புதியதிரைப்படங்கள் வழக்கமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். முன்னணி நடிகர்கள் நடித்து வரும் படங்கள் இந்த வழக்கத்தை பண்டிகை நாட்களில் மட்டுமல்ல மற்ற நாட்களிலும் மாற்றி வருகின்றனர்.
ஜவான்!
தமிழ் சினிமா இயக்குநர்அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. இந்தப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர, தீபிகா படுகோனே, நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி!
2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தப்படத்தில் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படம் மூலம் கவனம் பெற்ற நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். மகேஷ் பாபு.பி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகிறது
தி நன் 2!
‘திநன் 2’ ஹாலிவுட் படத்தின் முதல் பாகம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 2013-ல் ‘தி கான்ஜுரிங்’, 2016-ல் ‘தி கான்ஜுரிங் 2’, 2021-ல் ‘தி கன்ஜூரிங்: தி டெவில் மேட் மீ டூ இட்’ என இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இதன் தொடர்ச்சியாக ‘தி நன் 2’ படம் இன்று வெளியாகிறது. டைசா ஃபார்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இபடத்தை மைக்கேல் சாவ்ஸ் இயக்கியுள்ளார். வழக்கமாக ஆங்கிலப்படங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும்.
தமிழ்க்குடிமகனுக்கு தியேட்டர் இல்லை!
ஷாருக்கான், அனுஷ்கா இருவருக்கும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் இருப்பதுடன் ஜவான் படத்தின் இயக்குநர் அட்லி, நாயகி நயன்தாரா, வில்லனாக விஜய்சேதுபதி, மற்றும் யோகி பாபு, பிரியாமணி என தமிழ் சினிமா முகங்களாக இருப்பதால் ஜவான் படத்திற்கு தமிழ் நாட்டில் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்து, சேரன் நாயகனாக நடித்துள்ள நேரடி தமிழ் படமான ‘தமிழ்க்குடிமகன்’ படத்திற்கு திரையரங்குகள் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை.
அதனை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் குடிமகன் படத்திற்கு குறைவான காட்சிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை X பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சேரன்.
அதில், “தமிழ்க்குடி மகன் நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்.. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது.பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்?
எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சேரன்.
இராமானுஜம்
சனாதன சர்ச்சை – உதயநிதிக்கு ஆதரவு… மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!