‘முதிர்கன்னனின்’ கல்யாணக் கனவு!
இயக்குனர், நடிகர் உட்படப் பன்முகங்களைக் கொண்ட வினீத் சீனிவாசன், தான் நாயகனாக நடிக்கிற படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். தந்தை சீனிவாசனைப் போலவே நகைச்சுவையில் ‘பொழந்து கட்டுகிற’ ஆற்றல் அவரிடத்தில் இருக்கிறது. oru jaathi jathakam movie
அதற்காக ‘மைண்ட்லெஸ் காமெடி’ வகையறா கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ‘கல்லா’ கட்ட விரும்பாமல் வித்தியாசமான திரைப்படங்களில் பங்கெடுப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இன்னொன்றாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எம்.மோகனன் இயக்கியுள்ள ‘ஒரு ஜாதி ஜாதகம்’ பட ட்ரெய்லர்.

’ஒரு வினோதமான ஜாதகம்’ என்பது ஒரு ஜாதி ஜாதகம் டைட்டிலுக்கான அர்த்தம். ட்ரெய்லர் பார்க்காதவர்களும் கூட ‘டைட்டில் பார்த்தா கதை இப்படித்தான் இருக்கும்னு தோணுது’ என்று சில எண்ணங்களை அசைபோடுவார்கள்.
அதனை ஒருமுகப்படுத்தும்விதமாக, சில இளம்பெண்களுக்கு நடுவே நடுத்தர வயதைத் தொட்ட நாயகன் நிற்பது போன்ற விளம்பர ஸ்டில் அமைந்துள்ளது. அதுவே, ‘நாயகனின் மணப்பெண் தேடல்’ இக்கதையின் பிரதானம் என்பதைச் சொல்லிவிடும்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பாணியில் ‘இதுதான் கதை’ என்பது நமக்கு முதலிலேயே தெரிந்துவிடுகிறது. அதன்பின்னும் இப்படத்தைப் பார்க்க மிகசுவாரஸ்யமான திரைக்கதை அமைந்தாக வேண்டும்.
‘ஒரு ஜாதி ஜாதகம்’ அப்படியொரு அனுபவத்தை நமக்குத் தருகிறதா? oru jaathi jathakam movie
’முதிர்கன்னன்’ நிபந்தனைகள்!
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தேற வேண்டுமென்ற கனவைப் பல ஆண்டுகளாக சுமந்து வருகிறார் மாம்பரத்து ஜெயேஷ் (வினீத் சீனிவாசன்). அவரது வயது 38. ’பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்கிற பழமையான கோட்பாடுகளோடு ஜாதி, ஜாதகம், நிறம், அழகு, உயரம், அடக்க குணம் என்று பல நிபந்தனைகளோடு பெண் தேடி வருவதால், அவருக்குப் பிடித்தமானவரை இதுவரை காணாமல் இருக்கிறார்.
சென்னையில் ஒரு ஆங்கில இதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார் ஜெயேஷ். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலசேரி சென்று ‘பெண் பார்க்கச் செல்வது’ அவரது வழக்கமாக இருக்கிறது.
‘கருப்பா இருக்கா’, ‘வேலைக்கு போவேன்னு சொல்றா’, ‘பெண்ணியம் பேசுறா’, ‘எனக்கு மேட்ச்சா இல்ல’ என்று விதவிதமான காரணங்களைச் சொல்லிப் பல பெண்களை நிராகரிக்கிறார்.
தந்தைக்கு வயது எழுபதை நெருங்குகிறது. அதன்பிறகு, ‘ஜெயேஷுக்குத் திருமணம் நடப்பது கடினம்’ என்கின்றனர் ஜோதிடர்கள். அதனால், பல பெண்களைத் தொடர்ச்சியாகக் காண்கின்றனர் குடும்பத்தினர். யாரும் அவருக்குப் பிடித்தமானவராக இல்லை.
இந்த நிலையில், அவரைச் சந்திக்கிறார் ஒரு பெண். கைரேகை சாஸ்திரம் தனக்குத் தெரியும் என்று ஜெயேஷின் கையைப் பிடித்து உற்றுநோக்குகிறார். ‘பல அசம்பாவிதங்களுக்கு, அவமானங்களுக்குப் பிறகே உங்களுக்குத் திருமணம் நடக்கும்’ என்று கூறுகிறார். அது, அவரது வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
சில நாட்கள் கழித்து, ஒரு வீட்டுக்குப் பெண் பார்க்கக் குடும்பத்தினருடன் செல்கிறார் ஜெயேஷ். பார்த்தவுடனேயே அப்பெண்ணைப் பிடித்துப் போகிறது. அவரும் சம்மதம் தெரிவிக்கிறார். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
திருமண நாள் நெருங்கும் நிலையில், ஜெயேஷை தனியாகச் சந்திக்க வேண்டுமென்று கூறுகிறார் அப்பெண்.
தனது தோழி ஒருத்தியை நீண்ட நாட்கள் கழித்து பார்த்தபிறகே ‘தான் ஒரு லெஸ்பியன்’ என்று தெரிய வந்ததாகக் கூறுகிறார். ’ஏதாவது ஒரு காரணம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுங்க’ என்கிறார்.

அந்தக் காரணத்தைக் குடும்பத்தினரிடமும் அலுவலக நண்பர்களிடமும் சொன்னால், தனக்கு அது அவமானம் என்று கருதுகிறார் ஜெயேஷ். தன்பாலின ஈர்ப்பு உட்பட ‘இயல்பற்றது’ என்று சமூகம் இதுநாள் வரை கருதிய விஷயங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டபிறகும், பழமைக் கோட்பாடுகள் பக்கம் ஜெயேஷ் நிற்பதே இதற்குக் காரணம்.
இந்த நிலையில், ஜெயேஷ் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்ற தகவல் அலுவலகத்திலும், பிறகு அவரது சொந்த ஊரிலும் தீயாகப் பரவுகிறது. ஒருகட்டத்தில், தனது பாலியல் தன்மை குறித்து அவரே சந்தேகம் கொள்கிற அளவுக்கு நிலைமையை மோசமாக்குகிறது.
அதன்பின் என்னவானது? நாற்பதைத் தொடவிருக்கிற அந்த முதிர்கன்னனின் கல்யாணக் கனவு நிறைவேறியதா என்று சொல்கிறது ‘ஒரு ஜாதி ஜாதகம்’ படத்தின் மீதி.
அதகளப்படுத்தும் வீனித் சீனிவாசன்!
’இது தான் சரி’ என்று அனைவரும் ஒன்றைச் சொல்ல, ‘முயலுக்கு மூணு கால்’ என்று உரக்கச் சொல்பவர் எப்படிப்பட்டவராக இருப்பார். கிட்டத்தட்ட அப்படியொரு பாத்திரத்தில் தோன்றி நமது வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் வினீத் சீனிவாசன். படத்தின் பெரும்பகுதி அவரை மட்டுமே ‘போகஸ்’ செய்கிறது. அதற்கேற்ப அவரும் அதகளப்படுத்தியிருக்கிறார்.
வினீத்தின் தந்தையாக வரும் பி.பி.குஞ்சிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நண்பனாக வரும் ம்ருதுல், அலுவலக நண்பனாகத் தோன்றியிருக்கிற அமல் தாஹா, நிறுவன உரிமையாளராக வரும் பாபு ஆண்டனி, திவாகரன் விஷ்ணுமங்கலம் உட்படச் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நடிகர்கள் இதில் வந்து போயிருக்கின்றனர். மேற்சொன்னவர்கள் அதில் மனதில் நிற்கும் ‘பெர்பார்மன்ஸை’ தந்திருக்கின்றனர்.
இப்படத்தில் நாயகி என்று ஒரு நடிகையைக் கைகாட்டுவது கடினம். காரணம், சுமார் ஒரு டஜன் பெண்களாவது இதில் பெண் பார்க்கும் படல காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர்.
