பது போல, அவர்களுக்கான இடங்களை மெல்ல நிரப்பியவர் வாணி ஜெயராம். கொஞ்சும் குரலிலும் பாட முடியும்; கொல வெறியோடு குத்தாட்டம் போட வைக்கவும் முடியும்; முதுமையின் குழைவையும் காட்ட முடியும். இளமையின் துடிப்பை காற்றில் புகுத்த முடியும். அமைதியை நிரப்பவும் முடியும்; ஆர்ப்பாட்டத்தில் நிறைக்கவும் முடியும்.
எல்லா உணர்வு நிலைக்கும் நம்மை ஆட்படுத்தும் வாணி ஜெயராமின் திறமையே, ‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமா’ என்று ரசிகர்களைப் போற்ற வைத்திருக்கிறது.
இளையராஜாவுக்கு முன்னும் பின்னுமாகப் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர், தமிழ் உட்பட 19 மொழிகளில் பாடியவர், அன்று முதல் இன்று வரை தன்னை விரும்புபவர்களுக்காக ஒலிக்கிறது வாணி ஜெயராமின் குரல்.
இசை என்பது வெறும் கலை மட்டுமல்ல; அது ஒரு தொடர்பிழை. ஒரு முனை வேண்டுமானால் படைத்தவர்களுக்குச் சொந்தமாக இருக்கலாம். அதன் இன்னொரு முனை எப்போதும் ரசிகர்கள் வசம் இருக்கும். காலம் கடந்தும் அதன் எல்லை நீண்டு கொண்டிருக்கும். என்றென்றும் நீளும் இசை எனும் இழை எத்தனையோ ரசிக மனங்களை இறுகப் பிடித்திருக்கிறது; அவர்களது அன்பை, மரியாதையை, ஆத்மார்த்தமான நேசிப்பை அறிவதற்கான அளவுகோலே விருதுகள்.
பெருமையைக் கொண்டாட இசைத்தட்டுகள் ஒலிக்கட்டும்; என்றென்றும் எண்திசையிலும் பாயட்டும் வாணி ஜெயராமின் இசையோட்டம்!
நடிகர் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!
முஸ்லிம்களை துன்புறுத்துகிறாரா மோடி? – பிபிசி ஆவணப்படம் 2 சொல்வது என்ன?