நூடுல்ஸ் : விமர்சனம்!

Published On:

| By christopher

நூலிழையில் இழுக்கப்படும் மலை!

பத்திரிகைகளில் ஒரு பக்கக் கதை என்று சில கதைகள் வெளியாகும். மிகச்சில வரிகளில் குறிப்பிட்ட களம், கதாபாத்திரங்களை விவரித்து ஒரு ஆச்சர்யப்படத்தக்க அல்லது அதிர்ச்சிகரமான முடிவுடன் நிறைவடைவது அவற்றுக்கான இலக்கணம்.

சில நேர்த்திமிக்க குறும்படங்கள் அந்த இலக்கணத்தைப் பூர்த்தி செய்யும். சில நேரங்களில், குறிப்பிட்ட வகைமையில் அமைந்த ஆந்தாலஜி திரைப்படங்கள் அதனை நிகழ்த்தும்.

கிட்டத்தட்ட அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது மதன் தட்சிணாமூர்த்தி எழுதி இயக்கியிருக்கிற ‘நூடுல்ஸ்’. இது திரையில் 1.46 மணி நேரம் ஓடுகிறது.

போலீஸ் மீது பயம்!

சரவணன் (ஹரிஷ் உத்தமன்) ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவரது மனைவி சக்தி (ஷீலா ராஜ்குமார்). இவர்களது ஒரே ஒரு மகள் (ஆலியா).

சரவணனும் சக்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். சரவணன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் என்பதால், சக்தியின் பெற்றோர் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. பத்து ஆண்டுகள் ஆனபிறகும் கூட, அவர்களது கோபம் தணிவதாக இல்லை.

சனிக்கிழமைதோறும் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள இரண்டு குடும்பத்தினரோடு சேர்ந்து மொட்டைமாடியில் சாப்பிட்டவாறே அந்தாக்‌ஷரி, டம்ப் சராடு என்று விளையாடுவது சரவணன் குடும்பத்தினரின் வழக்கம்.

ஒரு சனிக்கிழமையன்று, இரவு பதினோரு மணி தாண்டி அவர்களது விளையாட்டும் அரட்டையும் தொடர்கிறது. பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் உறவினர் ஒருவர், அது தொடர்பாக காவல் நிலையத்திற்கு போன் செய்கிறார்.

அதையடுத்து, இன்ஸ்பெக்டர் இளங்கோ (மதன் தட்சிணாமூர்த்தி) ஜீப்பில் அங்கு ரோந்து வருகிறார். தன்னோடு வந்த கான்ஸ்டபிளை அனுப்பி மொட்டை மாடியில் இருப்பவர்களை எச்சரிக்கச் சொல்கிறார்.

மொட்டைமாடிக்குச் சென்ற கான்ஸ்பிள் அங்கிருப்பவர்களை மரியாதை இல்லாமல் பேச, பதிலுக்கு அவர்கள் பேச, பேச்சு நீள்கிறது. அந்த வாக்குவாதம் கண்டு மேலேறிச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோ. அங்கிருப்பவர்களை அடுத்தநாள் காலையில் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறார். ‘இனிமேல் சத்தம் போட மாட்டோம்’ என்று எழுதிக் கொடுக்குமாறு சொல்கிறார். அதற்கு, ‘யாராவது கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா நாங்க வர்றோம்’ என்கிறார் சரவணன். அதனைக் கேட்டதும், கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் இளங்கோ.

நள்ளிரவு நேரத்தில் சக்தியின் உறவினர் ஒருவர் சரவணனைச் சந்திக்கிறார்.  பத்தாண்டுகள் கழித்து முதன்முறையாகச் சக்தியின் பெற்றோர் அவர்களது வீட்டுக்கு வரும் தகவலைச் சொல்கிறார். அது, சக்திக்குத் திடீர் ஆச்சர்யமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் சரவணன்.

காலையில் எழுந்து சரவணன் மளிகைக்கடைக்குச் செல்ல, அவரது மகளும் உடன் கிளம்புகிறார். கடையில் பொருட்கள் வாங்கியவர் பர்ஸ் இல்லாமல் திணற, அவரது மகள் ‘நான் எடுத்து வருகிறேன்’ என்று சைக்கிளில் கிளம்புகிறார். சரவணனின் மொபைல் அவரிடம் இருக்கிறது.

சில நிமிடங்களில் மளிகைக்கடைக்காரர் மொபைல் ஒலிக்கிறது. எதிர்முனையில் இருப்பவர் சக்தி. அவர் சொல்லும் தகவலைக் கேட்டதும் அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறார் சரவணன். அங்கு, ஒரு மர்ம நபர் பேச்சு மூச்சின்றிக் கிடக்கிறார்.  வீட்டு வாசலில் இருந்த மகளிடம் இருந்து மொபைலை பறிக்க முயன்றபோது, அவரைத் தான் தாக்கியதாகச் சொல்கிறார் சக்தி.

முந்தைய நாள் இன்ஸ்பெக்டரிடம் தேவையில்லாமல் பகைத்துக் கொண்டோமோ என்று சரவணன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சம்பவம். என்ன செய்வதென்று தெரியாமல் சரவணன் குடும்பத்தினர் திணற, அடுத்த சில நிமிடங்களில் ஒரு புகாருடன் இன்ஸ்பெக்டர் இளங்கோவும் அதே கான்ஸ்டபிளும் வீட்டு வாசலில் வந்து நிற்கின்றனர்.

அதன்பின் என்ன நடந்தது என்று சொல்கிறது ‘நூடுல்ஸ்’.

இரண்டு நிமிடங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒரு குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் இப்படத்தின் டைட்டிலுக்கான காரணம். மற்றபடி, ‘இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்’ஸுக்கும் இக்கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

’இந்த போலீஸ் வேலையில இருக்குற ஒரேயொரு ஆறுதலே மக்கள் எங்ககிட்ட காட்டுற பயம் தான். அதுவும் இல்லாம போனா என்னாகுறது’ என்று இப்படத்தில் மதன் தட்சிணாமூர்த்தி பேசுவதாக ஒரு வசனம் உண்டு. கிட்டத்தட்ட மொத்த திரைக்கதையும் அதைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது.

திறன்மிகு காட்சியாக்கம்!

ஒரு வீடு, மொட்டை மாடி, தெரு, மளிகைக்கடை என்று அரை டஜன் இடங்களுக்குள் மொத்த படத்தையும் நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி. அவரே, அந்த இன்ஸ்பெக்டர் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

படத்தில் ஒரு டஜன் பாத்திரங்கள் தோன்றியிருந்தால் அதிகம் என்பதே உண்மை நிலை. அப்படியிருந்தும், திரைக்கதையில் நாடகத்தனம் இல்லாமல் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்ற பதைபதைப்பை உண்டு பண்ணியிருக்கிறார்.

படம் தொடங்கி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து திரைக்கதையில் உருவாகும் பதற்றம், கிளைமேக்ஸ் வரை பிரதான பாத்திரங்களிடம் தீர்ந்து போகாமல் இருக்கிறது. அதனைச் சரியாகக் கையாண்டிருப்பதோடு, காட்சியமைப்பில் இருக்கிற ஏற்ற இறக்கங்களையும் திறமையாகக் கைக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் இருவரது நடிப்பும் திரையோடு நம்மை ஒன்றச் செய்கிறது. தொடக்கத்தில் ஹரிஷின் நடிப்பு ‘ஓவர்’ ரகம் போன்று தோன்றினாலும், மெதுவாக அவரும் திரைக்கதை மீட்டருக்குள் புகுந்து கொள்கிறார்.

தனக்கான குளோஸ் அப், மிட் ஷாட்களை உணர்ந்து அபாரமாக பாவனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷீலா. குழந்தை ஆலியாவைக் கொண்டாடும் அளவுக்கு, அவருக்குத் தனியாகக் காட்சிகள் இல்லை.

திருநாவுக்கரசின் இயல்பான நடிப்பும் வசனங்களை உதிர்க்கும் பாங்கும் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது. அதேபோல, இடைவேளைக்குப் பிறகு தலைகாட்டும் வசந்த் மாரிமுத்துவின் நடிப்புக்கு தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.

வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நமக்குக் கடத்துவதையே தனது கடமையாகக் கொண்டிருக்கிறது. திரைக்கதையில் நிறைந்திருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் இம்மி பிசகாமல் திரையில் சொல்லப் பாடுபட்டிருக்கிறது சரத்குமாரின் படத்தொகுப்பு.

ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை, திரைக்கதையின் தொடக்கத்தில் மிக மெதுவாக ஒலித்துப் பின்னர் மெல்ல உயர்கிறது. இடைவேளைக்குப் பிறகு, வசந்த் மாரிமுத்து இடம்பெறும் காட்சிகளில் நகைச்சுவைக்குத் தாவுகிறது. அது, கொஞ்சம் கூட துருத்தலாகத் தெரியவில்லை என்பதே அவரது உழைப்புக்கான வெற்றி.

அறிமுக இயக்குனருக்காகக் களமிறங்கியிருக்கும் மதன் தட்சிணாமூர்த்தி, தனது திறன்மிகு காட்சியாக்கத்தால் படத்தைத் தாங்கியிருக்கிறார். ஒரு நடிகர் என்ற அனுபவத்தைக் கொண்டு, ஒவ்வொரு பாத்திரங்களுக்குமான உணர்வுகளைத் திரையில் காட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறார். இந்தக் கதைக்கு அதுவே முக்கியத் தேவையாகவும் இருக்கிறது.

 

நூலிழையில் வெற்றி!

எடுத்துக்கொண்ட கதைக்கு நேர்மையாக இருந்தாலே, ஒரு திரைக்கதை நிச்சயம் வெற்றியடையும். ’அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறையைக் கையாள்பவது எல்லா நேரமும் செல்லுபடியாகாது’ என்பதையே இதில் சொல்ல முனைந்திருக்கிறார் மதன் தட்சிணாமூர்த்தி.

அதற்கேற்ப, காவல் துறையினர் பொதுமக்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறையைக் காட்சிகளாக அடுக்கியிருக்கிறார். காவல் துறைக்கு மட்டுமல்ல, அதிகாரத்தைப் பாய்ச்சும் எந்தவொரு அமைப்புக்கும் அது பொருந்தும். அதுவே, வெகு இயல்பாகப் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்ற வைக்கிறது. அதனாலேயே, கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தபோதும் நம்மால் ரசிக்க முடிகிறது.

அந்த வகையில், நூலிழையில் மலையைக் கட்டி இழுக்கும் சாதனையைப் படைத்திருக்கிறது இப்படம். இதனைப் பார்க்கும் ஒரு சாதாரண ரசிகர் சரவணனாகவும் சக்தியாகவும் தன்னை உணர்வது நிச்சயம்!

உதய் பாடகலிங்கம்

போலீசார் சம்மன்: ஆஜராக மறுக்கும் சீமான்?

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel