வானத்தில் இருந்து குதித்து வந்தேனா? – இளையராஜா வரிகளையே மாற்றிய கவிஞர் வாசன்!

சினிமா

இசைஞானி இளையராஜாவிடம் பாடல் எழுத ஆசைப்படும் பல கவிஞர்களுக்கு இடையே, அவருடைய வரியையே மாற்றி எழுதிய அற்புத கவிஞர் வாசன்.

தமிழ்த் திரையுலகம் எத்தனையோ கவிஞர்களையும், கலைஞர்களையும் வாழவைத்திருக்கிறது. அதில் ஒருவர் புஞ்சையும் நஞ்சையும் விளைந்த தஞ்சையைச் சேர்ந்த கவிஞர் வாசன். அதிகம் நேசிக்கப்படுபவர்கள்தான் விரைவிலேயே பிரிவைத் தருகிறார்கள் என்பதற்கு உதாரணம் வாசன். பாட்டில் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை இளம்வயதிலேயே நம்மைவிட்டுச் சென்றதைப்போலவே, இந்த வாசனையும் அவருடைய 28வது வயதிலேயே காலன் அழைத்துச் சென்றான்.

அவருடைய மறைவு குறித்து வாலிப கவிஞர் வாலி, “பார்த்ததில்லை வாசனை… ஆனால், அவருடைய பாட்டு வாசனை மூலம் அவரை அறிந்திருக்கிறேன்” என்றார்.
வாசன் திரையில் வாழ்ந்த காலம் கொஞ்ச நாட்களே என்றாலும், சாதித்தது ஏராளம். ஒரே வருடத்தில் அவர் 147 பாடல்களை எழுதி, அவருடன் வலம்வந்த பல பாடலாசிரியர்களையும் ஓரங்கட்டினார். காரணம், வித்தியாசமான வரிகளைப் போட்டு இசையமைப்பாளர்களையும், இயக்குநர்களையும், ரசிகர்களையும் கவர்ந்தவர் அவர்.

உதாரணத்துக்கு, ‘நிலவே நிலவே சரிகமபதநி பாடு’, ‘சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று’, ‘எட்டில் அழகு பதினெட்டில் அழகு’, ‘காஞ்சிப்பட்டு சேலைகட்டி’, ‘முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்ததே’, ‘தொடுவானமாய் உனைப் பார்க்கிறேன்’, ‘கும்பகோணம் சந்தையில் பார்த்தேன்’ எனப் பல பாடல்களைப் பட்டியலிடலாம்.


திரைக்குள் கால்வைக்கும் பலருக்கும் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கும். அது, எல்லோருக்கும் உடனே அமைவதில்லை. கிடைத்தும் தவறவிடுபவர்கள், தவறவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும், அந்த வாய்ப்புக்காக ஏங்குபவர்களும் உண்டு. ஆனால், இந்த விஷயத்தில், வாசனுக்கு உடனே அதிர்ஷ்டம் கிடைத்தது. அதிலும் இளையராஜா எழுதிய வரிகளையே மாற்றிய பெருமைக்குரியர் கவிஞர் வாசன்.


தத்தகாரத்திற்கு பாட்டு எழுதுவாயா?

இதைப் பெருமையுடன் சொல்கிறார், இயக்குநர் மு.களஞ்சியம். இதுகுறித்து அவர், “வாசனை ஒருமுறை நான் இளையராஜாவிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அவர், ‘நீ, கவிதை எல்லாம் நன்றாகத்தான் எழுதுகிறாய். சிறப்பாக இருக்கிறது. தத்தகாரத்திற்கு பாட்டு எழுதுவாயா?’ என வாசனிடம் கேட்டார்.
அப்போது அவருக்கு முன் அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்த வாசன், சட்டென நிமிர்ந்து, ‘எழுதுவேன் ஐயா’ என்றான். அப்போது ஆர்மோனியத்தை எடுத்து இளையராஜா வாசிக்க, அதற்குள் ‘அம்மா’ எனும் வார்த்தையைப் போட்டு பாட ஆரம்பித்தான்.

