’’ஓம் வெள்ளிமலை’’ – ஒரு உலக சினிமா!

சில படங்களின் டைட்டில் பார்த்தவுடன், ’இது அந்த மாதிரி படமா இருக்குமோ இந்த மாதிரி படமா இருக்குமோ’ என்ற யோசனையில் தொடங்கி படத்தின் கதை வரை மனதில் சுழன்றாடும். படம் பார்த்து முடிந்ததும், ‘இதுக்கா இப்படியெல்லாம் யோசிச்சோம், உனக்கு இது தேவையா’ என்று வடிவேலு வாய்ஸில் நம்மை நாமே அர்ச்சித்துக் கொள்வோம். மாறாக, சில படங்கள் டைட்டிலை கேட்டவுடன் நம் மனதில் தோன்றும் கதைக்கும் அவை தரும் காட்சியனுபவத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த டைட்டில் தான் சரியான சாய்ஸ் என்று எண்ண வைக்கும். சமீபத்தில் அப்படியொரு எண்ணத்தைத் தோற்றுவித்த படம் ‘ஓம் வெள்ளிமலை’.

பெயரைக் கேட்டவுடன், 80களில் வந்த பக்திப்படமோ என்று யோசிக்கத் தோன்றுகிறதா? அப்படியானால், நீங்கள் கட்டாயம் ’ஓம் வெள்ளிமலை’யைப் பார்த்தேயாக வேண்டும். சரி, படம் பக்தியைப் பேசவில்லை என்றால் இப்படியொரு தலைப்பு எதற்கு?

நாட்டு வைத்திய மகிமை!

’ஓம் வெள்ளிமலை’யின் கதை பிரமாதமான விஷயமில்லை. ஊர் மக்கள் சிறிதும் நம்பிக்கை வைக்காத ஒரு நபர், அவர்களனைவரது உயிரையும் காப்பாற்றும் சூழல் உருவாவதுதான் இப்படத்தின் அடிநாதம்.

கீழ் வெள்ளிமலை கிராமத்தில் அகத்தீஸ்வரன் (சூப்பர்குட் சுப்பிரமணி) எனும் ஒரு நாட்டு வைத்தியர் தன் மகளுடன் (அஞ்சு கிருஷ்ணா) வசித்து வருகிறார். ஊர் மக்கள் அவரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுவதே இல்லை. அவரது தந்தையிடமும் சகோதரரிடமும் வைத்தியம் பார்த்த ஒருவர் மரணமடைந்ததே அதற்குக் காரணம். ஆனால், அந்த நபர் எத்தகைய சூழலில் இறந்தார் என்று எவருக்கும் தெரியாது.

இப்படியொரு பின்னணியைக் கொண்டிருந்தாலும், தந்தை இட்ட கட்டளையால் சொந்த ஊரைச் சேர்ந்த மக்களின் நலனுக்காகவே வாழ்நாள் முழுக்க மருந்துகளைச் சேகரித்து வருகிறார். ஒருநாள் அவரிடம் வைத்தியம் பார்த்த ஒரே ஒரு பெரியவரும் இறந்து போகிறார். இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, அவரது பேரன் சென்னையில் இருந்து ஊர் திரும்புகிறார். சென்னையில் இருந்து கிளம்பும்போதே, அவர் அரிப்பு பிரச்சனையால் அவதிப்படுகிறார். அவரால் அக்கிராமத்தினர் பலரை அந்நோய் தொற்றுகிறது.

அந்த பிரச்சனையால் சென்னையே அவதிப்படுவது, பின்னாட்களில் செய்தியாகிறது. அந்நோய் உயிருக்கே ஆபத்து என்பதை அறிந்தபிறகும் கூட, மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலகம் திணறுகிறது. அப்போது, அகத்தீஸ்வரனை நாடிவருகிறார் அந்த பெரியவரின் பேரன்; சில நாட்களில் அவரது உடல்நலம் சீராகிறது. அது ஊர் மக்களுக்குத் தெரியவரும்போது, தங்களையும் காப்பாற்றுமாறு அவர்கள் மன்றாடுகின்றனர்.

ஆனால், அகத்தீஸ்வரனோ பதில் சொல்லத் தயங்குகிறார். வெள்ளிமலை மீதிருக்கும் மூலிகையைப் பறித்து வந்தால் மட்டுமே அந்நோயைத் தீர்க்க முடியும் என்கிறார். எதற்காக வெள்ளிமலைக்குப் போக வேண்டும் என்று அகத்தீஸ்வரன் சொல்கிறார்? இந்த கேள்விக்கான பதில் தெரியும்போது படம் முடிவடைகிறது.

