அணுகுண்டு கண்டுபிடித்தவரின் வாழ்க்கை!
பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியதற்குப் பழி வாங்கும் வகையில் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா. அதன் விளைவாக எத்தனை லட்சம் பேர் மடிந்தார்கள்? அதன் பின்விளைவுகள் என்ன என்பது போன்ற கேள்விகளே அணு ஆயுதங்கள் இந்த பூமியில் இருந்து ஒழிக்கப்பட வேண்டுமென்ற கூக்குரல்கள் தொடர்ந்து ஒலிக்கக் காரணமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குரல், அந்த அணுகுண்டைக் கண்டுபிடிக்கக் காரணமானவரிடம் இருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்கும்? அதைப் பேசுகிறது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஓபன்ஹெய்மர்’.
யார் இந்த ஓபன்ஹெய்மர்?
ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த டாக்டர் ஓபன்ஹெய்மர், குவாண்டம் இயற்பியலில் ஜித்தனாக விளங்குகிறார். மன்ஹாட்டன் திட்டம் எனப்படும் அணுகுண்டு தயாரிப்பு சோதனையின் தலைமைப் பொறுப்புக்கு அவரைத் தேர்ந்தெடுக்கிறது அமெரிக்க அரசு. அதையடுத்து, அவர் வேகவேகமாக அதனைச் செயல்படுத்தும் திட்டங்களை வகுத்துச் செயலாற்றுகிறார். ஓபன்ஹெய்மர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்ற முத்திரை இருப்பதன் காரணமாக, அவரைக் கண்காணிக்கும் வேலைகளும் அதற்கிணையாக நடக்கின்றன. அது பின்னரே தெரிய வருகிறது.
தன்னைப் போன்ற பிற இயற்பியல் நிபுணர்களின் பலத்தை அறிந்து, அவர்களை மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்க்கிறார் ஓபன்ஹெய்மர். அதற்காக, லாஸ் அலோமோஸ் எனுமிடத்தில் ஒரு நகரமே உருவாக்கப்படுகிறது. அங்கு நடத்தப்படும் தொடர் ஆய்வுகளின் முடிவில் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்படுகிறது; அதனை ஜப்பானுக்கு எதிரான போரில் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அதனால் மனிதர்கள் சந்திக்கும் விளைவுகளை அறிந்தபிறகு, மனம் வருந்துகிறார் ஓபன்ஹெய்மர்.
இனிமேல் அணுகுண்டை உலகில் வேறெங்கும் பயன்படுத்தக் கூடாது எனுமளவுக்கு அவரது சிந்தனையே மாறுகிறது. அதுவே, ஏற்கனவே அவரிடம் இருந்த இடதுசாரி சிந்தனைகளின் மீதான இணக்கத்தை, பொதுவுடைமை இயக்கங்களுக்குச் செய்த நிதியுதவியை, அது சார்ந்தியங்கும் அவரது நண்பர்களின் வாழ்வைக் கேள்விக்குட்படுத்துகிறது. அணுகுண்டு ரகசியங்களை வெளிநாட்டுக்குக் கடத்திய துரோகி என்ற அவப்பெயரும் வந்து சேர்கிறது. அந்த களங்கத்தை எவ்வாறு ஓபன்ஹெய்மர் துடைத்தெறிந்தார் என்று சொல்கிறது இத்திரைப்படம்.
அணுகுண்டு சோதனை நிகழ்ந்த இடம் எப்படியிருந்தது என்பதைக் காட்டுவதில் இருந்து தொடங்குகிறது திரைக்கதை. அதன்பிறகு ஓபன்ஹெய்மர் மீதான விசாரணைகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, இயற்பியல் ஈடுபாடு என்று பலவாறாக நகரும் காட்சிகள் ‘நான் லீனியர்’ முறையில் திரையில் அடுத்தடுத்து வந்து போகின்றன. அந்த காட்சியனுபவத்தின் வழியே ஓபன்ஹெய்மரின் ஒட்டுமொத்த வாழ்வும் எப்படிப்பட்டது என்பதற்கான பதிலைத் தருகிறார் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.
ஒரே பேச்சு சத்தம்..!
கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்றால் ஆக்ஷன், சென்டிமெண்ட், மெலிதான அவல நகைச்சுவையைத் தாண்டி சில பாத்திரங்களை ஒன்றாகப் பிணைக்கிற வாழ்க்கை வேறொரு உலகமாகத் திரையில் விரியும். ஓபன்ஹெய்மரும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இயற்பியல் கோட்பாடுகள், அணுகுண்டு தயாரிப்பு உத்திகள், அதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் காட்சிகளாகும்போது நம்மையும் அறியாமல் கொட்டாவி இடைவிடாமல் வரத் தொடங்குகிறது.
ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட காட்சிகளோ, அதன் விளைவுகளோ, அவை சம்பந்தப்பட்ட ஆவணக் காட்சிகளோ இப்படத்தில் இடம்பெறவில்லை. முழுக்க முழுக்க ஓபன்ஹெய்மர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் பார்வையிலேயே காட்சிகள் நகர்கின்றன. அது சிலருக்கு அலுப்பைத் தரலாம்.
