தன்னை குறித்து தவறான செய்தி பரப்பியவர்களை நோக்கி, ”இருக்கும் கொஞ்ச காலத்தில் நல்ல மனிதர்களாக இருங்கள்” என நித்யாமேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யாமேனன். அதன்பின்னர் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் எனப் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களால் விரும்பப்படும் நடிகையாக உள்ளார்.
கடைசியாக நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் ஏற்று நடித்த ஷோபனா கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது.
தற்போது வெப் சீரிசிலும் கால் பதித்துள்ள அவர், தெலுங்கில் அவர் நடிப்பில் தயாராகியுள்ள ‘குமரி ஸ்ரீமதி’ என்ற வெப் சீரிஸ் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளிலும் வருகிற 28ஆம் தேதி முதல் ரிலீசாக உள்ளது.
இதனையடுத்து தமிழில் ஜெயம் ரவி மற்றும் இந்தியில் விவேக் ஓபராய் உடனும் ஜோடியாக அவர் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று சமூகவலைதளங்களில், நித்யா மேனன் ஒரு பேட்டியில்,
“தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை, ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன்.
குறிப்பாக தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்” என்று பேசியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.
நித்யா மேனன் மறுப்பு!
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நித்யா மேனன். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“நான் எந்த நிகழ்ச்சியிலும் அப்படி பேட்டி கொடுக்கவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. இந்த வதந்தியை பரப்பியது யார்? தெரிந்தால் பகிரவும்!” என குறிப்பிட்டிருந்தார்.
அவர் தனது மற்றொரு பதிவில் இந்த செய்தியை வெளியிட்ட கணக்கை டேக் செய்து,
“குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கபோகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பதைப் பார்க்கும் போது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எடுத்து கூறினால் தான் இது போன்ற மோசமான நிகழ்வுகள் நிறுத்தப்படும் என்ற நோக்கில் இதை சுட்டிக்காட்டுகிறேன். நல்ல மனிதர்களாக இருங்கள்” என நித்யாமேனன் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா