‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மொக்கை படமா? – ரஞ்சித் ஆவேசம்!
தமிழ் சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படும் காலகட்டத்தில் அதன் மூலம் மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமான மக்களின் வாழ்வியலை படமாக்கும் இயக்குநர்களில் ஒருவராக விளங்குகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட சில நேர்த்தியான கதைக்களம் கொண்ட படங்களை தொடர்ந்து இளம் வயதில் அவர் சந்தித்த சாதிய பாகுபாடுகளை மையமாக வைத்து ‘வாழை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது. பொன்வேல் மற்றும் ராகுல் உள்ளிட்ட சிறுவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பா. ரஞ்சித் பேசுகையில் “வீட்ல நடக்குற சின்ன எமோஷனலான விஷயத்தை கூட நான் படத்தில் காட்சியாக கொண்டு வரும்போது அதை என்னால் எடுக்க முடியாமல் எமோஷனலாகி அழுதுவிடுவேன்.
ஆனால், மாரி செல்வராஜ் அவரோட முதல் படத்திலேயே ரொம்பவும் வலியான ஒரு விஷயத்தை படமாக்கி இருந்தார். இவ்வளவு வலி உள்ள ஒரு படத்தை எடுக்குறியேடா. உன்னை சுத்தி உள்ளவங்க என்னடா சொல்ல போறாங்க அப்படினு நான் கூட கேட்டேன். ஆனால் அதை எடுத்து காட்டுறதுல, எடுத்து பாக்குறதுல, மக்களுக்கு அதை கொண்டு போய் சேக்குறதுல மிகப்பெரிய வேட்கை இருக்கு. அந்த வேட்கையின் தொடர்ச்சியாக தான் அவருடைய படங்களை பார்க்கிறேன்.
மாரி செல்வராஜ் பலமே கதை சொல்லல் தான் என்பது என்னுடைய கருத்து. மிகவும் எளிமையாக கதையை சொல்ல கூடியவர். அவருடைய கதையை மிகவும் நிதானமாக சொல்லி அதை ஜனரஞ்சகமான ஒரு படமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து மக்கள் மத்தியில் அதை பேசுபொருளாக மாற்றும் வல்லமை கொண்டது தாம் மாரி செல்வராஜின் மொழி.
அதை நான் மிகவும் பிரமிப்பாக பார்க்கிறேன். பல சாய்ஸ் இருந்தாலும் இந்த படத்தை இந்த மொழியில் இப்படி தான் சொல்ல வேண்டும் என தேர்ந்து எடுத்து அதன் மூலம் அதை மக்களுக்கு கொண்டு செல்கிறார்.
சில சமயங்களில் கொடுமையாக அவர் சில விஷயங்களை காட்டும் போது எனக்கு பயமா இருக்கும். அவரோட படங்களில் வலியை காட்டும் போது கைதட்டி கொண்டாடுற கூட்டம் அவன் கர்ணனா நின்று சண்டை போடும் போது அதை வன்முறையா அதை மிகைப்படுத்துறாங்க.
அவனோட மொழியை அவன் படைக்கும் போது அதை விமர்சனம் செய்கிறார்கள். பரியேறும் பெருமாள் நல்ல படம்னா கர்ணன், மாமன்னன் என்ன மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? ஆக மொத்தத்தில் அவருடைய வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக பேச ‘வாழை’ படம் மூலம் முன்வந்துள்ளார்” என்றார்
படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “ரஞ்சித் என்னை ‘டேய் பயோபிக்னு சொல்லியே படம் பன்றியானு கேட்டாரு. முதல்தடவை எங்க அப்பா அம்மா ஒரு படத்தை பாக்க கூடாதுனு ஒரு படம் எடுத்துருக்கேன். அந்தவகையில் இயக்குநர் ராம் சாருக்கு நன்றி.
இந்த படத்தின் பர்ஸ்ட் எடிட் பாத்ததும் நான் ரொம்ப கஷ்டப்பட்டது கிடையாது. வாழை பார்த்தப்பிற்கு நான் கடந்து வந்த வாழ்க்கை, சந்தித்த வாழ்க்கை என்று இப்போது தான் தெரிந்தது. எனது பயணத்தில் கூட இருந்த இதையெல்லாம் தாங்கிக்கொள்ள சக்தி கொடுத்தது ராம் சார் தான்.
அவரது ஊக்கத்தில் தான் என் கண்ணீர் எல்லாம் கதையானது. இது அவருக்கு நான் செலுத்தும் காணிக்கை” என தெரிவித்துள்ளார்.
வாழை டிரெய்லர் எப்படி?
தொடக்கத்திலேயே மூச்சு வாங்கியபடி சிறுவன் ஒருவன் “காய் சுமை இல்லாத ஊர பாத்து ஓடிப்போயிடலாம்” என்கிறார். அடுத்து வரும் கருப்பு வெள்ளை காட்சியில், ‘காய் சுமைக்கு எதுக்கு அட்வான்ஸ் வாங்குன’ என சிறுவன் ஆக்ரோஷமாக கேட்கிறார்.
வாழைத்தாரை சுமந்து செல்லும் வலியை மேற்கண்ட வசனங்கள் கடத்துகின்றன. வாழைத்தாரின் கனம் ஒருபுறம் அதனைச் சுமந்து செல்லும்போது கால்களில் ஏற்படும் புண்களின் கோரத்தையும் அச்சு அசலாக சில காட்சிகள் பதிவு செய்கின்றன.
இப்படியான இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு நடுவே ஆசிரியரான நிகிலா விமலின் வருகை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் கோபத்தில் வாழைத்தாரை தண்ணீரில் வீசி எறிகிறான் சிறுவன். யதார்த்தமான கிராமத்து மக்களுக்கிடையே அழுத்தம் சுமந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் சிறுவனின் வாழைத்தாரை சுமக்கும் வாழ்க்கை பயணத்தை இன்னும் சில சாதிய நெருக்கடிகளுடன் படம் பதிவு செய்கிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. ட்ரெய்லரில் வரும் அம்பேத்கர் புகைப்படம் கவனம் பெறுகிறது. படம் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
போர் நிறுத்தத்துக்கு இதுவே கடைசி வாய்ப்பு – இஸ்ரேலை எச்சரித்துள்ள அமெரிக்கா!
யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்: அரசின் நிலை என்ன?