”ஊ சொல்றியா… ஊஹூம் சொல்றியா பாடல் போன்று எனக்கு யாராவது நல்ல பாடல் கொடுத்தால் நானும் நன்றாகப் பாடுவேன்” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’.
இந்தப் படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் அனைத்து மொழிகளிலும், குறிப்பாக தமிழில் மிகவும் பிரபலம் அடைந்தது.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து நடிகை ஆண்ட்ரியா பாடிய இப்பாடல் இணையத்தில் ஹிட் அடித்ததுடன், இந்த பாடலுக்கு சிறுவர் தொடங்கி, பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டனர்.
தவிர, ‘ஊ சொல்றியா மாமா” பாடல் யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 27) தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஊ சொல்றியா… ஊஹூம் சொல்றியா பாடல் போன்று எனக்கு யாராவது நல்ல பாடல் கொடுத்தால் நானும் நன்றாகப் பாடிக் கொடுப்பேன்.
என் பாடலுக்கும் ஆதரவு கிடைக்கும். ஆனால் வைரல் ஹிட் ஆவது என்பது உடனே நடக்காது. கொஞ்சம் காலதாமதம் ஆகும்.
’ஊ சொல்றியா’ பாடலை கொடுத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
தற்போது பிசாசு 2 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிசாசு படம் அருமையாக வந்திருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
ஆண்ட்ரியா நிர்வாணக் காட்சிகள் நீக்கம்: மிஷ்கின்