பொதுவாகவே, நோலன் படங்களில் விஎஃப்எக்ஸ் அதிகம் இராது. பெரும்பாலும் உண்மையான இடங்களில் அல்லது செட்களில்தான் படப்பிடிப்பை நடத்துவார். அந்த வகையில், அணுகுண்டு சோதனையைக் கண்ணில் காட்டுவதற்கும், மிகச்சில இடங்களில் அவை சம்பந்தப்பட்ட ‘மாண்டேஜ்’களுக்காகவும் குறைந்த அளவில் விஎஃப்எக்ஸை பயன்படுத்தியிருக்கிறார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் ஓடுகிறது. அதில் 95% வசனங்களே நிறைந்திருக்கின்றன. அந்த வார்த்தைக் குவியல்களின் ஊடே, இறுதிக் காட்சியில் தான் சொல்ல வந்த கருத்தை முன்வைக்கிறார் இயக்குனர் நோலன். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பினால் எதிர்காலத்தில் நிகழும் கேடுகளுக்குச் சம்பந்தப்பட்ட விஞ்ஞானி அல்லது அறிஞர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதே அக்கருத்து. அதனை ‘ஓபன்ஹெய்மரின்’ சுயசரிதையாகத் திரையில் விவரித்திருக்கிறார் நோலன்.
நோலனின் முந்தைய படங்களான ‘பிரெஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘டெனட்’ போன்ற படங்களை ரசித்தவர்களுக்கு இப்படம் தரும் காட்சியனுபவம் ‘சுமார்’ ரகமாகவே இருக்கும். அதனால், ஒரு நல்ல கமர்ஷியல் படம் பார்க்க ஆசைப்பட்டவர்களுக்கு இதில் அவர் ‘அல்வா’ தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கலவையான அனுபவம்!
ஹாலிவுட்டின் பிரபலங்களான மேட் டாமன், ராபர்ட் டௌனி ஜூனியர், ஜோஷ் ஹார்னெட், கேஸி அஃப்ளெக், ராமி மாலிக், டைலன் ஆர்னால்டு மற்றும் ஓபன்ஹெய்மரின் காதலியாக நடித்துள்ள ப்ளோரன்ஸ் புஹ் உட்படப் பல பெருந்தலைகள் இப்படத்தில் நம்மைக் கவர்கின்றனர்.
இந்த படத்தில் கிட்டத்தட்ட எண்பத்தைந்து சதவீதக் காட்சிகள் ஓபன்ஹெய்மர் ஆக வரும் சிலியன் மர்பியைச் சுற்றியே நகர்கின்றன. பெரிதாகத் தோற்ற மாறுபாடுகள் இல்லாதபோதும், ஒரு மனிதரின் வெவ்வேறு காலகட்ட நிகழ்வுகளைத் திரையில் பிரதிபலிக்க முயற்சித்திருக்கிறார் மர்பி. அவரது தோற்றமும் ஒப்பனையும் சேர்ந்து நிஜமாகவே ஓபன்ஹெய்மரை பார்த்த அனுபவத்தைத் தருகின்றன.
ஓபன்ஹெய்மரின் மனைவி கேத்தரீன் ஆக வரும் எமிலி ப்ளண்ட், கிளைமேக்ஸ் காட்சிகளில் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளுகிறார்.
ஒளிப்பதிவாளர் ஹொய்டே வான் ஹொய்டெமா, படத்தொகுப்பாளர் ஜெனிபர் லேம் மற்றும் இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ரூத் டி ஜோங் ஆகியோரின் கூட்டுழைப்பில் ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் வாழ்க்கை தனி உலகமாகத் திரையில் விரிகிறது. ஆனால், இந்தப் படம் தரும் காட்சியனுபவம் அறிவுஜீவிகளுக்கும் தீவிர சினிமா ரசிகர்களுக்கும் மட்டுமே பிடிக்கும்; அதுதான் ‘ஓபன்ஹெய்மர்’ படத்தின் ஆகப்பெரிய பிரச்சனை.
அதேநேரத்தில், நோலனின் முத்திரையை எதிர்பார்க்கும் ரசிகர்களை இப்படம் ஏமாற்றாது. சிறு அறைக்குள் இரண்டு பாத்திரங்கள் பேசிக்கொண்டே நகரும்போது, அவர்களின் எதிரே பிரமாண்டமான மைதானமோ அல்லது மாபெரும் வெளியோ திரையை நிறைக்கும் ‘ஷாட்கள்’ நோலனின் படங்களில் நிச்சயம் இருக்கும். இதிலும் அப்படியொரு ஷாட் வந்து போகிறது. குண்டு வெடிப்பின்போது திரையில் வெளிச்சப் பிழம்பு தெரிந்தாலும், சில நொடிகளுக்குப் பிறகே அந்த சத்தம் நம்மை வந்தடையும்; இடி மின்னலுடன் மழையின் உணர்ந்த அனுபவத்தை, அப்படியே வேறொரு வகையில் நமக்கு நோலன் உணர்த்தியிருப்பது கவிதையனுபவம். அந்த வகையில், ஒலியைப் பயன்படுத்தி ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்க முயன்ற தருணங்கள் ‘வாவ்’ ரகம். அதற்காக, பல மணி நேரம் திரையை வெறித்துப் பார்க்க வேண்டியிருப்பது கண்டிப்பாக அயர்ச்சி கொள்ளச் செய்யும்.
லுட்விக்கின் பின்னணி இசை தனியாக வெளியாகி, ரசிகர்களைக் கொண்டாட வைக்கும்; நாம் சேர்த்து வைக்கும் இசைத்தொகுப்புகளில் ஒன்றாக இடம்பெறும். அந்த அளவுக்கு அது அலாதியான அனுபவத்தைத் தருகிறது. மற்றபடி, வழக்கமாக நோலன் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இதற்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே!