மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி விசாரணை செய்து ஹேமா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து 2018 ஆம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது மீ டு குற்றச்சாட்டுகளை எழுப்பிய நடிகை தனுஸ்ரீ தத்தா பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனுஸ்ரீ தத்தா கூறுகையில், ”ஹேமா கமிட்டியும் அதன் அறிக்கையும் கொஞ்சம் கூட பலன் தராது. 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 7 ஆண்டுகள் கழித்தா அறிக்கை தருவார்கள்? இதற்கு முன்னதாக , பணியிடங்களில் பாலியல் தொல்லையை தடுப்பதற்காக விசாகா கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கமிட்டியும், அறிக்கைகள் மட்டும்தான் மாறுகிறதே தவிர, நிஜத்தில் என்ன மாற்றம் நடந்தது?
2017 ஆம் ஆண்டு மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், நடிகர் திலீப் முக்கிய குற்றவாளி. திலீப்பும், நானா படேகரும் நார்ஸிசிஸ்ட் சைக்கோக்கள். அவர்களை மாற்றவே முடியாது. எனக்கு கமிட்டியிலும் அவர்கள் தரும் அறிக்கையிலும் நம்பிக்கையில்லை. ஆனால், பணியிடங்களில் பெண்கள் நல்லபடியாக வேலை பார்க்க உரிமை உண்டு. பெண்கள் மட்டுமல்ல அனைவருக்குமே அந்த உரிமை இருக்கிறது.
பணியிடங்களில் பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். எங்களை ராணி மாதிரி நடத்துங்கள் என்று உங்களிடம் கேட்கவில்லை. குறைந்தபட்ச மரியாதையாவது தாருங்கள். நடிகைகளும் ஒரு மனிதர்கள்தான் அவர்களுக்குள்ளும் ஒரு மனது இருக்கிறது என்பதை நினைத்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஹேமா அறிக்கை வெளியிட்ட பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன், மலையாள திரையுலகில் பெண்களை பாதுகாக்க விரிவான சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காங்கிரஸ் கட்சியில் சேருகிறாரா வினேஷ் போகத்… வெளியாகும் ரகசியம்!