சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த அல்லு அர்ஜூன் ஹைதராபாத்திலுள்ள சந்தியா தியேட்டருக்கு சென்றார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்து போனார். இதனால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் , பிணையில் விடுவிக்கப்பட்டார்.
புஷ்பா படம் வெளியான நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதால், படத்துக்கு நல்ல விளம்பரம் இலவசமாக கிடைத்துள்ளது. இதனால், வசூல் வழக்கத்தை விட 70 சதவிகிதம் கூடுதலாகியுள்ளது. படம் வெளியான 6 நாட்களில் 1000 கோடியை தாண்டி விட்டது. தற்போது, 1409 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் 1500 கோடியை வசூலித்து விடுமென்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைதராபாத் போலீசார் மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுவதாவது, புஷ்பா 2 படத்தை பார்க்க அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் வருவதாக கூறி சந்தியா தியேட்டர் நிர்வாகம் பாதுகாப்பு கொடுக்கும்படி சிக்கடப்பள்ளி துணை கமிஷனரை அணுகியுள்ளனர். அப்போது, உங்கள் தியேட்டர் குறுகலான இடத்தில் உள்ளது. அல்லு அர்ஜூன் வந்தால் முறையான பாதுகாப்பு தர முடியாது. எனவே, அவரை படம் பார்க்க வர வேண்டாமென்று அறிவுறுத்துங்கள் என்று பதிலுக்கு கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையையும் மீறி அல்லு அர்ஜூன் வந்ததால்தான், கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் பாதுகாவலர்களும் ரசிகர்களை தள்ளியுள்ளனர்.
இதுவும் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தது. தியேட்டரில் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் 2 மணி நேரத்துக்கு மேல் இருந்துள்ளனர்.
வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அந்த 2 மணி நேரமும் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் படாத பாடு பட்டுள்ளனர். அல்லு அர்ஜூனின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என்கின்றனர். எனவே, அவரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைதராபாத் போலீசார் விரைவில் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ரஷ்ய அணுஆயுத பிரிவு தலைவர் குண்டு வைத்து கொலை; மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய உக்கிரம்!
கள்ளச்சாராய மரண வழக்கு : சிபிஐ விசாரிப்பதில் என்ன தவறு? உச்ச நீதிமன்றம் கேள்வி!