கதை முழுக்கத் தெரிந்தாலும், இந்த படத்தைப் பார்ப்பதில் பிரச்சனைகள் இராது. காரணம், தெளிந்த நீரோடையின் நகர்வைப் போலப் படம்பிடிக்கப்பட்ட அழகழகான காட்சிகள்தான்.

நாட்டு வைத்தியத்தின் மகிமையை நாம் உணர வேண்டும் என்பதே இயக்குனர் ஓம் விஜய் சொல்ல வரும் சேதி. பார்வையாளர்களை நோக்கிப் பிரச்சாரமாகச் சொல்ல வாய்ப்புகள் இருந்தாலும், அக்கருத்தைக் கதைக்குள் பொதித்து தந்திருப்பது அருமை.

ஏன் பார்க்க வேண்டும்?

‘ஓம் வெள்ளிமலை’யின் நாயகனாகப் படம் முழுக்க வருகிறார் சூப்பர்குட் சுப்பிரமணி. இதுவரை துண்டு துக்கடா பாத்திரங்களில் நடித்தவருக்குப் படம் முழுக்க வளையவரும் வாய்ப்பு; அதற்கேற்ப, சக மனிதர்களின் துன்பங்களைச் சகிக்க முடியாத வைத்தியனாகவே திரையில் உருமாறியிருக்கிறார். சில காட்சிகளில் சுப்பிரமணி நகைச்சுவையை வெளிப்படுத்தியிருப்பது சிரிப்பூட்டினாலும், அது மையக்கதையை விட்டு விலகிப் போக வைக்கிறது.

அவருக்கு அடுத்தபடியாக, இந்த கதையில் பெரும்பகுதியைப் பிடிப்பவர்கள் வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா. நன்கு வளர்ந்த மீசை தாடியுடன் பருத்திவீரன் காலத்து கார்த்தியை நினைவூட்டுகிறார் வீர சுபாஷ்.

அஞ்சுவைப் பார்த்தவுடன், இவர் உண்மையிலேயே மலையடிவார கிராமத்துப் பெண் தானோ என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. ஆனால், அவரது நவநாகரிக போட்டோஷுட்களை கூகுளில் பார்த்தபிறகு இப்படத்திற்காக அவர் எப்படியெல்லாம் உருமாறியிருக்கிறார் என்பது புரிகிறது. நல்ல வாய்ப்புகள் அமைந்தால், இன்னும் பல நல்ல நடிப்பனுபவம் அஞ்சுவிடம் இருந்து கிடைக்கும்.

இவர்கள் மூவரையும் தவிர்த்து படத்தில் ஆறேழு பாத்திரங்கள் வந்து போகின்றன. கிராமத்து மனிதர்கள் என்றளவில் அவர்களில் சிலரது முகங்கள் திரையில் அதிக நேரம் இடம்பெறுகின்றன.

இந்த படத்தின் மாபெரும் சிறப்புகளில் ஒன்று மணி பெருமாளின் ஒளிப்பதிவு. காட்டிலும் மேட்டிலும் சளைக்காமல் ட்ராலியையும் கிரேனையும் கொண்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். சாதாரண காட்சிகளில் கூட கேமிராவின் நகர்வு இருப்பது ’படம் போரடிக்கிறதோ’ என்ற எண்ணத்தை விரட்டியடிக்கிறது.

இன்னொரு சிறப்பு என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் விக்ரம் செல்வாவின் இசை. ஜி.வி.பிரகாஷ் முதல் திண்டுக்கல் லியோனி வரை பாட வைத்திருக்கிறார் ரகுநந்தன். அவையனைத்தும் பாடல் அமைந்த சூழலோடு பொருந்தியிருக்கிறது. அதேபோல, மீண்டும் உதித் நாராயணனை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் இன்னொரு இசையமைப்பாளரான விக்ரம் செல்வா.

ஒவ்வொரு பாடலும் முதல்முறை கேட்டவுடன் மனதோடு ஒட்டிகொள்வது, படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் இனிதாக்கியிருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஏற்றவாறு அமைந்த பின்னணி இசை ஈர்த்தாலும், மலைப்பாங்கான பிரதேசத்தின் மாயஜாலத்தைச் சொல்லும் இடங்களில் அது நம் மனதைத் தொடுகிறது.

சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு, மாயபாண்டியனின் கலை வடிவமைப்பு உட்படப் பல அம்சங்கள் ஒரு மலையடிவார கிராமத்து மக்களின் வாழ்வியலை நேரில் பார்த்த அனுபவத்தைப் பெற உறுதுணையாக இருக்கின்றன.

இவ்வளவையும் தாண்டி, ஏன் இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு, நம் கடந்த காலத்து சிறப்புகளை இந்நாளில் மறந்து போகலாமா என்ற இயக்குனரின் அங்கலாய்ப்பு பதில் சொல்கிறது.

மிக முக்கியமாக, ‘ஒரு அமெச்சூர் முயற்சி’ என்ற எண்ணத்துடன் தியேட்டருக்குள் நுழையும் ரசிகனுக்கு ஆச்சர்யங்களை வாரி வழங்கியிருப்பதே இயக்குனர் ஓம் விஜய்யின் திறமைக்கு அத்தாட்சி.

சரி, படத்தில் குறைகள் இருக்கிறதா?

மிகச்சில காட்சிகள் உப்புச்சப்பில்லாத உணவைப் போல தொடங்கி முடிகின்றன. அவை பெரும்பாலும் மையக் கதாபாத்திரமான வைத்தியரின் மன வருத்தங்களாகவே இருக்கின்றன. ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த நடிகர் நடிகைகள் இடம்பெறாததும் வழக்கமான கமர்ஷியல் சினிமா அம்சங்கள் இல்லாததும் கூட குறைகளாகத் தெரியலாம். ஆனால், அவையே இப்படத்தை ஒரு உலக சினிமாவாகவும் மாற்றியிருக்கின்றன. கலைப்படம் என்ற பெயரில் கதாபாத்திரங்கள் நடந்து வருவதும் போவதும் எச்சில் வழிய வெற்றிலைப்பாக்கை குதப்புவதும் ‘ஓம் வெள்ளிமலை’யில் இல்லை. ஒரு சாதாரண ரசிகன் இருக்கையை விட்டு எழாத அளவுக்கு காட்சிகள் வார்க்கப்பட்டிருக்கின்றன.

உலக சினிமாவா?

எது உலக சினிமா? உள்ளூரில் உள்ள மக்களை, அவர்களது தினசரி வாழ்வை, கலாசாரத்தை, நம்பிக்கைகளை, மரபுகளை, அவை சார்ந்த கருத்து முரண்பாடுகளைத் தற்கால வளர்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டுவதே உலக சினிமா என்றால், அந்த வரையறையை எளிதாகப் பூர்த்தி செய்திருக்கிறது ‘ஓம் வெள்ளிமலை’.

சித்தர்கள் தந்த தமிழ் மரபுகளை, வைத்திய முறைகளைத் தாங்கிப் பிடிக்கிறது இத்திரைப்படம். அதேநேரத்தில், பழமையானது அனைத்துமே மூடத்தனமானது நவீனமானது எல்லாமே சிந்தனைப்பூர்வமானது என்ற எண்ணத்தையும் அடியோடு நொறுக்குகிறது.

தீர்வுகளைத் தரும் பழமையை வெறுத்து ஒதுக்கிவிட்டு என்ன சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வியை நாட்டு வைத்தியத்தின் துணையோடு எழுப்பியிருக்கிறார் இயக்குனர். அதோடு, ஒரு வைத்தியர் என்பவர் நிச்சயம் வணிகர் அல்ல என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். இந்த காரணத்திற்காகவே, இப்படம் புறக்கணிக்கப்படலாம். இப்போதே, மிகச்சில திரையரங்குகளில் மட்டுமே இது வெளியாகியிருக்கிறது.

ஆனால், ‘ஓம் வெள்ளிமலை’யைக் கொண்டாட வேண்டியது உலக சினிமா ரசிகர்களின் கடமை. இது ஒரு மைல்கல் படம் என்று சொன்னால் இப்போது சிலர் சிரிக்கலாம்; காலம் கடந்து அவர்களே கொண்டாடலாம்; ஏன், சிலரது குயுக்திகளால் அப்படிப்பட்ட பேச்சுகளை வேரோடு அழித்தொழிக்கும் முயற்சிகளும் நிகழலாம். வழக்கமாக, ஒரு திரைப்படம் ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டு அதன் வழியே சாதாரண மக்களைச் சென்றடையும்; அதையே உல்டாவாக்கும் முயற்சியை நிச்சயம் ‘ஓம் வெள்ளிமலை’ செய்யும்.

உதய் பாடகலிங்கம்

அக்‌ஷய் குமாருக்கு ‘செல்ஃபி ராஜ்’ வசூல் கொடுத்த ஷாக்!

யோகா செய்யும் போது ஆற்றில் விழுந்த பெண்: வைரல் வீடியோ!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts