கொரோனா பொது முடக்கம் சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர வைத்தது.
வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டி இருந்ததால் சினிமா ரசிகர்கள் தொலைக்காட்சியை கடந்து திரைப்படங்களை பார்க்க ஓ டி டி தளங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினார்கள்.
திரையரங்கங்களில் எப்போது படத்தை திரையிட முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் நேரடியாக ஓ டி டி யில் படத்தை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓடிடி நிறுவனங்களும் நேரடி வெளியீட்டுக்கு புதிய படங்களை போட்டிபோட்டு வாங்கினார்கள்.
இதனால் கொரோனா பொது முடக்கத்தின்போது இந்தியாவில் ஓ டி டி தளங்கள் அசுரவளர்ச்சி அடைந்து தற்போது திரையரங்க தொழிலுக்கு கடுமையான போட்டியாளராக விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கின்றன.
திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் உள்ளிட்ட படைப்புகள் பெற்று வருகின்றன.
ஆனால் சினிமாவில் சொல்ல முடியாத கதையை, தணிக்கை குழு அனுமதிக்காத காட்சிகளை, அநாகரிகமான வார்த்தை, வசனங்களை எளிதாக பயன்படுத்தும் களமாக ஒடிடி தளங்களை இயக்குநர்கள் பயன்படுத்துவதாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது உண்டு.
இதனால் தொலைக்காட்சி தொடர்கள், ஒ டி டி தளங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு தணிக்கை வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான், வலைதளங்களில் வெளியாகும் தொடர்கள் பற்றியும், அதற்கு சென்சார் கட்டாயம் வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான்கான் பேசும்போது,“தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் பல வெப் சீரிஸ்களில் ஆபாசம், அநாகரிக வார்த்தைகள் என நிறைய இடம் பெற்று வருகின்றன.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது என்றால் ஓகே. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் உங்களது சின்ன குழந்தை கூட இது போன்ற படங்களை பார்ப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?
அதனால் ஓ டி டி யில் வெளியாகும் படைப்புகளும் நிச்சயமாக சென்சார் செய்யப்பட வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் நட்சத்திரங்கள், இதுபோன்ற படைப்புகளை சூப்பர், கடின உழைப்பு, திறமை என்கிற வார்த்தைகளால் பாராட்டி வருவது தான்.. அதே சமயம் முன்பை விட தற்போது நல்ல கருத்தாக்கம் கொண்ட ஒரு சில படைப்புகளும் ஓ டி டி யில் வெளிவருவதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இராமானுஜம்
அதிமுக பொதுச்செயலாளர்: ஈபிஎஸ் மனு இன்று விசாரணை!
IPL 2023: தோல்வியை தழுவிய பஞ்சாப் – ஆட்டநாயகனான தவான்