கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை நித்யாமேனன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கு என்று ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். இவருக்கும் மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த ஆதாரமற்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மலையாள மனோரமா ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள நடிகை நித்யாமேனன், “ஊடகங்களில் என் திருமணம் சம்பந்தமாக வருகின்ற செய்திகள் வெறும் வதந்தியே. இதில் உண்மை இல்லை, இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் உண்மையை சரிபார்க்க ஊடகங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது வேலையில் மட்டுமே தற்போதுநான் முழுக்கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்த 180 படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நித்யாமேனன் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, விஜய்க்கு ஜோடியாக மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் நடிக்கும் மூன்று நாயகிகளில் நித்யாமேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்