பினிஷிங் சரியில்லையேப்பா..!
விஜய் ஆண்டனி போலவே, ஆக்ஷன் ஹீரோ என்றால் உம்மணாமூஞ்சியாகத் திரிய வேண்டும் என்ற இலக்கணத்தைக் கொஞ்சமும் பிசகாமல் பின்பற்றுபவர் விக்ரம் பிரபு. இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, சத்ரியன், துப்பாக்கி முனை என்று அவர் நடித்தவற்றில் முக்கால்வாசி அப்படித்தான் இருக்கும்.
சமீபத்திய படங்களான ‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன் 1 & 2’வும் அந்த வகையறாவில் சேரும். புதுமுக இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்திருக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைப் பார்க்கத் தொடங்கியபோதே, அந்த யோசனை மீண்டும் எழுந்தது. இந்தப் படத்திலும் விக்ரம் பிரபு அப்படித்தான் நடித்திருக்கிறாரா?
நல்லதொரு ஆக்ஷன் கதை!

ஒரு ஆட்டோவில் பயணிக்கிறார் நாயகன். வழியில் பைக் ரிப்பேர் என்ற பெயரில் ஒரு தம்பதி ஏறுகின்றனர். திடீரென்று ஆட்டோ மக்கர் செய்ய, இறங்கி வண்டியைத் தள்ளுமாறு சொல்கிறார் ஓட்டுநர். ஆனால், நாயகனோ தயங்குகிறார். பிறகு தட்டுத் தடுமாறி இறங்கிச் சென்று ஆட்டோவை தள்ளுகிறார். அப்போது, உடன் வரும் நபர் ஆட்டோ ஓட்டுநர் எடுத்து தரும் இரும்புத்தடியைக் கொண்டு நாயகனைத் தாக்குகிறார்.
அதன்பிறகு, நாயகனின் முன்கதை சொல்லப்படுகிறது. இந்தத் தொடக்கமே நாயகனை நையப் புடைக்கும் வெறியின் பின்னால் யாரோ இருப்பதை உணர்த்தி விடுகிறது.
சிறு வயதில் ஏற்பட்ட விபத்தினால் கண் பார்வைக் குறைபாட்டுக்கு ஆளாகிறார் நாயகன். பெற்றோரை இழந்த அவரை சித்தப்பாவின் குடும்பம் வளர்க்கிறது. நாயகனிடம் இருக்கும் குறைபாடு வெளியே தெரியாதவாறு, சாதாரண மனிதர் போலவே இருக்கக் கற்றுத் தரப்படுகிறது. கூடவே திரியும் தோழன் போன்று வெகு சிலருக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும்.
ஒருநாள் பிச்சைக்காரப் பெண் ஒருத்தியைச் சில நபர்கள் சீண்ட, அவர்களைப் புரட்டி எடுக்கிறார் நாயகன். அதன்பிறகுதான், அவர் ஆட்டோவில் கடத்தப்படுகிறார். அதனால் அடி வாங்கிய நபர்கள் தான் அதற்குக் காரணமென்று நாயகன் நினைக்கிறார். ஆனால், சித்தப்பாவோ அவரது கோலம் கண்டு பதைபதைக்கிறார். யாரோ ஒரு நபரை போனில் தொடர்பு கொள்கிறார். அதுவே, நாயகனையும் அவரது குடும்பத்தினரையும் நசுக்க யாரோ முயற்சிப்பதைக் காட்டுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சித்தப்பா சில நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் கடத்தப்பட்ட இடம் வரை வந்தும், நாயகனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது, தனது கண் பார்வைக் குறைபாட்டை எண்ணி தன்னையே சபித்துக் கொள்கிறார் நாயகன். அதன்பிறகு, சித்தப்பாவின் கொலைக்கான காரணத்தை அவர் கண்டறிந்தாரா என்பதைச் சொல்கிறது ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
சுருக்கமாகச் சொல்லும்போது ‘நல்லதொரு ஆக்ஷன் கதை’ என்றே தோன்றும். ஆனால், காட்சிகள் மொத்தமாக அடுக்கப்பட்டு திரையில் பார்க்கும்போது குழப்பமும் சலிப்பும் எரிச்சலுமே மேலோங்குகிறது.
