வீல் சேரில் வந்து திரைப்பட விழாவில் நடிகை நித்யாமேனன் கலந்துகொண்டார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று (ஜூலை 30)நடைபெற்றது. இதில், நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்துகொண்டார். பொதுவாக தாங்கள் நாயகியாக நடிக்கும் பட வெளியீட்டுக்கு நடிகைகள் தற்போது வருவதில்லை. அதே நேரம் பணம் கொடுக்கும் தனியார் தொலைக்காட்சி மற்றும் கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்கின்றனர். இதனை சரி செய்வதற்கான முயற்சிகளைத் திரைப்பட சங்கங்கள் எடுப்பது இல்லை. அதனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தத் தயாரிப்பாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் நடக்க முடியாத நிலையிலும் நித்யா மேனன் வீல் சேரில் திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்ததற்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இது பற்றிப் பேசிய நித்யா மேனன், ‘நீங்க இல்லாமல் எப்படி என தனுஷ் கூறினார். வீல் சேரிலாவது வரவேண்டும் என தனுஷ் வேண்டுகோள் வைத்தார்’ எனவும் கூறி இருக்கிறார்.
சமீபத்தில் படிகட்டில் இருந்து விழுந்ததில் அவருக்கு காலில் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்