ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து கட்சியினரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்கும் சினிமா விழாக்களில் அரசியல் பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. அதனால் பா.ரஞ்சித் பங்கேற்கும் சினிமா நிகழ்வுகளில் அரசியல் பத்திரிகையாளர்களும் பங்கேற்க வருவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது என சினிமா பத்திரிகையாளர்கள் கூறி வந்த நிலையில்,
தனி இசை, சுயாதீன கலைஞரான பாடகர் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ பாடல் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் செய்தி சேகரிக்க வந்தோம் என்று கூறிய 35 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற பிரசாத் பிரிவியூ திரையரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது,
“அறிவு எழுதிய அனைத்து பாடல்களும் சுவாரஸ்யமாகவே இருக்கும். அவருக்குள் அரசியல் தன்மை இருந்தது. அவரிடம் இருந்த அம்பேத்கரிய பார்வை தான் எனக்கு அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.
நான் திரைப்படங்கள் இயக்க தொடங்கியபோது, என்னுடைய கதை வெகுஜன மக்களிடம் தொடர்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தது. அறிவு பாடும் பாடல்களில் இருக்கும் அரசியல் தன்மை மக்களிடம் சென்று சேர ஆரம்பித்துள்ளது. வெகுஜன தளத்தில் நாம் விரும்பும் அரசியலை கொண்டு சேர்க்க வேண்டுமானால் அதற்கு செல்வாக்கான மீடியம் தேவை. அப்போதுதான் நமது அரசியலும் அதன் மூலம் தொடர்புகளும் நமக்கு கிடைக்கும்.
தலித் சுப்பையா போன்றோர் மேடையேறி பல பாடல்களை பாடியுள்ளனர். ஆனால், மக்களிடம் அது சென்று சேரவில்லை. வெகுஜன மக்களை தொடர்பு கொள்ள முடிந்தால் மட்டுமே பாடல்கள் பரவலாக்கப்படும்.
அறிவு எழுதிய ‘எஞ்சாமி’ பாடல் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலை பாடிய தீயின் குரலும், அறிவின் எழுத்தும் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. அதன் பிறகு சில சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் அறிவு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார் அதன் வெளிபாடுதான் இந்த 12 பாடல்கள்” என்றார்.
பாடகர் அறிவு பேசுகையில்,
“எங்கள் ஊர் திருவிழாவில் மக்களிசை கலைஞர்கள் பாடுவார்கள். அதைப் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். நான் தனியிசை கலைஞராக இருப்பதற்கு முக்கியமான காரணம் ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’. அதற்காக பா.ரஞ்சித்துக்கு நன்றி.
விளிம்பு நிலை மக்கள் கோட் போட்டு மேடையில் நிற்கலாம் என்ற உறுதியை கொடுத்தது ‘காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’. நான் இன்று என்னுடைய பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை.
நாம் எப்போது கொல்லப்படுவோம் என்று தெரியாத வன்முறை மிகுந்த சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதிய சமூகம் ஒருவித இறுக்கமான மனநிலையில் வைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இந்த ஆல்பத்தை உருவாக்க இரண்டு வருடங்கள் ஆனது. என்னுடைய நோக்கத்தை இந்த ஆல்பம் உங்களுக்கு கடத்தும் என்று நம்புகிறேன்.
மிகவும் ஆபத்தான வன்முறையான சமூகத்தில் வாழ்கிறோம். அடுத்து கொல்லப்படுவது நானாகவோ என்னைச் சார்ந்தவர்களோவோ கூட இருக்கலாம். அந்த பயத்துடனே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலையிலிருந்து விடுபட வேண்டும். அன்பை மீட்டெடுப்போம்” என்றார்.
நிகழ்வு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித்திடம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நடக்கவுள்ள பேரணி குறித்து கேட்டதற்கு,
“தீர்வை நோக்கி நகர்வதற்கான உந்துதலை, விழிப்புணர்வை அந்த பேரணி உருவாக்கும் என நான் நம்புகிறேன்.
சட்ட ரீதியாக சரியாக விசாரித்து, சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதன் பின்னணியில் இந்த குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தர்க்கபூர்வமாக அதனை நிரூபித்து, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எனக்கு யார் மீது சந்தேகம் உள்ளது என்பதை நான் காவல்துறையிடம் கூறியிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் உண்மையான குற்றவாளியை நெருங்கிவிடுவோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம். சமூக வலைதளத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிறகு தமிழ்நாடுஅரசு சில நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
என்கவுன்ட்டரை ஆக்கப்பூர்வமான விஷயமாக நான் பார்க்கவில்லை. குற்றத்தை சரியான முறையில் நிரூபிப்பதுதான் சரியானது. என்கவுன்ட்டருக்கு எப்போதும் நான் எதிரானவன். அதிமுக ஆட்சி இருந்தபோது பட்டியலின மக்களின் பிரச்சினை தீராமல் இருந்தது. அப்போது அதற்கு எதிராக திமுக குரல் கொடுத்தது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பும், முன்பு போலவே பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது விமர்சனத்துக்குரியது. அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அவர்களுக்கு உரிய அதிகாரம் கொடுத்து அதனை சட்டப்படியாக அணுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இது அரசியல் ரீதியாக கைமாறும்போது, அது வாக்காக மாறிவிடுகிறது. ஆகவே அதிகாரிகளிடம் உரிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த கொலையில் அனைத்து கட்சியினரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றவரிடம், 2026-ல் உங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா? என கேள்வி எழுப்பியதற்கு,
“பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை எழுப்புகிறோம். அதனை தீர்த்து வைக்க முயலாத போது, நம் முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என நினைக்கிறேன். இது ஓர் எச்சரிக்கைதான்.
மக்கள் பிரச்சினை சரியாக வேண்டும் என்பதற்காக நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன். ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது” எனக் கூறினார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாதாம் அல்வா செய்முறை!
மைக்ரோசாப்ட்டுக்கு மயக்கம் வந்துடுச்சி போல :அப்டேட் குமாரு
2026ல் திமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம் : இளைஞரணியினருக்கு உதயநிதி கடிதம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை : தலைமறைவான பெண் தாதா அஞ்சலை கைது!