அவரும் விடாமல் தத்தகாரத்தில் தொடர, இவனும் விடாமல் வரிகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தான். கடைசியில் இளையராஜாவே இவரைக் கண்டு அசந்துபோனார். அவனுக்கும் இளையராஜா மூலம் ஒரு நம்பிக்கை பிறந்தது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒருநாள், ‘பூந்தோட்டம்’ படத்தில் பாடல் எழுதுவதற்காக இளையராஜாவிடம் அழைத்துச் சென்றேன்.

அப்போது படத்தின் காட்சியை இளையராஜா மற்றும் வாசனிடம் விளக்கினேன். ‘தன் அம்மா யாரென்று தெரியாத ஒரு பையன், தன்னுடைய பெற்றோரை தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறான். இதுதான் காட்சியின் சூழல். இந்தக் காட்சிக்கு ஏற்றபடி பாடல் வேண்டும்’ எனச் சொன்னேன்.

அதைக் கேட்ட இளையராஜா, வழக்கம்போல் அந்தச் சூழலுக்கேற்ற இரண்டு வரிகளை அவரே எழுதிக் கொடுத்துவிட்டார். (இந்தப் பாடலுக்கு மட்டுமல்ல, அவர் இசையமைக்கும் எல்லாப் பாடல்களுக்கும் அவர் முதல் இரண்டு அல்லது நான்கு வரிகளை எழுதிவிடுவது வழக்கம்) பெரும்பாலும் அவர் எழுதிக் கொடுக்கும் வரிகள் காட்சிக்கு ஏற்ப இருப்பதால் இயக்குநருக்கும் பாடலாசிரியருக்கும் பிடித்துவிடும். அதனால், அதை யாரும் மாற்றமாட்டார்கள்.

வியந்துபோன இளையராஜா!

ஆனால் இதற்கு நேர்மாறானவன் வாசன். இளையராஜா எழுதிய வரிகளையே இந்தப் பாடலில் மாற்றி எழுதிக்கொடுத்தான். பூந்தோட்டம் படத்தில், ‘வானத்தில் இருந்து குதித்து வந்தேனா? பூமியில் இருந்து வெடித்து வந்தேனா?’ என வாசன் எழுதிய வரிகளைப் பார்த்து இளையராஜாவே வியந்துபோனார். அத்துடன், அந்தப் பாடலில் அவன் மாற்றிய வரிகளையும் அங்கீகரித்து அவனைப் பாராட்டினார், இளையராஜா.
பிறகு இளையராஜா என்னிடம், ‘நான் போட்ட வரிகள் எதையும் வைக்கக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு இவன், வந்திருக்கிறான். என்ன தைரியம் பாருய்யா இவனுக்கு?” என்கிறார், இயக்குநர் மு.களஞ்சியம்.

தன்னுடைய படங்களில் பல பாடல்களை எழுதியிருக்கும் வாசனை, “இடைவிடாது பெய்யும் அடைமழைபோல வாசனிடம் கற்பனை என்பது கொட்டிக்கிடக்கும். அவன், 24 மணிநேரமும் கவிதையின் வாசனையாக வாழ்ந்தவன்” என்கிறார், மு.களஞ்சியம்.

பூமியில் காலம்நேரம் பார்க்காமல் கவிதை வாசனையுடன் வந்த கவிஞர் வாசனை தான், காலன் சொர்க்கத்தில் இன்று கவி வாசனை தருவதற்காக கவர்ந்து சென்றிருக்கிறான் போல.

ஆயினும் என்ன, பாடல்கள் மூலம் வாசனின் வாசனை காற்றில் வீசிக் கொண்டே இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது: ஆகஸ்ட் 31-ல் ரிலீஸ்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.