‘நான் அளவோடு ரசிப்பவன்’ – எம்.ஜி.ஆர். படத்தில் வாலிக்கு வரி எடுத்துக்கொடுத்த கலைஞர்!

சினிமா

வார்த்தைகளில் விளையாடக்கூடிய வாலிப கவிஞர் வாலிக்கே, திரைப்படப் பாடல் ஒன்றில் கலைஞர் வரி எடுத்துக்கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இந்த தலைமுறைக்கும் பாட்டெழுதி இளைஞர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் வாலிப கவிஞர் வாலி. அவர், இன்று நம்முடன் இல்லையென்றாலும், அவர் எழுதிய வரிகள் அனைத்தும் நம்மைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமா மாற்றம் பெறும்போதும் அந்த காலத்தின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மெருகேற்றம் செய்துகொண்டவர் வாலி. அதனால்தான் அவரால் அன்றைய கால இசையமைப்பாளர்கள் தொட்டு இன்றைய இசையமைப்பாளர்கள் வரை பாட்டு எழுதி சாதனை படைக்க முடிந்தது.

இன்னும் சொல்லப்போனால், ஒரு‌‌ மனிதன் ஒரு துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாலிபனாகவே வாழ்ந்து மறைந்தார் என்றால், அது வாலியாகத்தான் மட்டும் இருக்க முடியும். “கண்ணதாசனுக்கு அடுத்து மெட்டு அமைத்த சில நொடிகளிலேயே பாடல் வரிகளைத் தருவதில் கவிஞர் வாலியைத் தவிர வேறு யாரும் கிடையாது” என இசைஞானி இளையராஜாவே அவருக்கு புகழுரை வழங்கியிருக்கிறார்.

இரட்டை அர்த்த பாடல்கள்!
“இரட்டை அர்த்தத்தில் பாடல்கள் எழுதுகிறீர்களே” என்று ஒருமுறை வாலியிடம் கேட்டதற்கு, “நான் துட்டுக்கு பாட்டு எழுதறேன். இங்கே டைரக்டர், மியூசிக் டைரக்டர் திருப்திக்குதான் நான் எழுத முடியும். இங்கு போய் என்னுடைய சொந்த கருத்தினை திணிக்க முடியாது. இது ஒரு கூட்டு முயற்சி. படத்தின் வெற்றிதான் முக்கியம்” எனப் பதிலளித்திருந்தார். அதுமட்டுமின்றி, கவிஞர் கண்ணதாசன் முதல் கவிஞர் நா.முத்துக்குமார் வரை யாரையும் எதிரியாக நினைக்காமல், எல்லோரையும் கவிஞராக நினைத்துப் பாராட்டியதால்தான் இவ்வளவு காலம் அவரால் திரையுலகில் நிலைத்து நிற்க முடிந்தது.

இந்த நிலையில், அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘எங்கள் தங்கம்’ படத்துக்கு பாடல் எழுதிய சுவாரஸ்யம் குறித்து அறிவோம். எங்கள் தங்கம் படத்திற்காக இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கிருஷ்ணன் பஞ்சு, வாலி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் மியூசிக் கம்போசிங்கிற்காக அறையில் கூடியிருந்தனர். அப்போது இசையமைப்பாளர் விஸ்வநாதன், ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என மெட்டுப் போட்டு, ‘இதற்கு அடுத்த வரியை எழுதுங்கள்’ என்றார். ஆனால் வாலியோ, அந்த வரிக்கு ஏற்றதுபோல் அடுத்த வரி எழுதாமல் வெற்றிலை பாக்கை மென்றுகொண்டிருந்திருக்கிறார்.

கிருஷ்ணன் பஞ்சு கேள்வி?
அப்போது கிருஷ்ணன் பஞ்சு, ‘என்னய்யா நீங்கள், பாட்டுக்கு அடுத்த வரியைப் போடாமல் வெத்தலை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார். அப்போதும் வாலி அடுத்த வரி எழுதவில்லை. தொடர்ந்து வெற்றிலையே போட்டுக்கொண்டிருந்திருக்கிறார். ஒரு மணிநேரத்துக்கு மேலாகியும் வாலி அடுத்த வரியை எழுதவில்லை. ஆனால், வெற்றிலை பாக்கை தொடர்ந்து போட்டு அவரது கன்னமே வீங்கிவிட்டது. அந்தச் சமயம் பார்த்து, கலைஞர் உள்ளே நுழைந்திருக்கிறார். அப்போது முரசொலி மாறன், வாலியை கலைஞரிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

‘ஆம், வாலியை இதற்குமுன்பே தமக்குத் தெரியும்’ என்ற கலைஞர், ‘என்னய்யா பாட்டு எழுதிவிட்டீரா’ எனக் கேட்டிருக்கிறார். வாலியோ, ‘இல்லை. அடுத்த வரி வரவில்லை. ஒரு மணி நேரமாக யோசிக்கிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். அப்போது விஸ்வநாதனைப் பார்த்து, ‘மெட்டை வாசியுமய்யா’ என கலைஞர் சொல்ல, அவரும் வாசித்திருக்கிறார். அதைக் கேட்டுவிட்டு அடுத்த நொடி, ’எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று எழுதுமய்யா’ என கலைஞர் சொல்லியிருக்கிறார். ஒரு மணி நேரமாகியும் அடுத்த வரி வராமல் தவித்துக்கொண்டிருந்த வாலி, நொடிப்பொழுதில் கலைஞர் எழுதிய இலக்கிய திறமையைக் கண்டு வியந்துபோனார்.

எம்.ஜி.ஆர். முத்தம்!

ஒருவழியாக, அந்தப் படத்துக்கு பாடல் எழுதியாகிவிட்டது. 10 நாட்கள் கழிந்தன. சத்யா ஸ்டூடியாவில் வாலியைச் சந்தித்திருக்கிறார், எம்.ஜி.ஆர். அப்போது வாலியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். அதிக சந்தோஷத்தில் இருந்த எம்.ஜி.ஆரிடம் வாலி, ‘என்னய்யா விசேஷம்? எதுக்குய்யா முத்தம் கொடுக்கிறீர்?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘என்னைப் பார்த்து அளவின்றிக் கொடுப்பவன் என்று எழுதியிருக்கிறீரே? அதற்குத்தான்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வாலி, ’இந்த முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள். இந்த வரியை எழுதியது கலைஞர்தான்’ எனப் பெருந்தன்மையோடு சொன்னாராம் வாலி.

தன்னுடைய பாட்டுக்கு பிறர் கொடுத்த வரியையும் உண்மையை மறைக்காது பெருந்தன்மையோடு சொன்னதால்தான், வாலி இன்றும் பாடல் உலகில் பிதாமகனாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்

மீண்டும் சரிதா: எந்த படத்தில் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *