நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை இன்று (மார்ச் 13 ) வென்றுள்ளது.
இந்நிலையில், ’தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்ற கார்த்திகி கொன்சால்வ்ஸ் குறித்த சில தகவல்களை பார்ப்போம்:
தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். வனவிலங்குகள் , சுற்றுசூழல் , இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட இவர் புகைப்படக் கலைஞராகவும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
37 வயதான கார்த்திகியின் தந்தை திமோதி கோன்சால்வ்ஸ் சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி பயின்று மேல்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர்.
ஐடி துறையில் வல்லுநர். நாடு திரும்பி ஐடி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி இருக்கிறார், மாண்டி ஐ.ஐ.டி-யை நிர்வகித்து வந்துள்ளார்.
சிறு வயது முதலே தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வந்த கார்த்திகிக்கு யானைகள் மேல் உள்ள காதல் ’தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்‘ என்ற இந்த ஆவணப்படத்துக்கு அடித்தளமாக அமைந்தது.
அடிப்படையில் தனக்கு இயற்கை வெளிச்சத்தில் படம்பிடிப்பது அதிகம் பிடிக்கும் எனச் சொல்லும் கார்த்திகி, இயற்கை மட்டுமல்லாமல் மலைவாழ் மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகளையும் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.
டிஸ்கவரி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றியுள்ள கார்த்திகி, இயக்கிய முதல் படத்திலேயே ஆஸ்கர் விருதின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்டார்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்றது குறித்து பேசிய கார்த்திகி “நமக்கும் நம்முடைய இயற்கை உலகத்துக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பை பற்றி பேச நான் இன்று இங்கு நிற்கிறேன்.
பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காக இதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
பழங்குடி மக்களையும் விலங்குகளையும் சிறப்பிக்கும் எங்கள் திரைப்படத்தை அங்கீகரித்ததற்காக ஆஸ்கர் அகாடமிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், எங்களை நம்பிய நெட்ஃபிளிக்ஸுக்கும், எங்களது தயாரிப்பாளர் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது உலகமாக இருக்கும் அம்மா, அப்பா , சகோதரிக்கும் என் தாய் நாடான இந்தியாவிற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆஸ்கரை மிஸ் செய்த ஆல் தட் பிரித்ஸ் ஆவணப்படம்!
ஆஸ்கர் வென்ற தமிழக குறும்படம்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!