நாயகி எதற்கு?

ரசிகர்களை முதல் காட்சியிலேயே ஈர்க்க வேண்டும் என்று இயக்குனர் மெனக்கெட்டிருப்பதற்கு ஒரு சபாஷ். ஆனால், அதற்கிணையான பரபரப்பை அடுத்தடுத்த காட்சிகளில் நிரப்பத் தவறியிருக்கிறார். நாயகனுக்குப் பார்வைக் குறைபாடு என்பதை மங்கலான வெளிச்சத்தில் அமைந்த பிரேம் வழியே காண்பித்திருப்பது நல்ல உத்தி. அதற்கேற்ப நாயகனின் பார்வைக் கோணத்திலேயே சில ஷாட்களும் நகர்கின்றன. இடைவேளைக்குப் பிறகு, அந்த விஷயத்தை அடியோடு மறந்தது ஏனோ?
நாயகன் தன் குடும்பத்தை இழந்தவர் என்பதைக் காட்ட ஒரு பிளாஷ்பேக் வருகிறது. அதிலும் நடிகர் ஆனந்த் வருகிறார். நாயகனின் சித்தப்பாவாகவும் அவரே வருகிறார். இதற்கு நடுவே, அவரை ‘அப்பா’ என்றே அழைக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு. போதாக்குறைக்கு சில காட்சிகளில் சித்தியையும் தங்கையையும் காட்ட மறந்திருக்கிறார் இயக்குனர். இதெல்லாம் சேர்ந்து, நாயகனின் குடும்பம் குறித்த சித்திரத்தை அடியோடு குலைக்கிறது.
ஒரு கட்சியின் தலைவரிடம் விசுவாசமான அடியாளாக இருக்கும் இளைஞனையே இக்கதை வில்லனாக காட்டுகிறது. அந்த தலைவர் என்னவானார்? அந்த இளைஞன் இப்போது எப்படியிருக்கிறார்? அவர்களைப் பற்றிய அறிமுகத்திற்குப் பிறகு போதிய தகவல்கள் இல்லாமல் தடுமாறுகிறது திரைக்கதை. மிகமுக்கியமாக, நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதலுக்குக் காரணம் ஒரு எதேச்சையான நிகழ்வு என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட மறந்திருக்கிறார் இயக்குனர். அதுவே, முக்கால்வாசி காட்சிகளை விழலுக்கு இறைத்த நீராக்கி இருக்கிறது.
திரைக்கதை நகரும் வேகத்தில், படத்தின் கதை என்ன என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது நல்ல உத்திதான். ஆனால், மிகச்சரியான இடத்தில் சரியான விதத்தில் அந்தக் கதையை முழுமையாகச் சொல்லிவிட வேண்டும். ‘பாயும் ஒளி நீ எனக்கு’ அதனைத் தவறவிட்டிருக்கிறது.
இயக்குனர் திரைக்கதையிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் சொதப்பினாலும், உடன் பணியாற்றியவர்கள் அதனைச் சரிக்கட்ட முயன்றிருக்கின்றனர்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இருள் நிறைந்த காட்சிகளை அழகாகக் காட்டியிருக்கிறது. நாயகனின் வீடு, நாயகியின் அலுவலகம், வில்லனின் அரசியலுக்கான களங்களைக் காட்டும்போது ஈர்க்கிறது சுபேந்தரின் கலை வடிவமைப்பு. ஒரு படத்தொகுப்பாளராக சி.எஸ். பிரேம்குமார் தனது லகானைத் தொலைத்திருக்கிறார். காலம், இடம் போன்றவற்றை எழுத்துகள் கொண்டு நிரப்பும் திரைப்படங்களுக்கு மத்தியில், எந்தத் துணையும் இல்லாமல் களமிறங்கியதால் இறுதியில் குழப்பமே மிஞ்சுகிறது. அதற்குக் காரணம் அவரது அதீத தன்னம்பிக்கையா அல்லது இயக்குனரின் பிடிவாதமா என்று தெரியவில்லை.

ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், ‘அனிச்சப் பூவே’ மட்டுமே சட்டென்று உள்ளம் தொடுகிறது. புதுமுக இசையமைப்பாளர் மஹதி ஸ்வர சாகர் அதனை ஈடுகட்டும் வகையில் பரபரப்பூட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார். அது காட்சிகளில் நிறைந்திருக்கும் குறைகளை மட்டுப்படுத்த முயற்சித்திருக்கிறது.
’டாணாக்காரன்’ வெற்றிக்குப் பிறகு, விக்ரம்பிரபு தனி நாயகனாக நடித்த படம் இது. வழக்கம்போல உர்ரென்ற முகத்துடன் வலம் வந்தாலும், காதல் காட்சிகளில் கொஞ்சமாய் புன்னகைத்திருக்கிறார். இனி கதைக்கரு மட்டுமல்லாமல் மொத்த திரைக்கதையும் வித்தியாசமாக இருக்கிறதா என்று விக்ரம் பிரபு உறுதிப்படுத்திக்கொள்வது உத்தமம்.
வாணி போஜனுக்கு இதில் பெரிதாக வேலை இல்லை. என்னதான் அழகழகாகத் தோன்றினாலும், ‘நாயகி எதற்கு’ என்று கேட்கும்விதமாகவே கதை நகர்கிறது.
கன்னட ஹீரோவான டாலி தனஞ்ஜெயா இதில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு ஹீரோவுக்கு இணையான சண்டைக்காட்சிகளும் பில்டப் ஷாட்களும் இருந்தாலும், அவரது பாத்திரம் நம்மைக் கவர்வதாக இல்லை.
இவர்கள் தவிர்த்து வேல.ராமமூர்த்தி, ‘தலைவாசல்’ ஆனந்த், விவேக் பிரசன்னா, ‘வழக்கு எண்’ முத்துராமன், சுபாஷினி கண்ணன் உள்ளிட்டோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம்பிரபுவின் தங்கையாக வரும் நக்ஷத்ரா மூர்த்தியின் ‘க்யூட்னெஸ்’ சட்டென்று நம்மை ஈர்க்கிறது. இது போக அடியாட்கள் என்று இரண்டு மூன்று டஜன் ஸ்டண்ட் கலைஞர்கள் ஹீரோவிடம் அடி வாங்குவதற்காகவே திரையில் தோன்றுகின்றனர்.
பினிஷிங் எங்கே?

இயக்குனர் கார்த்திக் அத்வைத் முடிவு செய்திருந்த திரைக்கதையும் நம் பார்க்கும் படமும் எத்தனை சதவிகிதம் பொருந்திப் போகுமென்று தெரியவில்லை. ஹீரோவையும் வில்லனையும் சம அளவில் காட்டினால் மட்டுமே இந்தக் கதைக்கு நியாயம் செய்யும் திரைக்கதை உருப்பெற்றிருக்கும்.
பிளாஷ்பேக், நாயகன் நாயகி டூயட், அதீத பில்டப் காட்சிகள் இல்லாமல் கூட அதனைச் சாதித்திருக்க முடியும். இது போன்ற வித்தியாசமான பாத்திரங்கள், களங்கள், கதைகள் கொண்ட திரைப்படங்கள் கட்டாயம் யதார்த்த உணர்வைத் திரையில் நிறைக்க வேண்டும். அதைவிடுத்து கிளைமேக்ஸில் மிகச்செயற்கையானதொரு சண்டைக்காட்சியை திணித்திருக்கிறார் இயக்குனர். அதுவே, இப்படம் ட்ரெண்டில் இருந்து விலகி வெகுதூரம் நிற்பதைக் காட்டிவிடுகிறது.
எத்தனை மோசமான கதையாக இருந்தாலும் சுவாரஸ்யமான காட்சிகள், சரியான பாத்திர வடிவாக்கம், பொருத்தமான கிளைமேக்ஸ் போன்றவற்றின் மூலம் ரசிகர்களை ஈர்த்துவிட முடியும். ஆனால், அற்புதமான ‘பிகினிங்’ கிடைத்தும் ’பினிஷிங் சரியில்லையேப்பா’ என்று நம்மைப் புலம்ப வைத்திருக்கிறது ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
உதய் பாடகலிங்கம்
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: விமர்சனங்களுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!