மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, சில நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்தவும் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவுக்கு பூங்குழலி ஐ.பி.எஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு குழுவிடத்தில் நடிகை ஒருவர், நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் , ஜெயசூர்யா, மணியம்பிள்ளை ராஜூ உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அதே வேளையில், அந்த நடிகை தனது உறவினரான 16 வயது இளம் பெண் ஒருவரை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளியதாக மற்றொரு பெண் மூவாத்துப்புழா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நடிகர்கள் மீது புகார் கொடுத்த நடிகை மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில், தான் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கில் அரசு உதவவில்லை என்று அந்த நடிகை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நடிகர்கள் மீது புகார் அளித்ததால் என் மீது திட்டமிட்டு போக்சோ வழக்கு பதிந்துள்ளனர். சம்பவம் சென்னையில் நடந்தது என்றால், அங்கேதானே வழக்கு பதிய வேண்டும்? இந்த பிரச்னையால் பலரும் எனக்கு போன் செய்து விபச்சாரி என்று கூறி கேலி பேசுகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் முதல் பிரதமர் வரை கடிதம் எழுதியும் பயன் கிடக்கவில்லை. இதில், உண்மையை கண்டறிய அரசு உதவவில்லை. நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாரை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். இது தொடர்பாக விசாரணைக்குழுவின் தலைவரான பூங்குழலி ஐ.பி.எஸ் க்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அப்பாவுக்கு சளைக்காத பிள்ளை … மின்னல் வேகத்தில் 200 ரன்களை அடித்த சேவாக் மகன்!