’புதிதல்ல’ என்றாலும், திரைக்கதையில் திருப்பத்தை உண்டுபண்ணுகிற பாத்திரத்தில் நிகிலா விமல் நடித்திருக்கிறார்.
மேலும் காயாடு லோஹர், இஷா தல்வார், சிப்பி தேவஸி, வர்ஷா ரமேஷ், ‘கனா காணும் காலங்கள்’ ஹரிதா, ஷான் ரோமி, ஐஸ்வர்யா மிதுன் உட்படப் பல பெண் முகங்கள் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
நாயகன் நிராகரித்த பெண்களில் ஒருவராக வரும் இந்து தம்பி, நாயகனின் தாயாக வரும் ரெஜிதா, சகோதரியாக வரும் பூஜா மோகன்ராஜ், மேட்ரிமோனியல் நிறுவனத்தைச் சேர்ந்தவராக வரும் சயனோரா பிலிப் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
பொதுவாக, இப்படியொரு கதையைச் சினிமாத்தனத்துடன் அணுகி, நடித்தவர்கள் மீதும் கேமிரா மீதும் ஒப்பனையை அள்ளிப் பூசுவதே நம்மவர்களின் வழக்கம்.

எழுத்தாக்கம் செய்த ராகேஷ் மண்டோடி மற்றும் ஷரேஷ் மலையன்கண்டி மற்றும் இயக்குனர் எம்.மோகனன் அதனைப் புறந்தள்ளிவிட்டு, லேசாக ‘யதார்த்த சாயல்’ தெரியும் வகையிலான திரைக்கதை ட்ரீட்மெண்டை கையில் எடுத்திருக்கின்றனர். அதேநேரத்தில், ‘துணுக்கு தோரணங்களையும்’ திரைக்கதையில் வாரியிறைத்திருக்கின்றனர். இப்படத்தின் யுஎஸ்பி அதுவே.
ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒடுக்கத்தில், படத்தொகுப்பாளர் ரஞ்சன் ஆபிரகாம், தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜோசப் நெல்லிக்கல், டிஐ, விஎஃப்எக்ஸ் உட்பட இதர தொழில்நுட்பங்களைக் கையாண்ட கலைஞர்கள் என்று பலரும் அந்த பார்வைக்கோணங்களுக்கு ‘ஒத்திசைவான’ உழைப்பைத் தந்திருக்கின்றனர்.
குணா பாலசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் கேட்டவுடனே மனதில் இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. நகைச்சுவையை நிறைத்திருக்கும் காட்சிகளுக்கு ஏற்பப் பின்னணி இசை அமைத்திருப்பதால், திரைக்கதை வேகமாக நகரும் உணர்வு ஏற்படுகிறது.
இந்தப் படத்தில் குறைகளைத் தேடினால் நிறையவே கண்டுபிடிக்க முடியும். தன்பாலின ஈர்ப்பாளர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கிற விஷயங்களை வசனங்களில் இடம்பெறச் செய்திருப்பது அதிலொன்று.
என்னதான் அதனைப் பூசி மெழுகும்விதமாகச் சில சமாளிப்புகளைச் செய்திருந்தாலும், நாயக பாத்திரமான ஜெயேஷின் மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே தரையில் விழுந்து புரண்டு சிரிக்க முடியும். அந்த ஒரு விஷயம் நிச்சயம் பலரது எதிர்ப்பைச் சம்பாதிக்கவல்லது.
அதனைப் புறந்தள்ளிவிட்டால், வழக்கமான பாணி கமர்ஷியல் பட போர்வையில் சில வித்தியாசமான பார்வைகளை முன்வைக்கிற படைப்பாகவும் ‘ஒரு ஜாதி ஜாதக’த்தைக் காணலாம். அதில் மட்டுமே ‘போகஸ்’ செய்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும்! oru jaathi jathakam movie