இந்திய மாநிலங்களில் அரசியலையும், சினிமாவையும் பிரித்து பார்க்க கூடிய மக்கள் கேரள மக்கள்.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் இம்மாநிலத்தில் அம்மதத்தை வைத்து மூட நம்பிக்கைகளை பரப்புகின்றவர்களை பற்றி விமர்சித்து படமெடுக்க முடியும்.
அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சனம் செய்து படமெடுக்க முடியும். அதனை கலையாக பார்த்து பாராட்டுவதும் விமர்சனம் செய்வதும் இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது.
அதேபோன்று சினிமாவையும் அரசியலையும் இணைத்து பார்த்து வாக்களிப்பதும் இல்லை. மலையாள சினிமாவின் பெருமைமிகு கலைஞராக அனைத்து தரப்பு மக்களாலும் போற்றி மதிக்கப்பட கூடிய நடிகர் மம்மூட்டிக்கு எதிராக வலதுசாரிகளால் பரப்பப்பட்டு வரும் சாதி, மத துவேசத்துக்கு எதிராக கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும், எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரசும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வரலாறு படைத்துள்ளனர்.
மலையாள மொழியில் 2022 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் ‘புழு’ (Puzhu). அறிமுக இயக்குநர் ரதீனா இப்படத்தை இயக்கியிருந்தார்.
படத்தில் ஆதிக்க ஜாதி மனப்பான்மை கொண்ட பிராமணராக மம்மூட்டி நடித்திருந்தார். அவரது தங்கையான பார்வதி தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த வரை காதல் திருமணம் செய்துகொள்வார்.
தங்கை மீதான பாசத்தை துறக்க முடியாமலும் அதே நேரம் ஆதிக்கசாதி மனநிலையில் இருந்து விடுபட முடியாத கதாபாத்திரம் கொண்டவராக மம்மூட்டி நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் சாதி மனோநிலை மேலோங்க தங்கை கணவரை மம்மூட்டி கொலை செய்துவிடுவார்.
சமத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனிதரை பற்றிய படம் இது. தற்போது இஸ்லாமியரான மம்மூட்டி பிராமணர்களையும், இந்துமதத்தையும் அவமதித்து விட்டதாக மம்மூட்டியின் அசல் பெயரான ‘முகமது குட்டி’ என்ற பெயரை குறிப்பிட்டு, ‘இஸ்லாமியரான மம்மூட்டி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்திவிட்டார்’ என சிலர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை எழுப்பி விமர்சித்தனர்.
இரண்டு வருடத்துக்கு முன் வெளியான படத்தை வைத்து தற்போது இந்த பிரச்சினை வெடித்துள்ளது. இந்த வலசாரி கருத்துருவாக்கத்துக்கும், மம்மூட்டிக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் எதிராக சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள், விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில்கேரள மாநில பொதுக்கல்வி, தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் சிவன் குட்டி தனது முகநூல் பக்கத்தில் மம்மூட்டியின் படத்தை பகிர்ந்து, மம்மூட்டி மலையாளிகளின் பெருமை என தெரிவித்துள்ளார்.
கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன், மம்மூட்டி கேரளா மற்றும் மலையாளிகளின் பெருமை. மம்மூட்டியை முகமது குட்டி என்றும், கமலை கமாலுதீன் என்றும், விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கும் அரசியல் இங்கு வேலைக்கு ஆகாது. இது கேரளம்” என பதிவிட்டுள்ளார்.
மதச்சார்பற்ற சமூகம் இதுபோன்ற பிரச்சாரத்தை ஆதரிக்காது. தெளிவான அரசியல் பார்வையும், நடிப்புத் திறமையும் கொண்ட ஒருவரை முத்திரை குத்த அவர்கள் எவ்வளவு முயன்றாலும், மாநில மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என இந்திய தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக எதிரெதிர் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் மலையாள சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞனுக்கு ஆதரவாக ஒன்றினைந்து குரல் கொடுப்பது சினிமாவை நேசிக்கும் கேரள மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
– இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெலங்கானாவில் திரையரங்குகள் மூடல் ஏன்?
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
யுவன் தயாரிக்கும் புதிய படம்… மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி?
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!